இந்து மதத்தவர், பிற மதத்துக்கு மாறுவதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது சாதிய பாகுபாடு. ஆனால் மாறிச் சென்ற பிறகும் சாதிப் பாகுபாடு தொடர்கிறது என்பதை உணர்த்துகிறது “தடம் தேடி” என்கிற ஆய்வறிக்கை. இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் ரவிக்குமார் எழுதியுள்ள முகநூல் பதிவு:
“தமிழ்நாட்டிலிருக்கும் கத்தோலிக்க திருச்சபை நிர்வாக வசதிக்காக தமிழகத்தை மறை மாவட்டங்கள், மறை வட்டங்கள் எனப் பிரித்துள்ளது. அவற்றிலிருக்கும் கத்தோலிக்க கிறித்தவர்கள் எத்தனை பேர் அதில் தலித் கிறித்தவர்கள் எத்தனைபேர் என்ற புள்ளிவிவரம் இப்போது துல்லியமாகக் கணக்கெடுப்பு செய்யப்பட்டு ‘ தடம் தேடி’ என்ற பெயரில் அறிக்கையாக வெளியிடப்பட்டிருக்கிறது.
அந்த அறிக்கையில் உள்ள விவரங்களில் சில :
* தமிழ்நாட்டில் உள்ள கத்தோலிக்க கிறித்தவர்கள் 39,64,360. அதில் தலித் கிறித்தவர்கள் 22,40,726 எனத் தெரியவந்துள்ளது. இவ்வளவு பேர் இருந்தும் திருச்சபை நிர்வாகத்தில் தலித் கிறித்தவர்களுக்கு உரிய பங்கு வழங்கப்படவில்லை.
* தமிழகமெங்கும் கத்தோலிக்க அருட்பணியாளர்கள் 4826 பேர் உள்ளனர், அதில் தலித் கிறித்தவ அருட்பணியாளர்கள்
570 பேர் மட்டுமே உள்ளனர். மொத்தமுள்ள 18 ஆயர்களில் தலித் ஆயர்கள் 2 பேர்தான்.
* வேளாங்கன்னி தேவாலயமும் அங்கு நடைபெறும் விழாவும் உலகப்புகழ் பெற்றவை. அங்குகூட சாதிய பாகுபாடு நிலவுவகிறது. அங்கு நடைபெறும் பெருவிழாவில் ஒவ்வொரு சாதிக்கும் ஒருநாள் ஒதுக்கப்படுகிறது. தலித் கிறித்தவர்கள் நான்காம் நாள் விழாவைக் கொண்டாடுகிறார்கள். அதுமட்டுமின்றி சாதிவாரியாக கல்லறை பிரிக்கப்பட்டிருக்கிறது.
* தஞ்சாவூர் பூண்டி பசாலிக்கா ஆலயத்திற்குள் சாதிக் கிறித்தவரின் சடலம் எடுத்து செல்லப்பட்டு இறுதித் திருப்பலி நடைபெறுகிறது. ஆனால் தலித் கிறித்தவரின் சடலத்தை கோயிலுக்குள் எடுத்துச்செல்ல அனுமதியில்லை.
* சாதிக்கிறித்தவர் ஆலயத் திருவிழாக்களில் தலித் கிறித்தவரிடம் திருவிழா வரி வசூலிப்பதில்லை.
* எல்லா ஆலயங்களிலும் தலித்துகளுக்கு தனி சவ வண்டி உள்ளது.
* தமிழகம் முழுவதும் தலித் கிறித்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள 450 பங்குத் தளங்களில் பங்குப்பேரவை அமைக்கப்படவில்லை.
* புன்னைவனம், ராயப்பன்பட்டி, சித்தலச்சேரி அனுமந்தன்பட்டி, புள்ளம்பாடி,பூண்டி, எறையூர் உள்ளிட்ட 20 இடங்களில் தலித் கிறித்தவர்கள் தமக்கிழைக்கப்படும் அநீதியை எதிர்த்துப் போராடிவருகின்றனர்.
கத்தோலிக்க திருச்சபைக்குள் சாதி ஆதிக்கம் இருக்கும் செய்தி புதியது அல்ல. பாகுபாடுகளுக்கு எதிராகத் தலித் கிறித்தவர்கள் அணிதிரண்டு போராடுகின்றனர். அவர்களோடு சமத்துவத்துக்காக அரும்பணியாற்றும் ஏசுசபை அருட்பணியாளர்களும் திருச்சபையில் உள்ளனர். அவர்களில் எக்ஸ்.டி.செல்வராஜ், சூசைமாணிக்கம், மாற்கு, ரஃபேல் உள்ளிட்ட சிலரோடு நான் பழகியிருக்கிறேன்.
1980- 90 களில் தமிழ்நாட்டில் ஏசுசபையினரின் செயல்பாடு தீவிரமாக இருந்தது. கிறித்தவத்தில் மட்டுமின்றி இந்து மதத்திலிருக்கும் தலித்துகளுக்கு ஆதரவாகவும் அவர்கள் செயல்பட்ட னர். பல அமைப்புகளைத் தோற்றுவித்தனர் . மதுரை ‘ஐடியாஸ்’ மையம் அதில் ஒன்று. ஏசு சபையினரின் பணிகள் தற்போது சற்றே தொய்வடைந்துவிட்டதுபோல் தெரிகிறது.
முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததைவிட இப்போது தலித் கிறித்தவர்கள் ஒருங்கிணைந்து அமைப்பாகச் செயல்படுகின்றனர். தமது கோரிக்கைகளை ஆதாரங்களோடு ஆவணங்களாக முன்வைக்கின்றனர். இந்த நேரத்தில் தலித் கிறித்தவர்களின் கோரிக்கைகள் வெற்றிபெற கத்தோலிக்க திருச்சபைக்குள் இருக்கும் சனநாயக சக்திகளின் ஒத்துழைப்பு மட்டுமின்றி பிற முற்போக்கு சக்திகளின் ஆதரவும் அவசியம்.
தலித் கிறித்தவர்களின் நியாயமான முறைப்பாடுகளுக்கு செவிசாய்த்து திருச்சபையை சமத்துவம் கொண்டதாக மாற்றவேண்டியதன் அவசர முக்கியத்துவத்தையே ‘தடம் தேடி’ அறிக்கையின்மூலம் நாம் புரிந்துகொள்கிறோம்!”