திருநெல்வேலி:
தென் மாவட்டங்களைப் பொறுத்தவரை பெரும்பாலான கலவரங்களுக்கு ஆரம்ப விதையாக இருப்பது சிலைகள்தான். தலைவர்களின் சிலைக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால், அந்த தலைவரின் சாதியைச் சேர்ந்தவர்கள் கொதித்தெழுந்து அதகளப்படுத்திவிடுவார்கள்.
அப்படி ஒரு பதட்டமான சூழல் நேற்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் நிகழ்ச்சியில் ஏற்பட்டது. ஆனால் வைகோ தலையிட்டதால் எந்தவித பிரச்சினையும் ஏற்படாமல் அமைதியாக நிகழ்ச்சி முடிந்தது.
திருநெல்வேலி மாவட்டம்,செவல்குளம் கிராமத்தில்,திராவிட இயக்க முன்னோடியும்,கூட்டுறவு சங்கத் தலைவரும்,மதிமுகவின் தொண்டருமான இராமசுப்புவின் நினைவஞ்சலி நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.
நிகழ்ச்சி துவங்கும் முன் அங்கிருந்த தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து விட்டு மேடைக்கு வந்தார் மதிமுகபொதுச்செயலாளர் வைகோ. அப்போது முழு போதையில் வந்த ஒருவர் வைகோ மாலை போட்டதை தவறாகப் பேசியதோடு, கற்களால் தாக்கவும் செய்தார்.
இதையடுத்து அங்கே குழுமியிருந்த ம.தி.மு.க. தொண்டர்கள் ஆவேசமானார்கள். உடனடியாக வைகோ தலையிட்டு அவர்களை அமைதிப்படுத்தினார். “கற்களை வீசியவனை எதுவும் செய்ய வேண்டாம், விட்டுவிடுங்கள்….அமைதியாகஇருங்கள்: என்று கேட்டுக் கொண்டார். இதனால், பெரும் கலவரம் தவிர்க்கப்பட்டது.
இந்த சம்பவத்தை, ஊடகங்களுக்கும் தெரிவி்க்க வேண்டாம் என்றும் தனது தொண்டர்களை வைகோ கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.