1

சீன தலைநகர் பெய்ஜிங்கில், காற்று மிகவும் மாசுபட்டுவிட்டதால், கனடாவில் இருந்து சுத்தமான காற்று குடுவையில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு வந்திருக்கிறது என்ற செய்தியை சமீபத்தில் வெளியிட்டோம். அதே போல ஆகிவிட்டது சென்னை” என்று மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தியின் கருத்தையும் வெளியிட்டோம்.

இப்போது பெய்ஜிங் போலவே, சென்னையிலும் சுத்தமான காற்று விற்பனைக்கு வந்துவிட்டது.

சென்னை, எழும்பூரில், ‘இனவேட்டிவ்’ என்ற தனியார் நிறுவனம், ஆக்ஸிஜன் குடுவைகளை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கிறது. ஒரு குடுவையில், 120 முறை சுவாசிக்கும் அளவிற்கான, 99.6 சதவீதம் தூய்மையான ஆக்ஸிஜன் நிரப்பப்பட்டிருக்கும். இதை எளிதாக எல்லா இடங்களுக்கும் எடுத்து செல்லலாம். விலை 975 ரூபாய்!

ஆச்சரியமாக இருக்கிறதா?

“இப்போதைக்கு இது ஆச்சரியமாகத்தான் இருக்கும். ஆனால் இதுவும் பரவலாக புழக்கத்துக்கு வந்துவிடும். குடிநீர் பாட்டில் விற்பனைக்கு வந்தபோதும் தண்ணீர் விற்பனைக்கா என்றுதான் கேட்டார்கள். இப்போது தண்ணீர் பிஸினஸ்தான் சக்கை போடு போடுகிறது. ஆகவே காற்று விற்பனையும் கனஜோராக நடக்க ஆரம்பித்துவிடும். விரைவில், பலரும் இந்த பிஸினஸில் இறங்குவார்கள். எப்.எம். ரேடியோவில் “வாயு பகவான் பிராண்ட் சுத்தமான காற்றையே வாங்கி சுவாசியுங்கள்” என்று விளம்பரம் வரும் நாள் தூரத்தில் இல்லை!”  என்கிறார்கள் பிஸினஸ் புள்ளிகள்.

அறிவியலாளர்கள் காற்று குறித்து கூறுவது என்ன?

”நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள தூசியை  PM 10 மற்றும் PM 2.5 என்ற அளவுகளாகப் பிரிப்பார்கள்.

PM 10 என்பது  10 மைக்ரான் அளவுள்ள தூசி. இதை சுவாசித்தால் பெரிய அளவில் பிரச்னை ஏதும் ஏற்படாது. இது தொண்டையிலே வடிகட்டப்பட்டு தும்மல், சளி மூலமாக வெளியே வந்துவிடும். நுரையீரல் வரை செல்லாது.

PM 2.5 என்ற மிக நுண்ணிய தூசி நம் நுரையீரலை தாண்டி சென்று இதயத்திற்கு அருகில் இருக்கும் ரத்தக்குழாய்களை பாதிக்கும். இதனால் இருதய நோய் ஏற்படும்.

சென்னையில் கடந்த மாதம் முதல் பெய்த மழையால் சாலைகள் பாதிக்கப்பட்டு சாலைகளில் மண் துகள்கள் குவிந்துள்ளன.  இப்போது டிசம்பர் மாதம் என்பதால் காற்றும் அதிகமாக வீசுகிறது. ஆகவே தூசுப்படலங்கள் கிளம்பி  நிறைய பிரச்னைகளை ஏற்படுத்தும்” என்கிறார்கள்.

என்னவோ போங்க!