திருவனந்தபுரம் : மண்டல கால பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து புதிய மேல்சாந்திகள் இன்று இரவு பதவி ஏற்கிறார்கள்.
காத்திகை மாத பிறப்பையொட்டி மண்டல கால பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. இன்று மாலை 5:00 மணிக்கு மேல் தற்போதைய கோவில், சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுகிறார்.
அதைத்தொடர்ந்து, புதிய மேல்சாந்திகள் பதவி ஏற்பு நிகழ்வு நடைபெற உள்ளது. அதன் படி, சபரிமலையில் தங்கி நாளை முதல் ஒரு ஆண்டு காலம் பூஜைகள் செய்யும் மேல் சாந்திகளான சபரிமலை அருண்குமார் நம்பூதிரி, மாளிகைபுறம் – வாசுதேவன் நம்பூதிரி ஆகியோரை அழைத்து சன்னிதானம் முன் கொண்டு வந்து அவர்களுக்கும் சில விசேஷ பூஜைகள் செய்யப்பட்டு இன்று இரவு பதவி ஏற்பு விழா நடைபெறும். இதைத்தொடர்ந்து இரவு 11:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.
நாளை அதிகாலை 3:00 மணிக்கு நடை திறந்து தந்திரி பிரம்மதத்தன் அபிஷேகம் நடத்தி நெய்யபிஷேகத்தை தொடங்கி வைத்ததும் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் தொடங்கும்.
கார்த்திகை மாத பூஜையையொட்டி, பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்வ தில் திருவிதாங்கோடு தேவசம் போர்டு தீவிரமாக களமிறங்கியுள்ளது. சன்னிதானத்தில் பக்தர்கள் மழை நேரத்தில் படும் சிரமங்களை தடுப்பதற்காக வடக்கு பகுதியில் தற்காலிக ஷெட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.
பம்பையில் பக்தர்கள் மழை பாதிப்பு உள்ளிட்டவற்றால் சிரமப்படாமல் இருக்க ஏழு கியூ காம்ப்ளக்ஸ்கள் தயார் செய்யப்பட்டுள்ளது.பெரு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பம்பை ராமமூர்த்தி மண்டபத்தின் அதே அளவில் ஜெர்மன் தொழில்நுட்பத்தில் புதிய பந்தல் கட்டப்பட்டுள்ளது.
ஆன்லைன் முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்களுக்காக பம்பை மணல் பரப்பில் ஸ்பாட் புக்கிங் கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளது.
நிலக்கல் அல்லாமல் பம்பை ஹில் டாப் மற்றும் சக்குப்பாலத்தில் பார்க்கிங் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்களுக்கு கூடுதல் வசதி கிடைத்துள்ளது.
.18 படிகளில் இந்த சீசனில் அனுபவம் நிறைந்த போலீசார் மட்டுமே பக்தர்களுக்கு உதவ நியமிக்கப்படுவார்கள் என தேவசம் போர்டு தெரிவித்து உள்ளது.
பம்பை, சன்னிதானம், நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் பக்தர்களுக்கான வசதிகள் செய்யும் பணிகள் இறுதி கட்டத்தில் விறுவிறுப்பாக நடக்கிறது.