தனியார் தொலைக்காட்சியில் பிரபலமான “சொல்லுவதெல்லாம் உண்மை” நிகழ்ச்சியின் இயக்குநராக இருந்த  சரவணன் ( Saravanan Chandran) அவர்களின் முகநூல் பதிவு இது. தலைப்பை மட்டும் படித்தவிட்டு இது நகைச்சுவை கலந்த ஆபாசப்பதிவு என்ற முடிவுக்கு வந்துவிடாதீர்கள். நீளமான இந்த கட்டுரை, தற்போதைய சமுதாயத்தின் பாலியல் குறித்த பார்வை குறித்து அலசுகிறது.  வேண்டுமென்றேதான் படம் எதுவும் இல்லாமல் பிரசுரிக்கப்படுகிறது.   படித்துப்பாருங்கள்… 
“எனது கணவரை ஆறு முறை வெவ்வேறு வகைகளில் என்னுடைய கள்ளக்காதலருடன் சேர்த்து கொலை செய்ய முயன்றேன் என்றார் என் எதிரில் இருந்த பெண்மணி. ‘அய்யயோ! பொழச்சுட்டாருல்லயா?’ என்று கேட்ட கேள்விக்கு உதட்டைப் பிதுக்கினார் அந்தப் பெண்மணி. மனம்தளராத அவர்களின் ஆறாவது முயற்சியில், அந்தக் கணவர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டார்.
கொல்லப்பட்ட அந்தக் கணவர் பள்ளித் தலைமையாசிரியர். மனைவி கணக்கு டீச்சர். கொலைக்கு உதவியாக இருந்த கள்ளக் காதலரும் கணக்கு டீச்சர்தான். எப்படி இருவரும் மாட்டிக் கொண்டார்கள்? நாகப்பட்டினத்தில் கணவரை யாருக்கும் தெரியாமல் கள்ளக் காதலர் கொலை செய்த போது டீச்சர் யாருக்கும் சந்தேகம் வந்துவிடக் கூடாது என்பதற்காக சென்னைக்கு இன்பச் சுற்றுலாவிற்கு வந்திருந்தார் அவரது குடும்பத்தோடு. கணவர் இறந்து விட்டார் என்ற செய்தி கிடைத்ததும் எல்லோரும் ஊருக்கு அடித்துப் பிடித்து காரில் கிளம்பிப் போய்க் கொண்டிருந்த போது டீச்சர் ஒரு ஹோட்டலைப் பார்த்துவிட்டு காரை நிறுத்தச் சொல்லி இருக்கிறார்.  “ரெண்டு தோசையைப் பிச்சுப் போட்டுட்டுப் போயிடலாம்” என்று சொன்னதைப் பார்த்த பிறகு குடும்பத்தினருக்கு ஏற்கனவே விஷயம் அரசல் புரசலாகத் தெரிந்திருந்ததால், டீச்சரை அடித்துத் துவைத்துக் காயப் போட்டதில், உண்மையை ஒத்துக் கொண்டு விட்டார்.
கோடிக்கணக்கான மக்கள் பார்க்கும் நிகழ்ச்சியில் வைத்து கணவரை எப்படியெப்படியெல்லாம் கொலை செய்ய முயன்று இறுதியில் வெற்றி பெற்றோம் என்பதை டீச்சர் விளக்கிய போது டி.ஆர்.பி ரேட்டிங் எகிறியது. கலாச்சாரக் காவலர்கள் பலர் கையில் கத்தியோடும் கடுமையான வார்த்தைகளோடும் சுற்றினார்கள். சமூகத்தில் இதையெல்லாம் காட்டக் கூடாதென கொதித்து எழுந்தார்கள். ஏன் இதெல்லாம் நடக்கிறது என்பதற்கான பதிலை மட்டும் யாரும் சொல்லத் தயாராக இல்லை.
நான் டீச்சரிடம், “பிடிக்கவில்லையென்றால் விவகாரத்து வாங்கியிருக்கலாமே. அவரைக் கொலை செய்கிற அளவிற்குச் சென்றிருக்க வேண்டுமா?” என்று கேட்டேன்.
“கள்ளக்காதலரும் வேண்டும். குழந்தையும் வேண்டும். கணவர் சம்பாதித்த சொத்தும் வேண்டும். என்ன செய்வது. புத்தி பிசகி விட்டது” எனக் கொலைக்கான காரணத்தை நேர்மையாக ஒத்துக் கொண்டதை நீங்கள் எல்லோரும் பார்த்திருப்பீர்கள்.
இந்தத் தலைமுறை கள்ளக்காதலுக்காக கொலை செய்யுமா? என்று கேட்டுப் பார்த்தால் இல்லையென்றுதான் உடனடியாகச் சொல்லத் தோன்றுகிறது. மரத்தைச் சுற்றிச் சுற்றி டூயட் பாடும் காலத்தைச் சேர்ந்தவர்களைத்தான் இந்தக் கள்ளக்காதல் பொதுவாக எளிதாக ஈர்க்கிறது. இந்தத் தலைமுறை சுட்டுப் போட்டாலும் அந்தத் தவறை செய்யாது என்றுதான் தோன்றுகிறது. அடுத்தவன் காதலியையோ மனைவியையோ காதலரையோ ஏறிட்டுப் பார்ப்பது தவறு என்கிற தலைமுறையைச் சேர்ந்தவர்கள்தான் கள்ளக்காதலுக்கும் மிக முக்கிய இடத்தைத் தந்து கொண்டிருக்கிறார்கள். அதைக் கொண்டாடவும் செய்கிறார்கள்.
ஒரு உறவில் உள்ளே நுழைவதற்கான வழி எவ்வளவு எளிதானதாக இருக்கிறதோ, அவ்வளவு எளிதான வாய்ப்பு வெளியேறுவதிலும் இருக்க வேண்டும். அதுதான் மிகச் சிறந்த உறவாக இருக்க முடியும். சென்ற தலைமுறைக்கு வெளியேறும் வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. வாழ்ந்தாலும் செத்தாலும் ஒரே நபருடன்தான் என்கிற யானை கால் சங்கிலி வலுவாக பிணையப்பட்டிருப்பதால் மூச்சுத் திணறுகின்றனர். ஆனால் இந்தத் தலைமுறைக்கு உறவிலிருந்து வெளியேறும் வாய்ப்பு எளிதாகவே கிடைக்கிறது.
இதைத் தவறு என்று ஒருபோதும் நினைப்பதில்லை. மயக்கமென்ன படத்தில் தனுஷ் தன் உயிர் நண்பனின் காதலியைக் கவரும் போது, அவர் அதுகுறித்து எந்தக் குற்ற உணர்வையும் வைத்துக் கொள்வதில்லை என்பதைக் கவனித்துப் பார்த்திருக்கிறீர்களா?
இன்றைய தலைமுறை ஒரு உறவு முடிந்த அடுத்த நாளோ அல்லது அந்த உறவின் பிற்பகுதியிலோ அடுத்த உறவிற்கு உடனடியாகத் தயாராகி விடுகிறார்கள். செண்டிமெண்ட் பார்த்து தாடியோடோ அழுது வீங்கிய கண்களோடோ ஆண்டுக் கணக்கில் காத்திருப்பதில்லை. எளிதில் இன்னொரு உறவு கிடைக்கும் என்று உத்தரவாதம் இருக்கிற பட்சத்தில் எதையும் மறைத்து மறைத்துச் செய்யும் கடந்த காலத் தலைமுறை போல் இருப்பதில்லை.
எனக்குத் தெரிந்த இன்றைய தலைமுறைப் பெண் ஒருவர் காதலித்தார். காதலரைப் பிரிந்து இன்னொரு காதல் செய்தார். இப்போது அந்தக் காதலர், இந்தக் காதலர், இப்போது காதலர் காதலிக்கும் பெண் எல்லோரும் ஒரே வீட்டில் குடித்தனம் நடத்துகிறார்கள். அவர்களுக்கு இதில் எந்தவிதச் சிக்கல்களும் இல்லை. எல்லாவற்றையும் எளிதாகக் கடந்து போகும் பக்குவம் இந்த விஷயத்தில் இந்தச் சின்னவயதிலேயே வாய்த்திருப்பதைத் தவறு என்று எத்தனை காலத்திற்கு சொல்லிக் கொண்டிருக்கப் போகிறோம்? ஏற்கனவே காதல் இருந்ததைச் சொல்லும் ராஜா ராணி போன்ற படங்களெல்லாம் ஹிட்டடிக்கிறது என்றால் அதற்குப் பின்னால் செயல்படும் மனநிலையையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாம் இன்னும் மௌனராகத்தையே மீட்டவில்லை. பழைய காதலிகளைப் பொது இடத்தில் பார்த்தால் கட்டிப் பிடித்து கன்னத்தோடு கன்னம் சேர்த்து வரவேற்புக் கொடுக்கும் பக்குவம் வந்திருப்பதை எல்லோரும் ஏன் வெறியோடு பார்க்க வேண்டும்.
நம்முடைய அந்தக் கால பலவீனங்களை மறைப்பதற்காக இது போன்ற பக்குவம் கைவரப் பெற்றவர்களுக்கு ‘பேட் பாய்’ இமேஜைக் கொடுத்துத் திருப்திப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அந்த மனநிலையைப் புரிந்து கொள்வதற்கு அவர்களின் தலைமுறையின் மனநிலை நோக்கி திறந்த மனதுடன் உங்களை முன்னகர்த்த வேண்டும்.
பழைய தலைமுறையைச் சேர்ந்தவர்களிடம் ஒரு கேள்வி எழுப்புகிறேன். மனதைத் தொட்டுச் சொல்லுங்கள். உங்களது கணவரையோ அல்லது மனைவியையோ கொலை செய்து விட வேண்டும் என்று என்றாவது ஒரு கணத்தில் நீங்கள் நினைத்திருக்கிறீர்களா? இல்லையா?
கொலை செய்ய வேண்டும் என்று நினைத்த அடுத்த கணம், ‘என்னம்மா பிபி டேப்ளட் எல்லாம் ஒழுங்கா போடுறீயா’ எனக் கேட்கும் போலித்தனமான கரிசனத்தை வைத்து எவ்வளவு காலம் ஓட்டப் போகிறோம்.
நாகப்பட்டினம் டீச்சர் அதைத்தான் சொன்னார். கணவருக்கு தவறாமல் தோசை சுட்டுக் கொடுத்தார். கள்ளக்காதலருக்காக அந்தத் தோசையில் மறக்காமல் மயக்க மருந்தையும் கலந்து கொடுத்தார். ஆனால் இந்தத் தலைமுறை தெளிவாக இருக்கிறது. அதற்கு இந்தக் குடும்பம் என்கிற அமைப்பும் அவசியம். அதேசமயம் அந்தக் குடும்பம் என்கிற அமைப்பிற்கு எந்தளவிற்கு வளைந்து கொடுக்கலாம், கொடுக்கக்கூடாது என்பதிலும் தெளிவிருக்கிறது. வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை அடியாழமாக நினைக்கும் இந்தத் தலைமுறை எதற்காக கொலை செய்ய வேண்டும் என்கிற கேள்வியை ஆழமாக எழுப்புகிறது. பிடிக்காவிட்டால், அமர்ந்து பேசி பிரிந்து விடலாம் என்று முடிவுக்கு வருகிறவர்களை கலாச்சாரத்தைக் கெடுப்பவர்களாகப் புரிந்து கொண்டால் எப்படி?
சமீபத்திய புள்ளி விபரம் ஒன்றில் இந்தியாவிலேயே அதிகம் தற்கொலைகள் செய்து கொள்வது ஆண்கள் என்றும் அதில் அதிகம் தற்கொலை செய்வது திருமணமான ஆண்கள் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. என்ன காரணம் என்று என்றாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? குடும்ப வன்முறைதான் தற்கொலைகளுக்குக் காரணமாகச் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. இதைப் பற்றி உங்களால் வெளிப்படையாகக்கூட பேசமுடியாது. ஆணாதிக்க முத்திரை குத்தி உங்களை மூலையில் அமர்த்தி விடுவார்கள்.
ஆணாதிக்கம்-பெண்ணாதிக்கம் என்று பேசுவதெல்லாம் பழங்காலத்திய வழக்கமாக ஆகிக் கொண்டிருக்கிறது. உறவுகளுக்குள் சுதந்திரம், சகிப்புத்தன்மை இல்லாமல் போய்க் கொண்டிருப்பதைத்தான் நாம் தீவிரமாகப் பரிசீலனை செய்ய வேண்டியிருக்கிறது. பிடிக்காவிட்டாலும், வாழ்ந்தே ஆகவேண்டிய நெருக்கடியை குடும்பம் என்கிற அமைப்புத் தொடர்ந்து கொடுத்தபடியே இருக்கிறது. எங்களுடைய நிகழ்ச்சிக்கு இன்னொரு குடும்பம் வந்தது. என்ஜினியர் ஒருவர் வீடு கட்டுகிறார். எதிர் வீட்டில் இருக்கும் பெண்மணியுடன் அவருக்கு உடல் ரீதியிலான தொடர்பு ஏற்பட்டு விட்டது. அந்த என்ஜினியருக்கும் திருமணமாகி குழந்தைகள் இருக்கின்றன. இந்தப் பெண்மணிக்கும் இருக்கின்றன. இரண்டு பேரும் ஒருநாள் வீட்டை விட்டு வெளியேறி நிகழ்ச்சிக்கு வந்துவிட்டார்கள். கள்ளக்காதலர்களை பூந்தோட்டக்காரன் விஜயகாந்த் மாதிரி சேர்த்து வைக்க வேண்டுமாம்!
குழந்தைகள் தனித்தனியாக இரண்டு பேரையும் அழைக்கின்றன. அவர்கள் போக மறுக்கின்றனர். இரண்டு கணவரும் அடித்துக் கட்டிப் புரண்டு சண்டையிடும்போதுகூட யாரும் மனம் மாறவில்லை. “எங்களை விட்டுருங்களேன். எங்களை விட்டுருங்களேன்” என அந்தப் பெண் கடைசி வரை புலம்பியபடி அழுது கொண்டிருந்தார். குடும்ப மானம் என்கிற முதல் அஸ்திரத்தை அவர்கள் வீசினார்கள். அந்தப் பெண் மசியவில்லை. சொத்துப் பத்துக்கள் என இரண்டாவது அஸ்திரத்தை வீசினார்கள். அதற்கும் அந்தப் பெண் மசியவில்லை. கடைசியாக அவர்கள் குழந்தைகள் என்கிற பிரம்மாஸ்திரத்தை வீசினார்கள். அதற்கும் அந்தப் பெண் மசியவில்லை. அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக பிய்த்துக் கொண்டு போய் அந்தக் கணவருடன் சேர்த்து வைத்தால் என்னவாகும்?
ஒருநாள் அந்தப் பெண் தனது கணவருக்குக் கலந்து தரும் காபியில் விஷத்தைக் கலப்பார். அல்லது அந்த கள்ளக் காதலர் தனது மனைவியை மாடியிலிருந்து தள்ளிவிட்டு விட்டு விபத்து என ஜோடித்து மாட்டிக் கொண்டு சிறைக்குப் போவார்.
அதற்காக இருவரையும் சேர்த்து வைக்கச் சொல்லவில்லை. இரண்டு உயிர்கள் பலியாவதைத் தடுப்பது எப்படி என்கிற கேள்வியை மட்டுமே எழுப்புகிறேன். பரஸ்பர அன்பு, புரிதல் இல்லாத உறவுகளுக்குள் தொடர்ந்து கட்டாயத்தின் பேரில் இருக்க வேண்டுமா என்கிற கேள்வியைத்தான் இப்போது உலகம் முழுக்க எழுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.
திருமணம் என்பதே இரண்டு பெரிய குடும்பங்களுக்கு இடையில் நடக்கப் போகும் பெரும் யுத்தத்திற்கான துவக்கப் புள்ளி என்கிற மாதிரி ஆகி விட்டது. யுத்தம், போர்நிறுத்தம், மீண்டும் யுத்தம், வரதட்சணை வழக்குகள் என தீராத துயரத்தோடு பலருக்குத் தொடர்கிறது வாழ்க்கை. ஓய்வு பெற்ற ராணுவவீரர் ஒருவர் உசிலம்பட்டியில் வைத்து மனைவியின் குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரை நடுரோட்டில் வைத்து வெட்டியும் சுட்டும் கொன்ற செய்தியை நாளிதழ்களில் நீங்கள் கவனித்திருப்பீர்கள். அந்தக் கொலைக்கு அவர் காரணமாகச் சொன்னது இதுதான். “என்னை அவர்கள் நிம்மதியாக வாழவிடவில்லை. தொடர்ந்து என் மீதும் ஒன்றும் அறியாத எந்தப் பாவமும் செய்யாத என் குடும்பத்தின் மீதும் வழக்குகளைத் தொடுத்துக் கொண்டே இருந்தார்கள். எனக்கு விவகாரத்து அளிக்கவும் மறுத்தனர். என்னுடைய குழந்தையையும் என் கண்ணில் காட்டாமல் மறைத்து வைத்தனர்” என்றார். பிடிக்காவிட்டால், விவகாரத்துச் சனியனைக் கொடுத்துத் தொலைந்திருக்கலாமே? ஆறு உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்குமே?
சட்டத்தை வளைத்து இது போலான யுத்த நடவடிக்கைகளில் ஈடுபடும் போதுதான் எதிர் தாக்குதல்கள் இப்படியாக கொடூரமாக அமைந்து விடுகின்றன. ஏதோ ஏற்பாடு செய்யப்பட்ட திருமணத்தில் மட்டுமே இப்படி அமைவதில்லை. பத்துவருடம் காதலித்து மணம் புரிந்தவர்களிடம் இருந்துகூட இப்படியான எதிர்வினைகள் வருவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. பரஸ்பர உடல் கவர்ச்சி, அதைத் தாண்டிய அன்பு மட்டுமே உறவுகளைப் பிணைத்து வைக்க முடியும் என்பதை எப்படிச் சொல்லிப் புரிய வைப்பது? உதாரணத்திற்கு நீங்கள் உலக அழகனாகவோ உலக அழகியாகவோ இருங்கள். ஒரே அறையில் ஒரு வார காலம் இருவரும் சேர்ந்து இருந்து விட்டு வெளியே வரும் போது, உலகத்திலேயே அதிகம் வெறுக்கப்படும் நபர் அந்த எதிர் பாலினமாகத்தான் இருக்கும். உடல் கவர்ச்சியைத் தாண்டிய அன்பு என்பது பழகப் பழகத்தான் வரும். அவர்களை குடும்பங்கள் திருமணத்திற்குப் பிறகும் நச்சுக்களை அவர்கள் மேல் சுமத்தி பழகவிடாமல் தவிர்க்கும் போதுதான், மேலோட்டமான உறவாக அது அமையும் போதுதான் இதுபோன்ற கொலைகள் விழுகின்றன.
இந்தத் தலைமுறை இதைச் சரியாகப் புரிந்து வைத்திருக்கிறது. குடும்பம் என்கிற அமைப்பு உடைபடும் நேரம் வந்துவிட்டது என்பதை அவர்கள் சரியாகக் கணிக்கிறார்கள். தங்களது உடல் தேவையை மிக முக்கியமானதாக அவர்கள் முன்னிறுத்துகிறார்கள். செக்ஸ் வைத்துக் கொள்ளும் போது பாதுகாப்பாக இருங்கள் என்று சொன்ன குஷ்பு மீது வழக்குப் போடச் சொல்லி, இன்றைய தலைமுறையிடம் கேட்டுப் பாருங்கள். முகத்தில் காறி உமிழ்ந்து விடுவார்கள். அவர்கள் உறவின் சேர்க்கைக்குக் கொடுக்கும் முக்கியவத்துவத்தை உறவின் பிரிவிற்கும் கொடுக்கிறார்கள். நான், என்னுடைய சுதந்திரம், என்னுடைய சுகம் என்பதில் தெளிவிருப்பதால்தான், காதல் முறிவிற்குப் பிறகும் நண்பர்களாக அவர்களால் குடித்தனம் நடத்த முடிகிறது. இப்படியான பக்குவம் பெற்ற அவர்களைத்தான் பலரோடு உறவு கொள்ளும் நாயோடு ஒப்பிட்டு நம்மை நாமே திருப்திப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
முதலிரவில் மனைவியின் காதல் பற்றி கேட்டு மனம் பேதலித்துப் போய் சாராயக்கடையில் போய் குத்துப்பாட்டு பாடும் ஹீரோக்களைப் போல உங்களை நீங்கள் நினைத்துக் கொண்டால், இந்தத் தலைமுறையோடு உங்களை இணைத்து வாழ்வதென்பது சாத்தியமற்றதுதான். காதல் இல்லாவிட்டால் கள்ளக்காதல் என்கிற வகைமைகளுக்குள்ளே நம்முடைய வாழ்க்கை அடங்கிவிட்டது. புரோட்டா சாப்பிடுவதைக்கூட குற்றவுணர்வுடனேயே செய்து பழக்கமாகிவிட்ட தலைமுறைக்கு, குற்ற உணர்வுகளே இல்லாத ஒரு தர்க்கப்பூர்வமான மனநிலையைப் புரிந்து கொள்வதில் சிக்கல்கள் இருக்கின்றன என்பது புரிகிறது.
ஆனால் எத்தனை காலத்திற்குத்தான் மனைவியுடன் இருக்கும் போது மனதுக்குப் பிடித்த பெண்களைக் கற்பனையில் உலவவிடும் போலித்தனத்தோடு இருக்கப் போகிறோம் என உங்களுக்கு நீங்களே கேள்வி எழுப்பிக் கொள்ளுங்கள். ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் மனநிலையுடன் உங்களது பாலியல் கற்பனைகளுக்கு பாத்ரூம் மட்டுமே ஒரே தீர்வாக எத்தனை காலம் இருக்கப் போகிறது. மனைவியை விவகாரத்து செய்யலாம். குழந்தைகளை எப்படி விவகாரத்து செய்வது என நீங்கள் கேள்வி எழுப்பலாம். அதையும் அமர்ந்து பேசுவோம் என்றுதான் சொல்கிறேனே தவிர, இந்த வாழ்க்கை முறையை உங்களுக்குப் பரிந்துரைக்கவில்லை. எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயமான காலகட்டத்தில் நின்று கொண்டிருக்கிறோம் என்பதையாவது புரிந்து கொள்ளுங்கள்.
அன்பை மட்டுமே முன்னிறுத்திய ஒரு வாழ்க்கை முறையை வடிவமைக்க வேண்டிய தேவை வந்துவிட்டது. சக உயிரினத்திடம் சகிப்புத் தன்மையைக் குடும்பங்கள் ஆரம்பத்திலிருந்தே குழந்தைகளுக்கு கற்றுத் தருவதில் ஆரம்பிக்கிறது இந்த வாழ்க்கை முறை. எனக்கு இந்த உறவில் செக்ஸ் உட்பட என்ன தேவை என்பதை வெளிப்படையான விவாதத்திற்கு வைக்கும் உயரிய இடத்திற்கு இன்றைய தலைமுறை நகர்ந்து விட்டதை அறியாமல், நாம் இன்னமும் மரத்தைச் சுற்றி டூயட் பாடிய காலகட்டத்திலேயே உறைந்து போய்விட்டோம். நான் கிளம்பியாக வேண்டியிருக்கிறது. என்னுடைய காதலிக்கு மட்டும் பிரியாணி ஆர்டர் செய்து விட்டுக் காத்திருக்கிறேன். கள்ளக்காதலி? பிரியாணியில் விஷத்தை வைத்து என்னுடைய காதலி என்னைக் கொன்றே போடுவாள். ஊருக்கு மட்டுமே உபதேசம் என்கிற அந்தத் தலைமுறையைச் சேர்ந்தவன்தான் நானும் என்பதை நினைவில் நிறுத்துங்கள்.”