டில்லி

தஞ்சலி நிறுவனத்தை உருவாக்கியவரும் யோகா குருவுமான பாபா ராம்தேவ் கோமியம் (பசுவின் சிறுநீர்) புனிதமானது என குரானில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது என கூறி உள்ளார்.

யோகா குருவான ராம்தேவ், பல சமயத்தில் பல புதுப் புதுச் செய்திகளை சொல்வது வழக்கம்.   அவர் பல தொலைக்காட்சி நிகழ்விலும், பேட்டிகளிலும் கலந்துக் கொள்வது சகஜமான ஒரு விஷயம்.   அவர் ஆரம்பத்தில் ஒரு ஆன்மீக தொலைக்காட்சி சேனலில் யோகா பாடங்கள் நடத்தியதால்தான் பிரபலமானார் என்பது தெரிந்ததே.   பாபா சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அந்த பேட்டியில், பாபா ராம்தேவ், “கோமியம் என அழைக்கப்படும் பசுவின் சிறுநீரை ஒரு மருந்தாக இஸ்லாமியர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.  குரானினில் கோமியத்தின் புனிதத்தை பற்றியும் அதன் மருத்துவ குணங்களைப் பற்றியும் புகழப்பட்டுள்ளது.   எனது நிறுவனமான பதஞ்சலி ஒரு இந்து நிறுவனம் என்பதாலேயே அது பெரிதும் விமர்சிக்கப்படுகிறது.   ஆனால் நான் எப்போதும் இச்லாமியரால் ஆரம்பிக்கப்பட்ட ஹம்தர்த் மற்றும் ஹிமாலயா போன்ற நிறுவனங்களுக்கு முழு ஆதரவு அளித்துள்ளேன்.  ஹிமாலயா நிறுவனர் ஃபரூக் பாய் எனக்கு யோகா பள்ளி அமைக்க நிலம் கொடுத்து உதவியவர்.

எனது பதஞ்சலி நிறுவனத்தை ஆரம்பிக்கும் போதே அதனை பெரிய அளவில் கொண்டு செல்லும் எண்ணத்துடன் தான் ஆரம்பித்தேன்.  இந்த நிறுவனம் 100 வருடங்கள் என்ன 500 வருடங்கள் கூட நிலைத்திருக்கும்.    எனக்குப் பிறகு இந்த நிறுவனத்தை நடத்தப் போகிறவர், நிச்சயமாக ஒரு  வணிகப் பெரும்புள்ளி ஆகவோ, உலகப் புகழ்ப் பெற்ற மனிதராகவோ இருக்கமாட்டார்.   என்னால் பயிற்சி தரப்பட்ட 500 துறவிகள் கொண்ட ஒரு குழுவினர் எனது நிறுவனத்தை நடத்திச் செல்வார்கள்”என தெரிவித்துள்ளார்.