tn gopalan story n

செத்துப்போன பட்டாம்பூச்சிகள் – 1

கானகன்

75 வயது மதிக்கத் தக்க அந்த நபரின் வயிற்றில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சிகள் காணப்பட்டன. போஸ்ட் மார்ட்டம் செய்த டாக்டர்களுக்கு ஒரே ஆச்சரியம். அப்படியே விழுங்கிவிட்டிருந்தாரா? ஏனென்றால் ஒன்று கூட சேதமடைந்திருக்கவில்லை. வெளியில் பார்த்தால் எப்படி இருக்குமோ, அப்படியே, அதே வண்ணங்களுடன், கண்ணை எடுக்கமுடியவில்லையாம், ஒரு பட்டாம்பூச்சியே பார்க்க குதூகலம்தான். அதுவும் ஆயிரம், குவியலாக. வயிற்றிலுருக்கும் மற்றக் கழிவுப் பொருட்களெல்லாம் அந்த அதிசயப் பூச்சிகளைக் கறை படுத்தவே இல்லையாம். லார்வா, ப்யூப்பாவிலிருந்து அப்போதுதான் வெளியே வந்த்தைப் போல. என்ன, சிறகடித்துப் பறக்கவில்லை. அனைத்துமே செத்துக் கிடந்தன. ஆயிரம் என்பதுகூட குத்துமதிப்புதான். யார் எண்ணினார்கள்? கூடவும் இருக்கலாம், குறையவும் இருக்க்லாம். ஆனால் கொத்துக் கொத்தாக, அந்த சிறிய பகுதியில், ஒன்றன் மேல் ஒன்றாக, ஆயிரம் வண்ணங்களில்..விபத்தில் இறந்துபோன நபர் என்பதால் கொண்டு வந்து போடப்பட்ட உடலை பிரேதப் பரிசோதனை செய்த டாக்டர்தான் விஷயத்தை வெளியேவிட்டிருக்கிறார்.

செய்தியைப் படித்த நித்திக்கு வருத்தமாயிருந்த்து. தான் தஞ்சாவூரில் இந்த நேரத்தில் இல்லையே என்று…பட்டாம்பூச்சிகளைப் பார்த்த எவராவது கவிஞராயிருந்திருந்தால்….எப்ப்டிப்பட்ட கவிதை கிடைத்திருக்கும்? குறைந்தபட்சம் இதற்குப்பின்னால் நிச்சய்ம் ஏதோ பெரிய கதை, அங்கிருந்தால் கொஞ்சம் ஆராயலாம்.

அவன் அதிகம்பேர் படிக்காத ஓர் ஆங்கில வார ஏட்டின் தமிழ்நாட்டு நிருபர். சமூகப்போராளியாகத் தன்னைக் கற்பனை செய்துகொண்டிருந்த அவன் அங்கே என்ன செய்துகொண்டிருந்தான்? ஸ்பெக்ட்ரத்திலிருந்து. கனிமொழி எங்கே என்ன புடவை வாங்குகிறார், வனிதா விஜயகுமார் விவகாரம் என்று எதைப்பற்றியெல்லாமோ எழுதிக்கொண்டு காலந்தள்ளிக்கொண்டிருக்கிறான். 40 வயதிலேயே எல்லாவற்றிலும் தோற்றுவிட்டு, உயிர்பிழைக்கவேண்டி, பாரதி தூவென்றானே அப்படி ஒரு பிழைப்பு. ஏன் அப்படி நடத்திக்கொண்டிருக்கிறான்? அவனுக்கே புரியவில்லை.

ஏதோ ஓர் ஆர்ப்பாட்டத்தில் இறங்கி ஜெயிலுக்குப் போக, அப்பா மாரடைப்பில் உயிரைவிட, குடும்பம் தத்தளிக்க, ஒரு தத்துவார்த்தப் பிரச்சினையில் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட, போடா லூசுன்னு காம்ரேட்-காதலியும் கைவிட, அப்புறம் வயதான அம்மாவும் தானும் இரண்டு வேளை சாப்பிட்டு, வீட்டு வாடகை கொடுத்து, உயிர்பிழைத்திருப்பதே அவனுக்கு முழுநேர வேலையாகிவிட்டிருந்தது.

அப்படியும் இலக்கியம், சினிமா, அரசியல் என்று ஏதாவது பேசிக்கொண்டிருப்பான். அவனது ஆங்கில நடை சற்று சுவையாகவும் இருக்கும். எனவே சில நண்பர்கள் எப்பவுமே கூட இருப்பார்கள். அவர்களும் அவனைப்போல்தான். மாத இறுதியில் மூச்சுத்திணறும் நடுத்தரவர்க்கம். எல்லா தளங்களிலிருந்தும் ஓரங்கட்டப்பட்டும், ஏதோ எல்லாம் தெரிந்தவர்கள் மாதிரி தீர்ப்பு சொல்லிக்கொண்டிருப்பார்கள், தங்களைப் பார்த்தும் சிரித்துக்கொள்வார்கள். அது அவர்களெல்லோருக்குமே சற்று இதமாக இருந்தது. ரொம்பவும் உளறினாலும், பூமியில்தான் கால்பதித்து நடக்கிறோம் என்பதிலே, ஒரு பாதுகாப்பான உணர்வு.

ஏய் சேது இதென்னடா செத்த ஆள் வயித்தில பட்டாம்பூச்சி, அதுவும் ஆயிரக்கணக்கில?

“ஏதோ பாவப்பட்ட ஜென்மம் மாதிரிதான் இருக்குது…அழுக்கு வேட்டி சட்டை… காரோ, லாரியோ அடிச்சிட்டு போயிருக்குது விடியல்ல…யாரும் க்ளெய்ம் பண்ல.. பாடியை..ஜி,எச்சுக்கு எடுத்துகிட்டு போயிருக்காங்க..”..விவரித்தான் நித்தி.

”ஏண்டா அறுக்கிற, நாங்களுதானே பாத்தோம், படிச்சோம்..”, இது கருணா மெடிகல் ரெப். காலாகாலமாய். மானேஜர் க்ரேடுக்குக்கூட வரவில்லை. அரசின் மருந்துக்கொள்கைக்கெதிராய் கொடிபிடிக்கும் ரெப். எங்கே தேறுவது? ”நீ என்ன சொல்ல வர்ற? பசிக்கு பட்டாம்பூச்சியைத் தின்னிருப்பாருன்னா…”

சேது, ட்யூஷன் எடுக்காத கணக்கு வாத்தி, ஒரு சில வட்டங்களில் கவிஞனாக கருதப்படுபவன், குறுக்கிட்டான்: ஏய் இது ஏதோ மாஜிகல் ரியலிசம் மாதிரின்னு நித்தி நெனக்கிறாங்க்றேன்….எக்சைட்மெண்ட் ஏதாச்சும் அந்தாளுக்கு ஏகப்பட்டதிருந்து, வயித்துல ஏகப்பட்ட பட்டர்ஃப்ளைஸ்…ஆனா செத்தப்புறம் மெட்டஃபர் நெஜமாயிருச்சோ….”

“ஆஹா…ஆஹா. அற்புதமான கற்பனை..” என ஆளாளுக்கு சபாஷ் சொல்லும்போதே, நித்தி குறுக்கிட்டான்: ”இதெல்லாம் ஒரு ஃபேபிள்தான். டாக்டர்ஸ் இது ஒரு மெடிக்கல் மிரகிள்ங்க்றாங்க சரி…எனக்கு கேள்வி நெறயவே. எக்சைட்மெண்ட்ல மண்டையப்போட்டாரா, இல்லே, தேடுனது கெடக்காம, நொந்துபோய் எதுமுன்னாடியாவ்து விழுந்தாரா..அவரு உயிரோட இருக்கிறவரைக்கும் அந்த பட்டாம்பூச்சில்லாம் பறந்துகிட்டிருந்திச்சா?..”

”ஏண்டா நம்ம தஞ்சாவூருக்கே போய் பாத்தா என்ன?” என்றான் கருணா. ”ஒம் மாகசின்னுக்கும் ஒரு ஸ்டோரி மாதிரி ஆச்சு…எல்லா டிவிக்காரனும் அங்கே போயிட்டானே நீ மட்டும்தான் போகல்ல…”

”போகணும். போகணும். கண்டிப்பா இதை ப்ளே அப் பண்ணுவாங்க. ஆனா ரஜினியோட அடுத்த படம் பத்தி எழுதணும். அதுக்குள்ள எல்லாம் ஹோக்ஸ், எவனோ கெளப்பிவிட்ட புரளின்னு தெரியவந்துதுன்னு வெச்சிக்க, போகக்கூட சொல்லமாட்டாங்கன்னு நெனைக்கிறேன்….” என்று சொல்லி பெருமூச்சு விட்டான் நித்தி.

கருணா அவனை உற்சாகப்படுத்த முயன்றான். “ஏய் விட்றா, நம்ப மூணு பேரும் போவோம்டா…”

சேதுவுக்கோ சிக்கல்: எப்பா எனக்கு ஸ்கூல் இருக்குல்ல..

ஆனால் கருணா ஒன்றை முடிவெடுத்துவிட்டால், ஆட்சேபணைகளை ஏற்றுக்கொள்ளமாட்டான். டீம் லீடர் மாதிரி அவன். அவனிடம் இயல்பாக இருந்த கனிவும் அன்பும், கையில் புழங்கும் கொஞ்சம் பணமும் அப்படி ஆக்கிவைத்திருந்தது. ”விட்றா ஒரு நாள் லீவு போடு…பாத்துக்கலாம்..அப்புறம் சாடர்டே, சன்டே வருதுல்ல…போய் என்னதான் நடந்துச்சின்னு பாப்பமே. எல்லாமே புரளின்னே வெச்சிக்குவோம், ஏன் கெளம்பிச்சின்னுதான் தெரிஞ்சிக்குவமே….ஒரு நல்ல கவிதையும் கூட கெடக்கிலாமில்ல..”

மூவருக்குமே ஏகப்பட்ட மகிழ்ச்சி. தஞ்சாவூர் மூவருக்குமே ரொம்பப் பிடிக்கும். நித்திக்கு அது சொந்த ஊர். டவுன்தான். சுற்றியுள்ள கிராமங்களைப் பற்றி அவனுக்கு அதிகம் தெரியாது. பெரியகோயிலில், சிவகங்கைப் பூங்கா குளக்கரையில், சில சமயம் நடுவில் உள்ள திட்டில் உட்கார்ந்து மணிக்கணக்கில் பேசுவது, நேரம் கிடைக்கும்போதெல்லாம் அண்மையிலுள்ள வெண்ணாற்றங்கரைக்கு நிலவொளியில் நடந்து சென்று வருவது, அதெல்லாம் நித்திக்கு மிகவும் பிடிக்கும். வெண்ணாறு படித்துறையை ஒட்டிய கோயிலில் ஒரு நாள் மண்டகப்படி நித்தி குடும்பத்தாரின் பங்கு, விரிந்து பரந்த குடும்பக் கிளைகள், 25, 30 நபர் தேறுவார்கள், உற்சவம் முடிந்து, அப்படித்துறையில்தான் அமர்ந்து சாப்பிடுவார்கள், திரும்பி பெரியவரர்களும், சிறியவர்களும் சேர்ந்து நடந்தே வருவார்கள், அது ஒரு அற்புதமான அனுபவம் அவனுக்கு.

தஞ்சையிலிருந்து வெண்ணாற்றங்கரை வரை இப்போது எல்லாம் கான்கிரீட் காடாகிவிட்டது. ஆங்காங்கே சிறிய சிறிய நிலங்கள் அவ்வளவுதான். ஆனாலும் இயற்கையின் அழகிற்கு எவ்வ்ளவு சக்தியோ, அதே அளவு நினைவுகளுக்கும். அவையும் மனதை மயக்குமே. நித்திக்குத்தான் அந்த நினைவுகளின் பரவசமெல்லாம். ஆனாலும் ஏதோ ஒருவகையில் மற்றவர்களுக்கும் தொற்றிக்கொள்ளும்.

அன்பினாலும், பாசத்தாலும், அவனது நண்பர்களுக்கும் அந்நினைவுகள் சொந்தமாகியிருந்தன. ஒன்றாயிருந்த குடும்பம், சிலர் முன்னேற, சிலர் பின் தங்க, பொறாமை, பிளவுகள், கசப்பு, மோதல், நீதிமன்ற வழக்கு, இறுதியில் மண்டகப்படி நின்றே போயிற்று,

தஞ்சை செல்லும்போது, அங்கே நண்பர்களுடன் இரவில் நடந்து சென்று, வெண்ணாற்றில் நீர் ஓடினாலும் ஓடாவிட்டாலும் அந்த சில் காற்றை அனுபவித்து, படித்துறையில் அமர்ந்து, நிலவுடைமை சமுதாயம் பற்றிப் பேசுவது கோயில் மண்டகப்படியின் இன்றைய வடிவமாயிருந்த்து அவர்களுக்கு..

தஞ்சாவூர் வீட்டை அப்பாவே விற்றுவிட்டிருந்தார். வாங்கியவர் அவர்களது நெருங்கிய குடும்ப நண்பர். வக்கீல். நாவல், கர்நாடக இசை, நாடகம் இப்படியெல்லாம் அவருக்கு ஆர்வம். நித்தியை அவருக்குப் பிடிக்கும். வீணாய்ப்போய்விட்டான் என்று புலம்புவார். ”எவனெவனோ எப்படியெல்லாமோ ஆயிட்டான், நீ இன்னமும் நோட்டும் பேனாவுமா ஆட்டோல அலஞ்சிக்கிட்டிருக்கியே. வளஞ்சுகொடுத்துப் போணும் ராஜா, இந்த ஒலகத்தில் ஒவ்வொருத்தனும் தான் பெரிய ஜீனியஸ்னு நெனச்சிகிட்டுதான் திரியுறானுவ, ரெகக்னிஷன் கெடக்கிறதெல்லாம் அவ்ளவு ஈசி இல்ல…கல்யாணமாவது பண்ணிகிட்டிருக்கலாம்..கேக்க மாட்ட…சரி காஃப்கா பத்தி சொன்னியேப்பா, அந்த ட்ரயல் வந்து…”

இப்படி ஏதாவது அவனிடம் பேசவேண்டும் என்பதற்காகவே மாடியில் ஒரு ரூம் அவனுக்கு ஒழித்துவிட்டிருந்தார். எப்போது வேண்டுமானாலும் நண்பர்களுடன் அங்கு வந்து தங்கிவிட்டுப்போவான். பிரச்சினை எதுவும் கொடுக்கமாட்டார்கள். ஊரில் நடக்கும் அத்தனை விஷயங்களும் அவருக்கு அத்துபடி. விசாரணையின் துவக்கம் அவரிடமிருந்தே.

”ஏம்பா டிவியெல்லாம் ஓஞ்சு போயிருச்சே. பட்டர் ஃப்ளை சாம்பிள்சையெல்லாம் ஏதோ லேபுக்குக்கூட அனுப்பிச்சிட்டாங்களே….உங்களை மாதிரி ஆட்களுக்குத்தான்யா என்ன ஏதுன்னு குடயணும்னு ஆசை..ஹ ஹா. உங்க வயித்திலேயும் பட்டர் ஃப்ளை இருக்கும்னு நெனக்கிறீங்களோ…” என்று சொல்லிவிட்டு பலமாகச் சிரித்தார் வக்கீல் ராமாமிர்தம்.

”அதை விடுங்க சார்…வண்ணாத்திப்பூச்சியெல்லாம் எப்டியோ போவட்டும்…யாரு அந்தாளு…அவரைப்பத்தி தெரிஞ்சிக்கணும்…டிவில அனாதப்பொணம்னு சொல்லி கதைய முடிச்சிட்டாங்க…பட்டர் ஃப்ளை டெஸ்டுக்கப்பறம் ஏதாவது தெரிய வருமில்லையா அப்ப ஏதாவது சொல்லுவாங்க…ஆனா ..எங்களுக்கு அது முக்கியமில்ல சார்….ஆள்…அந்த ஆசாமி அவரைப் பத்தி தெரிஞ்சிக்கணும்,” என்றான் நித்தி.

”போஸ்ட் மார்ட்டம் டாக்டரை எனக்குத் தெரியும். கொஞ்சம் சிடுமூஞ்சி. டிவிக்கு பேட்டி கொடுத்தே அவருக்கு அலுத்துப் போயிருக்கும். நீங்க ஏதாவது விசாரிச்சிருப்பீங்களே,” என்றான் கருணா.

நீங்க வந்த நேரமும் ஒரு டெவலப்மெண்ட்தான். இப்பத்தான் ஒரு மணிநேரம் முன்னாடி நடந்த கதை….. பாடியை இன்னும் ப்ரிசர்வ் பண்ணி வெச்சிருக்காங்க..மாண்டேட்டரியா 21 நாள் வெச்சிருக்கணும் பொதக்கிறதுக்கு முன்னாலே… பட்டாம் பூச்சி ப்ரச்சனை வேற இருக்கா…அதுனால இன்னும் அது நடக்கல்ல…இப்ப கதையென்ன்ன்னா, இன்னிக்குத்தான் ஒரு ஆளு யார் யாரையோ பிடிச்சு மார்ச்சுவரிக்குப் போய் பாடியைப் பாத்து கதறித்தள்ளிட்டான்…அவனை அங்கேயே ரிப்போர்ட்டர்ஸ் மொச்சிகிட்டாங்க….’போங்கய்யா, போங்கயா….அந்தாளே போயிட்டாரு, இனிமே என்ன சொல்ல…எப்டியோ வாழ்ந்தவரு…போதாத காலம் எங்க லாட்ஜில மூட்டப்பூச்சிக்கு நடுவ்ல காலத்த ஓட்டணும்னு தலயெழுத்து….எதுவும் கேக்காதீங்க….எங்கேந்தோ வந்தாரு ஒரு வருஷமா எங்க லாட்ஜ்லதான் இருந்தாரு…செலவுக்கும் வாடகைக்கும் யாரோ மணி ஆர்டர் பண்ணுவாங்க….என்ன வண்ணாத்திப்பூச்சியா… நான் என்னத்தக் கண்டேன்…எவனாவது அதையெல்லாம் சாப்டுவானுங்களா…சே சே….தெனமும் வாக் போவாரு….என்ன நெனச்சிகிட்டுப் போனாரோ ..எந்த லாரி எமனா வந்திச்சோ…’ இப்டில்லாம் சொல்லிகிட்டு தலயில அடிச்சிகிட்டு அழுதிருக்கிறான். அத்துடன் ஓடிவிட்டான்…எல்லாம் பாரு நாளக்கி பேப்பர்ல ஃப்ளாஷாவப்போவுது…”

எந்த லாட்ஜ் சார்? என்று கேட்டான் கருணா ஆவலுடன்.

இங்கேதாம்பா…பக்கத்தில கீழ வீதில…ராமகிருஷ்ணா லாட்ஜ்…

நித்தி கெஞ்சும் குரலில் அவரை வேண்டினான், ” சார் அந்த ஓனரை ஒங்களுக்குத் தெரிந்திருக்குமே.. கொஞ்சம் செக் பண்ணுங்களேன். நாங்க அங்கே போற நேரத்தில மத்த ரிப்போர்ட்டர்ஸ் அங்க வந்திருந்தாங்கன்னா நமக்கு சரிப்படாது…நாங்க மெதுவாக்கூடப் போறோம்..ஆனா நிறைய நேரம் பேசணும்..பேப்பர்ல போட்றதுக்காக இல்லன்னு சொல்லிப்பாருங்க….”

”நீ சொல்றதும் சரிதாம்பா. முதலாளி நமக்கு வேண்டப்பட்டவர்தான்,” என்ற ராமாமிர்தம் உடனேயே தனது செல்போனில் லாட்ஜ் உரிமையாளர் எண்ணைத்தேடிக் கண்டுபிடித்து வேகவேகமாக எண்களை அமுக்கினார்.

”ஆமாம் கிஷ்ணா…ஆஸ்பத்திரிக்கு போய் அழுதாராம்ல ஒம் மேனேஜர்..எங்க அவரு….”

”என்னது…ரிப்போர்ட்டர்சுக்கு பயந்துகிட்டு எங்கேயோ போயிட்டாரா….”

(இறுதிப் பகுதி நாளை)

 

ஓவியம்: தமிழ்