சென்னை

கொடநாடு எஸ்டேட் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மனோஜ் மற்றும் சயான் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு கொடநாட்டில் ஒரு எஸ்டேட் உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு கும்பல் அந்த எஸ்டேட் பங்களாவில் புகுந்து கொள்ளை அடித்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு காவலராக இருந்த ஓம் பகதூர் கொல்லப்பட்டார். மற்றும் உள்ள ஒரு காவலாளி கிருஷ்ண பகதூர் தாக்கப்பட்டார். அது நடந்த பிறகு ஜெயலலிதாவின் கார் ஓட்டுனர் கனகராஜ் சேலம் அருகே ஒரு கார் விபத்தில் மரணம் அடைந்தார்.

மேலும் கொடநாடு எஸ்டேட் பணியாளரான சயன் குடும்பத்துடன் கார் விபத்தில் சிக்கினார். அந்த விபத்தில் சயன் தப்பிய போதும் சயனின் குடும்பத்தினர் மரணம் அடைந்தனர். கடந்த 11 ஆம் தேதி இது குறித்த அதிர்ச்சி தகவல்களைக் கொண்ட வீடியோ ஒன்றை தெகல்கா செய்தி ஊடக முன்னாள் ஆசிரியர் மேத்யு சாமுவேல் வெளியிட்டார்.

ஜேம்ஸ் மேத்யூ

அந்த வீடியோ பதிவில் பேட்டி அளித்த சயன் மற்றும் மனோஜ் ஆகிய இருவரும் கொடநாடு எஸ்டேட்டில் இருந்து ஆவணங்கள் கொள்ளை அடிக்கப்பட்டதாகவும் மற்றும் இந்த கொள்ளை மற்றும் மரணங்களின் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளதாகவும் தெரிவித்தனர். இது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தவறான தகவல் எனவும் தேவையில்லாமல் தமிழக முதல்வர் மீது பழி போடுவதாகவும் அதிமுக வினர் தெரிவித்தனர். பொய்த் தகவல் அளித்த இந்த மூவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி ராஜன் சத்யா புகர் அளித்தார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் மேத்யூ சாமுவேல், சயன், மனோஜ் ஆகிய மூவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இவர்கள் மூவரையும் கைது செய்ய டில்லி விரைந்த தமிழக போலீசார் ஞாயிறு அன்று சயன் மற்றும் மனோஜ் ஆகிய இருவரையும் கைது செய்து விமானத்தில் சென்னைக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் மத்தியக் குற்றப்பிரிவு இணை ஆணையர் அன்பு தலைமையில் காவலர்கள் சுமார் 11 மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடத்தினர்.

அதன் பிறகு நேற்று நள்ளிரவு சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி சரிதா வின் இல்லத்தில் இருவரையும் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். அவர்களிடம் விசாரணை செய்த நீதிபதி போதிய ஆதாரம் இல்லாததால் சயன் மனோஜ் ஆகிய இருவரையும் பிணையில் விடுவித்துள்ளார். அத்துடன் வரும் 18 ஆம் தேதி அவர்கள் மீண்டும் ஆஜராக வேண்டும் என நீதிபதி சரிதா உத்தரவு இட்டுள்ளார்.