kavusalya
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற சாதி ஆணவ வெறியாட்டத்தில் சங்கர் படுகொலை செய்யப்பட்டார். அவரதுமனைவி கவுசல்யா பலத்த அரிவாள் வெட்டுக்காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த படுகொலை தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை தொடர்பாக அமைக்கப்பட்ட தனிப்படையினர் 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை அரசு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்ட கவுசல்யாவை அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறினார்கள். அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வார்டை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. கவுசல்யா தலையில் படுகாயம் அடைந்து இருந்ததால் 32 தையல் போடப்பட்டது. டீன் டாக்டர் எட்வின் ஜோ தலைமையில் அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்பட்டு தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட்டது. இந்த கொலையினால் கணவரை இழந்ததாலும், படுகாயம் அடைந்ததாலும் கவுசல்யா மன ரீதியிலும் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக உளவியல் ரீதியான மருத்துவ ஆலோசனைகளும் கவுசல்யாவுக்கு வழங்கப்பட்டன.
16 நாள் மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் கவுசல்யா குணம் அடைந்தார். கவுசல்யா தன்னுடைய கணவர் சங்கரின் வீட்டுக்கு செல்வதாக போலீஸ் அதிகாரிகளிடமும், டாக்டர்களிடமும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து நேற்று சங்கரின் தம்பியும், கவுசல்யாவின் மைத்துனருமான விக்னேஷ்வரன்(20) கோவை அரசு மருத்துவமனைக்கு வந்து கவுசல்யாவை அழைத்துச்சென்றார். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உடுமலைப்பேட்டை குமரலிங்கத்தில் உள்ள சங்கரின் வீட்டுக்கு கவுசல்யா அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சங்கரின் தந்தை வேலுச்சாமியின் பராமரிப்பில் கவுசல்யா தங்க வைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதால் கவுசல்யா தங்கி இருக்கும் வீட்டை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.