நேபாள தலைநகர் காத்மண்டுவில் உள்ள மிகவும் பிரபலமான ஆலயம், ஸ்ரீ அனந்த சயன நாராயணர் ஆலயமாகும். இது புத்த நீலகண்டர் ஆலயம் மற்றும் ஜல் நாராயண ஆலயம் என்றும் இங்குள்ள மக்களால் அழைக்கப்படுகிறது.

பொதுவாக பாற்கடலில் பள்ளிகொண்டிருப்பது போன்ற விஷ்ணு சிலைகளையும் படங்களையும் நாம் பார்த்திருப்போம். ஆனால் மனிதர்களைப் போல் மல்லாக்க படுத்துக்கொண்டு 13 நூற்றாண்டுகளாக நீரில் மிதந்துகொண்டிருக்கும் ஒரு அதிசய பெருமாள் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

சுமார் 14 அடியில் மிகவும் பிரமாண்டமாக ஒரே கல்லால் செய்யப்பட்டுள்ள இந்த சிலை எப்படி இவளவு வருடங்களாக நீரில் மிதந்தபடியே உள்ளது என்பது இன்றுவரை ஆராய்ச்சியாளர்களுக்கு புரியாத புதிராகவே உள்ளது.

இவ்வாலயத்தில் மகாவிஷ்ணு, குளத்தின் மையப் பகுதியில் பின்னி பிணைந்த நிலையில் உள்ள 11 தலை ஆதிசேஷனில் சயன கோலத்தில் காட்சி அளிக்கிறார். இயற்கை நீரூற்றின் மீது துயில் கொள்ளும் அனந்த சயன நாராயணர் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு மனதில் அமைதியை வழங்குவதற்காக இவ்வாறு காட்சி அளிப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

காத்மண்டுவில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் சிவபுரி மலை தொடரின் அடிவாரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் மையப் பகுதியில் அமைந்துள்ள பிரம்மாண்ட குளத்தில் 5 மீட்டர் நீளமுள்ள கருங்கல்லால் ஆன பாம்புகளின் மீது நீலகண்டர் சேவை சாதிக்கின்றார். இந்த மகாவிஷ்ணு சிலை ஒரே கருங்கல்லால் வடிவமைக்கப்பட்டதாகும்.

7 ஆம் நூற்றாண்டில் இந்த பகுதியை ஆண்ட விஷ்ணு குப்தா என்ற மன்னன் இந்த சிலையை நிறுவியதாக வரலாறு கூறுகிறது.