r

ரு வழியாக நடிகர் சங்க தேர்தல் முடிந்து, புதிய அணியும் பொறுப்பேற்றுக்கொண்டது. ஆனால் பரபரப்பு சம்பவங்களுக்கு குறைச்சல் இல்லை.

சங்கத்துக்கு ரஜினியை கவுரவ தலைவராகவும், கமலை கவுரவ ஆலோசகராவும் நியமிக்கப்போவதாக ஒரு செய்தி வந்தது. இந்த நிலையில் ரஜினிக்கு வந்த கடிதம் ஒன்று அவரை ரொம்பவே டென்ஷன் ஆக்கி, “ எனக்கு சங்கமும் வேணாம். ஒரு பதவியும் வேணாம்” என்று சொல்லவைத்துவிட்டதாம்.

நேற்று காலை ரஜினியின் ராகவேந்திரா கல்யாணத்துக்கு கொரியரில் வந்த அந்த கடிதத்தில் அப்படி என்னதான் எழுதப்பட்டிருந்தது என்று விசாரித்தோம். பலவித தொடர் அணுகலுக்குப் பிறகு கடிதத்தில் எழுதப்பட்டிருந்த விசயங்களை அறிய முடிந்தது.

“மதிப்புக்குரிய ரஜினி அவர்களுக்கு.. “ என்று துவங்கிய அந்த கடிதத்தில், அவரது திறமை, உழைப்பு ஆகியவற்றைப் பாராட்டி பல வரிகள் எழுதப்பட்டிருக்கிறது. அதன் பிறகு சில கேள்விகள். அவைதான் ரஜினியை டென்ஷன் ஆக்கிவிட்டன.

அந்த கேள்விகள் இவைதானாம்.

@ .நடிகர் சங்க தேர்தல் அன்று மீடியாவுக்கு பேட்டி கொடுத்த நீங்கள் (ரஜினி) “நடிகர்கள் ஒரே குடும்பம், ஒரே ஜாதி…”  என்று கூறினீர்கள். ஆனால் நீங்கள் அப்படி நடந்துகொண்டீர்களா?   தமிழகத்துக்கு தண்ணீர் தர வேண்டும் என்று கர்நாடக மாநில அரசை கண்டித்து 2002ம் ஆண்டு தமிழ்த்திரை உலக நடிகர்கள்  அனைவரும் நெய்வேலியில் பேரணி நடத்தினோம்.. ஆனால் நீங்கள் அதை புறக்கணித்து தனியாக உண்ணாவிரதம் என்று உட்கார்ந்தீர்கள். இதுதான் ஒரே குடும்பம், ஒரே ஜாதியா?

@ அன்று பேசியபோது தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று பெயர் வைக்க வேண்டும் என்றீர்கள். மகிழ்ச்சிக்குரிய விசயம்தான். ஆனால் அந்த வார்த்தை உங்கள் அடி மனதில் இருந்து வந்ததா? ஏனென்றால் உங்கள் அன்பு மகள்களுக்கோ, நீங்கள் கட்டிய திருமண மண்டபம், பள்ளிக்கோ தமிழ்ப்பெயர் வைக்கவில்லையே… ஏன்?

மேற்கண்ட இரு கேள்விகளுக்குப் பிறகு, ”நடிகர் சங்கத் தேர்தல்ல ஜெயிச்சி வர்றவங்க உயிரே போனாலும், கொடுத்த வாக்குறுதியை நிறைவேத்தணும்” என்று சொன்னீர்களே.. நீங்கள் அது போல நடந்துகொள்கிறீர்களா?” என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளதாம். அதன் பிறகு இது குறித்த துணைக் கேள்விகளாம்..

  1. “தமிழனுக்கு தண்ணீர் தர மாட்டேன் என்று சொல்பவர்களை உதைக்க வேண்டாமா?” என்று இங்கு இருந்துகொண்டு கன்னடர்களை நோக்கி ஆவேசமாக கேட்டீர்கள். பிறகு உங்கள் குசேலன் படத்தை அங்கு திரையிட எதிர்ப்பு கிளம்பியதும் “அப்படி பேசியதற்கு மன்னிப்பு கேட்கிறேன். குசேலன் படத்துக்கு தடை விதிக்காதீர்கள்” என்று கெஞ்சினீர்களே.. இதுதான் சொன்ன வாக்கில் உறுதியாக இருப்பதா?
  2. பொது மக்களுக்கு இலவச திருமணம் நடத்தவே ராகவேந்திரா மண்டபத்தைக் கட்டுவதாகச் சொன்னீர்கள். அங்கு நடக்கும் திருமணங்களுக்கு கட்டணம் வாங்குவதில்லையா? விசால், சரத்… இரு அணிகள் அங்கு கூட்டம் நடத்தியதற்கு கூட கட்டணம் வசூலித்தீர்களா இல்லையா? இதுதான் நீங்கள் சொன்ன இலவசமா?
  3. உங்கள் மகள் திருமணத்துக்கு அழைப்பில்லையே என்று உங்கள் ரசிகர்கள் ஆதங்கப்பட்டபோது ரசிகர்களை அழைத்து இன்னொரு நாள் விருந்து வைப்பதாக சொன்னீர்களே.. அதை இன்றுவரை நிறைவேற்றவில்லையே.. இதுதான் வாக்கை காப்பாற்றுவதா?
  4. உங்களது பாபா படத்துக்கு தொல்லை கொடுத்ததால் பா.ம.க.வை தோற்கடிக்க வேண்டும் என்று 2004ம் ஆண்டு தேர்தலில் முழங்கினீர்கள். இதை வேத வாக்காகக கொண்டு, உங்கள் ரசிகர்கள், மதுரைக்கு வந்த ராமதாஸுக்கு கறுப்புக்கொடி காட்டினர். அப்போது நடந்த மோதலில் உங்கள் ரசிகர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். மருத்தவமனயி்ல சேர்க்கப்பட்டனர். அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறப்போவதாக சொன்னீர்கள். செய்தீர்களா?

 

  1.  நதி நீர் இணைப்புக்கு ஒரு கோடி ரூபாய் நிதி அளிப்பதாக சொன்னீர்களே… கடந்த முந்தைய தி.மு.க. ஆட்சியிலேயே ,  காவிரி – அக்னியாறு – கோரை யாறு – பாம்பாறு – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டம் துவங்கப்பட்டதே. மேலும் தாமிரபரணி -கருமேனியாறு – நம்பியாறு இணைப்புத் திட்ட துவக்கவிழாவும் நடந்ததே. நீங்கள் சொல்லியபடி ஒரு கோடி ரூபாய் கொடுத்தீர்களா?

– இப்படியாக போகிறதாம் அந்த கடிதம். அதில் மேலம் பல விசயங்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறதாம்.

ராகவேந்திரா கல்யாண மண்டப முகவரிக்கு வந்த இந்த கடிதம், அங்குள்ள ஊழியர்களால் தெரிந்தோ தெரியாமலோ ரஜினியின் பார்வைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

சுரேந்தர் ரெட்டி என்ற பெயரில் அனுப்பப்பட்டுள்ள அந்த கடிதத்தை படித்ததுமே, தனக்குத் தெரிந்த யாரோதான் பொய்யான பெயரில் அனுப்பி இருக்கிறார்கள் என்பதை ரஜினி புரிந்துகொண்டாரம். ஆனால் அதில் குறிப்பிட்டிருந்த கேள்விகள் அவரை டென்ஷன் ஆக்கிவிட்டனவாம்.

நடிகர் சங்கத்தின் கவுரவ ஆலோசகராக ரஜினியை நியிக்க ஆலோசனை நடப்பதாக கடந்த 21ம் தேதிதான் செய்தி பரவியது. இதற்கு மறுநாள்.. அதாவது நேற்று இந்த கடிதம் வந்திருக்கிறது.

ஆக.. ரஜினியை கவுரவதலைவராக்கக்கூடாது என்று நினைப்பவர்கள்தான் இதைச் செய்திருக்க வேண்டும் என்றே பேசப்படுகிறது.

ஆகவேதான், தனக்கு நெருக்கமான திரையுலகப்புள்ளிகள் சிலருக்கு போன் போட்ட ரஜினி, “பெரிய பதவிகளே என்னைத் தேடி வந்தபோது ஒதுங்கியவன் நான். இந்த சங்க பதவிக்கா ஆசைப்படப்போகிறேன்..? ஒரு விஷயம் வேண்டாம் என்று ஒதுங்குவதற்குத்தான் துணிவு வேண்டும். எனக்கு அந்த துணிவு உண்டு” என்று பொருமி இருக்கிறார்.

எது எப்படியோ… “எனக்கு சங்கமும் வேணாம்.. ஒரு பதவியும் வேணாம்” என்று ரஜினியை சொல்லவைத்துவிட்டது அந்த கடிதம்.