08-1446995509-rain

சென்னை:

மிழகம் முழுதும் பரவலாக பெய்த கன மழை, வெள்ளம் காரணமாக தொடர்ந்து பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு வருகிறது.

நவம்பர் 9ம் தேதி முதல் அடுத்தடுத்து மூடப்பட்டு வந்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளி கல்லூரிகள் இன்று (23ம் தேதி) மீண்டும் திறக்கப்படு்ம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று முதல் மழை பெய்து வருவதால், இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் மழை விடுமுறையை ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்த மாணவர்கள், தற்போது வெறுப்படைந்து மீண்டும் எப்போது பள்ளி திறக்குமோ என்கிற நிலைக்கு வந்துவிட்டார்கள்.

பெற்றோர்கள் மத்தியிலும் இந்த தொடர் விடுமுறை, தங்கள் பிள்ளைகளின் கல்வி குறித்து பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

“மழை காரணமாக இப்படி தொடர்ந்து விடுமுறை விட்டால், அந்த வேலை நாட்களை எப்படி பள்ளிகள் ஈடுகட்டும். அனைத்து பாடங்களையும் குறித்த காலத்தில் ஆசிரியர்களால் கற்பிக்க முடியுமா. முக்கியமாக பொதுத் தேர்வு எழுதவிருக்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுமே” என்று அச்சப்படுகிறார்கள்.

அவர்களில் பலர், “முழு ஆண்டு தேர்வு என்று ஏப்ரல், மே மாதங்களில் இரண்டு மாத விடுமுறை விடுகிறார்கள். அந்த கோடை காலத்தில் பிள்ளைகளை வெய்யிலில் அலையாதபடி வீட்டில் பாதுகாப்பது பெரும் சிரமமாக இருக்கிறது. பல மாணவர்கள் கோடைக்கால நோய்க்கு ஆளாகிறார்கள். ஆகவே கோடை விடுமுறையை பாதியாக குறைத்துவிட்டு, அக்டோபர் நவம்பர் மாதங்களில் 30 நாட்கள் பொது விடுமுறை அளிக்கலாம். இதனால் பள்ளி வேலை நாளும் பாதிக்காது. தவிர “இன்று விடுமுறையா, நாளை விடுமுறையா” என்று தெரியாமல் தவிக்கும் நிலையும் மாறும்!” என்கிறார்கள்.

அரசு கவனிக்குமா?