நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு, திமுக நிச்சயம் ஒற்றை இலக்கத்தில்தான் (அதிகபட்சம் 8) இடம் ஒதுக்கும் என்று பரவலாக நம்பப்பட்டு வந்த நிலையில், காங்கிரசுக்கே இன்ப அதிர்ச்சியாக இருக்குமோ! என்று பிறர் நினைக்கும் வகையில், இரட்டை இலக்கத்தில் (10 இடங்கள்) கொடுத்து ஒப்பந்தம் போட்டிருக்கிறார் திமுக -வின் புதிய தலைவர் ஸ்டாலின்.
‘அன்று தந்தை சறுக்கினார்; இன்று தனயனும் சறுக்கினார்’ என்றுகூட சில திமுக அபிமானிகள், தங்களின் உள்ளக்குமுறலை எழுத்து வடிவில் வெளிப்படுத்தினர்.
சரி, காங்கிரசுக்கு 10 இடங்கள் என்பது அதிகமா? சரியானதா? அல்லது குறைவா? என்று சிலரிடம் கேட்டால், அதிகம் என்று நினைத்தால் அதிகம்தான், குறைவு என்று நினைத்தால் குறைவுதான், சரியான எண்ணிக்கை என்று நினைத்தாலும் சரியானதுதான்! என்று பிரமாதமான(!) தத்துவத்தை உதிர்க்கிறார்கள். சரி, இனி இப்படியெல்லாம் மண்டையைக் குடைந்து கொண்டிருந்தால் சரிவராது. கேட்பவர்களிடமே நேரடியாக கேட்டுவிடுவதுதான் சரி என்று தோன்ற, சாலையில் சென்ற ஆட்டோவை சைகை செய்து அழைத்தேன். அந்த ஆட்டோவிற்கு நிர்ணயம் செய்யப்பட்ட இலக்கு சத்தியமூர்த்தி பவன். அரசியல் டிராஃபிக் அதிகம் நிலவும் இந்த தேர்தல் காலத்தில், எப்போது பார்த்தாலும் இந்த சாலை டிராஃபிக் இம்சை வேறு. கடந்து வருவதற்குள் தேர்தலே முடிந்துவிடும் போல!
சத்தியமூர்த்தி பவன் வளாகத்திற்குள்ளே ஒரு முக்கிய கதர் சட்டை நிர்வாகி தென்பட, அவரைப் பிடித்து, 10 இடங்களுக்குரிய நியாயம் குறித்து கேட்டேன். எடுத்த எடுப்பிலேயே சற்று ஆவேசமாய் தொடங்கினார். ‘நீங்கள் கேட்பதைப் பார்த்தால் அதிகம் என்பதுபோல் தெரிகிறதே! என்று என்னை சிறிய கேள்வியோடு பார்த்தவர், எங்களுக்கு இந்த 10 இடங்கள் என்பது குறைவு. 2009ம் ஆண்டு ஒதுக்கீட்டின்படியே இப்போதும் எதிர்பார்த்தோம். நாடாளுமன்ற தேர்தல் என்று வரும்போது, சில மாநிலங்களில் மாநிலக் கட்சிகள் என்னதான் வலிமையானவையாக இருந்தாலும், தேசிய கட்சிகள்தான் ‘கேம் பிளேயர்’ என்ற நிலையில் உள்ளன. தமிழகத்தில் அந்த நிலை சற்று கூடுதலாகவே உண்டு.
கடந்த 2014 தேர்தலில்கூட, மறைந்த ஜெயலலிதாவை பிரதமர் வேட்பாளர் என்று முன்னிறுத்தி திட்டமிட்டு பிரச்சாரம் செய்யப்பட்டதால்தான், அதிமுக என்ற மாநிலக் கட்சி அத்தனை இடங்களை வென்றது. மேலும், அந்தத் தேர்தலில், காங்கிரஸ் – திமுக இரண்டும் தனித்தனியாக நின்றதும், அப்போது ஏற்பட்ட பலமுனை போட்டியும் ஜெயலலிதாவின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம். அந்தத் தேர்தலில், தேர்தல் கமிஷனின் செயல்பாடுகளும்கூட, விமர்சனங்களை சந்தித்தன.
ஆனால், இப்போது நிலைமையே வேறாக உள்ளது. நரேந்திர மோடியின் அவல ஆட்சியிலிருந்து விடுபடுவதற்கான ஒரு இயல்பான மாற்றாக, காங்கிரஸ்தான் மக்களின் கண்முன்னே நிற்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை, அதிமுக -வை மிரட்டி அந்த அணியில் பாரதீய ஜனதா சேர்ந்துகொள்ளவில்லை எனில், அந்தக் கட்சியை இங்கே சீந்துவார் யாருமில்லை. ஆனால், காங்கிரசுக்கு தமிழகத்தில் ஆரம்பத்திலிருந்தே பலதரப்பிலும் வரவேற்பு இருந்தது உங்களுக்கு நிச்சயம் தெரியாமல் இருந்திருக்காது. டாக்டர்.ராமதாஸ், டி.டி.வி.தினகரன் மற்றும் கமலஹாசன் உள்ளிட்ட பலதரப்பிலும் எங்களைக் கூட்டணிக்கு அழைத்தனர். அதிமுக -கூட எங்கள் மீது விருப்பத்தில் இருந்தது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, சட்டமன்றத்துக்காக போட்டியிடும் இடங்களில் எங்களின் முக்கியத்துவத்தை நாங்கள் இழந்திருந்தாலும், நாடாளுமன்ற தேர்தலுக்கான போட்டியைப் பொறுத்தவரை, 1998 வரை நாங்கள்தான் வலிமையானவர்கள் என்பதை உணர வேண்டும். அந்த 1998 தேர்தலில், காங்கிரசின் ஒரு பிரிவான தமிழ் மாநில காங்கிரஸ், திமுக கூட்டணியில் 20 இடங்களில் (திமுக -வை விட 3 இடங்கள் அதிகம்) போட்டியிட்டது.
அந்த ஆண்டுவரை, இரண்டு பிரதான திராவிடக் கட்சிகளுமே, சட்டமன்றத்தில் தாங்கள் பெரும்பான்மை பெறுவதற்கேற்ப அதிக இடங்களை வைத்துக்கொண்டு, நாடாளுமன்றத்தில் எங்களுக்கு அதிக இடங்களைத் தந்துவிடுவர் என்பதே நீண்டகால மரபாக இருந்தது. ஆனால், 1998ம் ஆண்டு, பாரதீய ஜனதா வடிவில் நிலைமை மாறியது. ஒரு தேசிய கட்சிக்கும், வேறுசில சிறிய மாநிலக் கட்சிளுக்கும் சமமாக 5 இடங்களை ஒதுக்கி, முதன்முறையாக, தன் கட்சியை, தேசிய கட்சியைவிட அதிக இடங்களில் போட்டியிட வைத்து நிலைமையை மாற்றிவிட்டார் மறைந்த ஜெயலலிதா. தமிழகத்தில் முகவரி கிடைத்தால் போதும் என்ற பரிதாப நிலையிலிருந்த பாரதீய ஜனதாவை வைத்து, காங்கிரசின் முக்கியத்துவத்தை அவர் குறைத்துவிட்டார். பின்னாளில் இந்தப் புதிய விதியை, திமுக -வும் பயன்படுத்திக்கொண்டது என்பதை மறுக்க முடியாது.
காங்கிரசுக்கென்று தமிழகத்தில் எப்போதுமே ஒரு தனி மவுசும் கவர்ச்சியும் உண்டு. அதுவும் நாடாளுமன்ற தேர்தலில் அது மிக அதிகம்’ என்று தொடர்ந்த அவர், என்னை தேநீர் அருந்த அழைத்துச் சென்றார். தேநீர் விருந்தில் அவரின் பேச்சுத் தொடர்ந்தது. ‘கடந்த 2009 நாடாளுமன்ற தேர்தலில், அதிமுக -வின் பெரிய கூட்டணியை (அதிமுக, பாமக, மதிமுக, கம்யூனிஸ்டுகள்), நாங்களும் திமுக -வும் சேர்ந்து, விடுதலை சிறுத்தைகளை மட்டுமே வைத்துக்கொண்டு முறியடித்தோம். அந்நேரத்தில் ஈழப் பிரச்சினை எந்தளவிற்கு தீவிரமாக இருந்தது என்பதும் உங்களுக்குத் தெரியும்.
ஏதோ, சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநில தேர்தல்களில் வென்றுள்ளதால் மட்டுமே காங்கிரசின் மவுசு கூடிவிட்டதாக சிலர் பேசுகிறார்கள். ஆனால் அந்த மாநிலங்கள் மட்டுமா? கேரளம், கர்நாடகம், கோவா, மராட்டியம், குஜராத், பஞ்சாப், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், அஸ்ஸாம், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள், டெல்லி, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 18க்கும் மேற்பட்ட மாநிலங்களில் நாங்கள் மிகவும் வலுவான கட்சி. இவற்றில் பெரும்பான்மையான மாநிலங்களில், எங்களுக்கும் பாரதீய ஜனதாவுக்கும்தான் நேரடியான போட்டியே.
மேலும், பீகார், உத்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்களிலும் எங்களுக்கு கணிசமான செல்வாக்கு உண்டு என்பதை மறுக்க முடியாது. 2004ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், பீகாரில் எங்களோடு இணைந்து போட்டியிட்டு, சீட்டுகளை அள்ளிய லாலுவால், 2009ல் எங்களை தவிர்த்துவிட்டு, எதையும் செய்ய முடியவில்லை என்பதும் உங்களுக்கு நினைவிருக்கலாம். 2009 தேர்தலில், உத்திரப் பிரதேசத்தில், ராகுலின் செல்வாக்கால் 22 இடங்களை அள்ளினோம்! மாநிலப் பிரிவினைக்கு முன்பாக, ஒருங்கிணைந்த ஆந்திராவில் நாங்கள் கோட்டை கட்டி கோலோச்சியவர்கள்!
ஒட்டுமொத்தமாக பார்க்கையில், பாரதீய ஜனதாவுக்கு தென்மாநிலங்கள் பெரிய போராட்டம் என்றால், அது எங்களுக்கு எப்போதுமே கை கொடுக்கும் களமாகவே இருந்து வருகிறது. இந்த மாநிலங்களில், நாங்கள் மக்களுடைய இயல்பான தேர்வாக உள்ளோம்! இந்த நிலை, நாடாளுமன்ற தேர்தல் என்று வருகையில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறும்.
அப்படி இருக்கையில், சிலர் சொல்வதைப்போல், திமுக -வால் எப்படி ஒற்றை இலக்க இடங்களைப் பற்றி நினைக்க முடியும்? தமிழ்நாட்டில் பலதரப்பாரும் விரும்பும் ஒரு கட்சியாக நாங்கள் இருக்கையில், 10 சீட்டுகள் என்பது குறைவே. மாநிலத்தின் குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே செல்வாக்கை வைத்திருக்கும் பா.ம.க போன்ற ஒரு கட்சிக்கு 7 மக்களவை இடங்களோடு சேர்ந்து, 2 மக்களவைக்கு சமமான ஒரு ராஜ்யசபா இடத்தையும் சேர்த்து எதிரணி தருகிறபோது, காங்கிரசைப் போன்ற ஒரு பிரமாண்ட தேசிய கட்சிக்கு 10 இடங்கள் என்பது மிகக் குறைவே.
தமிழகத்தின் வடக்கு, மத்திய மற்றும் தென் மண்டலத்தில் மட்டுமல்ல, மேற்கு மண்டலத்திலும் நாங்கள் குறிப்பிடத்தக்க சக்தியாக திமுக -வுக்கு துணைபுரிவோம். கடந்த 2006 முதல் 2011 வரையான திமுக ஆட்சி காலத்தில், வெறுமனே 96 இடங்களை மட்டுமே வைத்து ஆட்சி நடத்திய திமுக -வுக்கு, தனது 34 எம்.எல்.ஏ -க்களின் ஆதரவை, கூட்டணி அரசமைக்கும் வாய்ப்பிருந்தும், எந்தவித நிபந்தனையுமின்றி காங்கிரஸ் அளித்து வந்ததே, அதைப்போன்று வேறு யார் செய்வார்கள்? எங்கள் தலைவர் ராகுல் காந்தியை, முதன்முதலாக தேசிய அளவில், பிரதமர் வேட்பாளராக அறிவித்த திமுக -வுக்கு நாங்கள் நன்றிகடன் பட்டுள்ளோம் என்பதை மறுக்கவில்லைதான். அதேசமயம், அந்த அறிவிப்புக்கு அரத்தம் சேர்க்கும் வகையிலும் இடங்கள் இருக்க வேண்டுமல்லவா! இப்போது சொல்லுங்கள், 10 இடங்கள் அதிகமா? அல்லது குறைவா?’ என்று அவர் கேள்வியை என் பக்கமாக திருப்பியபோது, தேநீர் பருகி முடித்து அதிகநேரம் ஆகியிருந்தது.
அந்த காங்கிரஸ் பிரமுகர், என்னிடம் இறக்கி வைத்த சுமையை சுமந்துகொண்டு, அறிவாலயம் புறப்பட்டேன். அதேசமயம், டிராஃபிக் பிரச்சினைகள் இல்லாமல், விரைவாகவே வந்துவிட்டேன். அங்கே, தென்மண்டல திமுக நிர்வாகி ஒருவர் தென்பட்டார். அவரிடம் 10 சீட் நியாயம் குறித்து கேட்டபோது, பெரியளவில் முகபாவனைகள் இன்றி, சாதாரணமாகவே பேசினார். ‘காங்கிரஸ் கட்சிக்கு சிங்கிள் டிஜிட் இடங்களே போதுமென்றாலும், தற்போதைய தமிழக சூழல் மற்றும் அகில இந்திய சூழல் ஆகிய அனைத்தையும் மனதில் வைத்தே, தலைமை இந்த முடிவை எடுத்திருக்கிறது என்று கருதுகிறேன். ஏனெனில், எங்களை காங்கிரசும், காங்கிரசை நாங்களும் புறக்கணிக்க முடியாத நிலையிலேயே இருக்கிறோம். எனவே, இதைப்பற்றி பெரிதாகப் பேசுவதற்கு ஒன்றுமில்லை’ என்று மிகச் சுருக்கமாக முடித்துக்கொண்டார்.
நல்லவேளை, இவரும் தன் பங்கிற்கு பெரிய சுமையை இறக்கி என் மீது வைத்துவிடுவாரோ என்று மிரண்ட எனக்கு, இப்போது பெரிய நிம்மதி!
வந்தது வந்துவிட்டோம். அப்படியே, மதிமுக, விசிக, இரண்டு கம்யூனிஸ்டுகளின் அலுவலகங்கள் வழியாகவும் சற்று காத்தாட உலவிடலாம் என எண்ணி, அப்பக்கம் சென்றேன். ‘காங்கிரசுக்கு 10 இடங்களா! அப்படியெனில் நாம் என்ன சும்மாவா! திமுக -வை விடக்கூடாது’ என்ற ஆவேச முனகல்கள், காற்றின்போக்கில் என் காதுகளில் வந்து விழுந்ததை அப்படியே மூளை விழுங்கிக் கொண்டது.
வீட்டிற்கு வந்து கணிப்பொறியின் முன்னே, கண்களை குத்திட்டு ஆழ்ந்த யோசனையில் அமர்ந்திருந்த எனது கையில் தட்டிய என் மனைவி, ‘ஏங்க, போய் வெளியில தண்ணி புடிச்சி வைச்சிருக்கிற குடத்த எடுத்துவந்து வீட்டுக்குள்ள வைங்க. என்னமோ, நாடாளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி கட்சிங்களுக்கு சீட் பிரிச்சி தரப்போற வேலையில இருக்குற மாதிரி இப்புடி பிரமைப் பிடிச்சி உட்கார்ந்திருக்கீங்க!’ என்று சொல்லிவிட்டுப் போக, சுளீரென உறைத்து சுதாரித்தவனாக, அட நமக்கென்ன! நான் என்ன திமுக -வின் புதிய தலைவர் ஸ்டாலினா? என எண்ணியவாறு எழுந்து வாசலுக்கு நகர்ந்தேன்.
– மதுரை மாயாண்டி