Munthiri Kothu-jpg-1156
 
தீபாவளி மட்டுமில்லே… கல்யாணம், காதுகுத்துன்னு எந்த விசேசமா இருந்தாலும் “முந்திரி கொத்து” வேணும்,  எங்க நாஞ்சில் நாட்டுக்காரங்களுக்கு! ஒரு தடவ  செஞ்சி சாப்பிட்டுப்பாருங்க…  அப்புறம்  நீங்களும் எந்த பண்டிகைக்கும் இந்த முந்திரி கொத்தை விடமாட்டீங்க!
தேவையான பொருட்கள்: சிறுபயறு (பச்சைப் பயறு) – ஒரு கிலோ, கருப்பட்டி – முக்கால் கிலோ, தேங்காய் – ஒன்று, ஏலக்காய் – 10, சுக்கு – ஒரு துண்டு, எள் – 100 கிராம், பச்சரிசி – அரை கிலோ, மஞ்சள்தூள் – சிறிதளவு, இத்துடன் தேங்காய் எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் சிறுபயிரை நன்றாக வறுத்து, தோலை நீக்கவும். பிறகு, பயறை உடைத்து புட்டு மாவு பதத்துக்கு பொடியாக்கவும். எள், துருவிய தேங்காய் இரண்டையும் வறுத்து, உடைத்து வைத்திருக்கும் பயறுடன் சேர்க்கவும். இந்தக் கலவையில் ஏலக்காய், சுக்கு இரண்டையும் பொடியாக்கிப் போடவும். தண்ணீரில் கருப் பட்டியைச் சேர்த்து பாகு காய்ச்சி, இந்தக் கலவையில் ஊற்றி, உருண்டைகளாக உருட்டி எடுக்கவும்.
பச்சரிசி மாவு, சிறிதளவு மஞ்சள்தூள் இரண்டையும் கெட்டியாக தண்ணீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்ததும், பிடித்து வைத்திருக்கும் பயறு உருண்டையை, பச்சரிசி மாவுக் கலவையில் நனைத்து எடுத்து, போடவும். கரண்டியால் உருண்டைகளை திருப்பிவிட்டு, எல்லா பகுதிகளும் வேகும்படி செய்யவும். சுருசுரு சத்தம் நின்ற ஓரிரு நிமிடங்களில் எடுத்துப் பரிமாறலாம்.
குறிப்பு: எண்ணெயில் மாவை போட்டதும், உருண்டைகள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டு, முந்திரிக் கொத்து போல இருப்பதால் தான் இதற்கு முந்திரிக் கொத்து என்று பெயர்.