சுவாமி விவேகானந்தர் ஆன்மீக தலைவர்களுள் ஒருவராக தலைச்சிறந்து விளங்கியவர். அவர் ராமகிருஷ்ணா பரமஹம்சரின் தலைமை சீடராக திகழ்ந்தவர். மேலும் ‘ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடம்’ மற்றும் ஸ்ரீ ‘ராமகிருஷ்ணா மிஷன்’ போன்ற அமைப்புகளையும் நிறுவியவர். சுவாமி விவேகானந்தர் அவர்கள், ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உதவியற்றோர் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் நலனுக்காகவும், நாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். ஆங்கிலேயர் ஆட்சியில், இருண்டுக் கிடந்த இந்தியாவிற்கு ஒரு கலங்கரை விளக்கமாகவும், இந்தியர்கள் மத்தியில் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக தன்னம்பிக்கை என்னும் விதையையும் விதைத்தார். அவரது ஆணித்தரமான, முத்துப் போன்ற வார்த்தைகளும், பிரமாதமான பேச்சுத்திறனும் உறங்கிக் கொண்டிருந்த  தேசிய உணர்வைத் தூண்டியது. இளைஞர்கள் அவரது பேச்சால் மிகவும் ஈர்க்கப்பட்டனர்.

இந்திய மக்களுக்கு ஆன்மீக ஞானஒளியை புகட்டுவதில் பெரும் பங்கு வகித்து,  வேதாந்தத் தத்துவங்களை மேற்கிந்தியா முழுவதும் பரப்பி, ஏழை எளியோருக்கு சேவை செய்ய வேண்டுமென்ற உன்னத எண்ணங்களோடு செயல்பட்டவர் சுவாமி விவேகானந்தர். இன்று, அவருடைய நினைவு நாள். அவருடைய உயரிய சிந்தனைகளை இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்லி அவர் புகழைப் போற்றுவோம்.

சுவாமி விவேகானந்தர் வாழ் நாளில் சில முக்கியமான காலகட்டங்கள்:

1863: கல்கத்தாவில் ஜனவரி 12, 1863ல் பிறந்தார்.

1879: கல்கத்தாவிலுள்ள பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார்.

1880: கல்கத்தாவிலுள்ள ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் சேர்ந்து தத்துவப் பாடத்தைப் படித்தார்.

1886: ஸ்ரீ ராமகிருஷ்ணரர் அவர்களின் மறைவுக்குப் பின், சுவாமி விவேகானந்தர் அவர்கள், அவரது வாரிசாக பரிந்துரைக்கப்பட்டார்.

1890: இந்தியாவில் நீண்ட சுற்றுப்பயணம்.

1892: கன்னியாகுமாரிக்கு டிசம்பர் 24, 1892ல் சென்றார்.

1893: சிகாகோ உலக மதங்களின் மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்றார்.

1897: இந்தியா திரும்பினார்

1897: “ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன்” என்ற அமைப்பைத் தொடங்கினார்.

1899: ‘ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடத்தை’ நிருவவதற்காக கங்கை நதிக்கரையில் பேலூரில் ஒரு தளம் வாங்கினார்.

1899 – 1900: ஜனவரி 1899 முதல் டிசம்பர் 1900 வரை மேற்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

1902: கல்கத்தா அருகில் பேலூரில் அவரால் நிறுவப்பட்ட ‘ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தில்’ ஜூலை 4, 1902  அன்று தனது 39ஆம் வயதில் மறைந்தார் .