சென்னை
சென்னையில் குடிநீர் இருப்பு குறைந்துள்ளதால் குடிநீர் வினியோகம் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் சென்னையில் கனமழை பெய்யும் என வானியல் ஆய்வு நிலையம் மற்றும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர். முன்பு ஏற்பட்டதைப் போல் வெள்ளம் ஏற்படாது எனவும் அதே நேரத்தில் போதிய அளவு மழை பெய்யும் எனவும் அவர்கள் உறுதி அளித்தனர். ஆனால் இந்த வருடம் மிகவும் குறைந்த அளவில் பருவ மழை பெய்தது.
இதனால் சென்னை மக்களுக்கான குடிநீர் ஆதாரங்களின் கொள்ளளவு மிகவும் குறைந்துள்ளது. சென்னைக் குடிநீர் வாரியம் தினமும் 83 கோடி லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்து வந்தது. அதாவது ஒருவருக்கு 140 லிட்டர் வீதம் குடிநீர் வினியோகம் செய்து வந்தது.
கடந்த டிசம்பர் மாதம் இந்த விநியோகம் 65 கோடி லிட்டராக குறைக்கப்பட்டது. தற்போது சென்னையை சுற்றி உள்ள மூன்று நீர் தேக்கங்களிலும் நீர் மேலும் கடுமையாக குறைந்துள்ளது. அத்துடன் ரெட்ஹில்ஸ் ஏரியும் மிகவும் வற்றி உள்ளது. எனவே குடிநீர் வினியோகம் மேலும் குறைக்கப்பட உள்ளது.
இனி நாளொன்றுக்கு 45 முதல் 48 கோடி லிட்டர் குடிநீர் மட்டுமே விநியோகம் செய்யப்பட உள்ளது அதாவது ஒருவருக்கு ஒரு நாளைக்கு 60 லிட்டர் குடிநீர் மட்டுமே வினியோகம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் பஞ்சம் தொடங்கி உள்ள நிலையில் இது மேலும் அதிகரிக்கக் கூடும் என மெட்ரோ வாட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.