
கேரள சட்டசபைக்கு மே மாதம் 16-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் ஆளும் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி பிரதான கூட்டணியாக களமிறங்கி உள்ளது. இந்த கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு, மதசார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உள்ளன.
இந்த கட்சிகளுக்கு இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை கடந்த சில நாட்களாக நடந்து வந்த நிலையில், தற்போது அது முடிவுக்கு வந்துள்ளதாக கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைக்கம் விஸ்வம் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.கேரளாவில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 92 இடங்களில் போட்டியிடுகிறது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி 27 தொகுதிகளிலும், மதசார்பற்ற ஜனதாதளம் 5 தொகுதிகளிலும் களமிறங்குகிறது.
மேலும் தேசியவாத காங்கிரஸ், கேரள காங்கிரஸ் (ஜனநாயகம்) கட்சிகளுக்கு தலா 4 தொகுதியும், இந்திய தேசிய லீக் கட்சிக்கு 3 இடங்களும் ஒதுக்கப்பட்டு உள்ளன. அத்துடன் கேரள காங்கிரஸ் (பி), காங்கிரஸ் (எஸ்) உள்ளிட்ட 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel