
திருப்பத்தூர்: தொலைக்காட்சி நடிகரும், நகைச்சுவை பேச்சாளருமான மதுரை முத்துவின் மனைவி இன்று கார் விபத்தில் பலியானார்.
தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நகைச்சுவை நிகழ்ச்சிகளின் மூலம் புகழ் பெற்ற மதுரை முத்து, ஒரு சில திரைப்படங்களிலும் நடித்தார். வெளிநாடுகளிலும் பல்வேறு மேடை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்.
இவரது மனைவி வையம்மாள் (வயது32). இவர்கள் மதுரை தனக்கன்குளத்தில் வசித்து வந்தனர். நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக மதுரை முத்து வெளிநாடு சென்றுள்ளார்.
இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கோவிலுக்கு இன்று (வியாழக்கிழமை) காலை வீட்டிலிருந்து காரில் புறப்பட்டார் வையம்மாள். காலை ஏழு மணி அளவில் திருப்பத்தூர் கோட்டையிருள் பகுதியில் கார் சென்றபோது எதிர் பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
அந்த இடத்தில் இருந்த சிலர் உடனடியாக சென்று மீட்பு நடவடிக்கையில் இறங்கினர். ஆனால் காரில் இருந்த வையம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானார். பலத்த காயம் அடைந்த டிரைவர் கண்ணன் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து திருப்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Patrikai.com official YouTube Channel