(பிரபாகரனும் நானும் – 4 )
1982-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 28-ஆம் தேதியன்று காலை…
மதுரை செனாய் நகரில் உள்ள எங்கள் இல்லத்திற்கு பிரபாகரன் வந்திருந்தார். அவரிடம் ’’மதுரையில் உள்ள காந்தியடிகள் அருங்காட்சியகத்தை நீங்கள் பார்த்ததுண்டா?’’ என்றேன்.
‘’அங்கு என்ன இருக்கிறது? என்று அவர் கேட்டார்.
“இந்திய விடுதலைப் போராட்டம் குறித்து புகைப்படங்கள் அங்கு காட்சியாக வைக்கப்பட்டுள்ளன. இந்திய சுதந்திரப் போராட்டம் பற்றிய 5 மணி நேரம் ஓடும் செய்திப்படம் ஒன்றும் அங்கு உள்ளது. நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும்.’’என்று நான் கூறினேன்.
உடனடியாக பிரபாகரன் சம்மதம் தெரிவித்தார்.
அந்த அருங்காட்சியகத்தின் செயலாளர் தத்தா அவகள் பிறப்பால் அசாமியரே ஆயினும்,தமிழ் நாட்டுபெண் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டிருந்தார். ஆகவே, தமிழும் நன்கு பேசுவார். அவருடன் சிறந்த நட்பு எனக்கு இருந்தது. ,அவருக்குத் தொலைப்பேசியின் மூலம் நாங்கள் வரவிருப்பதைத் தெரிவித்துவிட்டு சென்றோம்.
முதலில் புகைப்படக் கண்காட்சியைப் பார்த்தோம். அதற்குப் பின் தத்தா அவர்கள் ஓர் அறைக்கு அழைத்துச் சென்று சுதந்திர போராட்டக் காட்சிகள் அடங்கிய திரைப்படத்தை எங்களுக்குத் திரையிட்டு காட்டினார். காந்தியடிகள் நடத்திய உப்புச் சத்தியாகிரகம் உட்படப் பல்வேறு போராட்டக் காட்சிகள். உண்மையான காட்சிகள் என்பதால் அதைப் பார்ப்பவர்கள் மெய்சிலிர்த்துப் போவார்கள்.
படக்காட்சி முடிந்து தத்தா அவர்களுக்கு நன்றி கூறிவிட்டு நாங்கள் வெளியே வந்தபோது பிரபாகரன் உணர்ச்சி மேலிட்டிருந்தார். ‘’காந்தியப் போராட்டம் அகிம்சா போராட்டம் என்றாலும் கூட வெள்ளையரின் அடக்கு முறைகளை இன்முகத்துடன் ஏற்பதற்குத் தமது தொண்டர்களை அவர் தயாரித்த விதம் வியக்கதக்கது. இந்திய நாட்டிற்கு இந்த அகிம்சை முறை ஏற்றதாக இருந்தது. ஏனென்றால்,அந்நிய ஆட்சி அதை மதிக்க முன்வந்தது.
ஆனால் எங்கள் நாட்டில் முப்பதாணடு காலத்திற்கு மேலாக எங்களுடைய தலைவர்கள் காந்திய வழியில் நடத்திய அறப்போராட்டங்களை மதிப்பதற்குச் சிங்கள அரசுகள் முன்வரவில்லை. அதுமட்டுமல்ல… மட்டுமல்ல இராணுவ வன்முறையின் மூலம் எங்களை ஒடுக்குவதற்கும் முயற்சி செய்தன’’ என்று கூறினார் பிரபாகரன்.
அதே நேரம், நேதாஜியைத்தான் தனது வழிகாட்டியாக கொண்டிருந்தார் பிரபாகரன். அதை அவர் வெளிப்படுத்தி நிகழ்ச்சி, அடுத்த ஆண்டு.. அதாவது 1983ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி நடந்தது…
அந்த நிகழ்ச்சி…
(அடுத்த வாரம் சொல்கிறேன்..)