சென்னை

நாளை கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள 7 தமிழர்களை விடுவிக்க திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்

கடந்த 1991 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் தலைவருமான ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதலில் மரணம் அடைந்தார்.   அது தொடர்பாக நடந்த வழக்கின் தீர்ப்பில் 7 பேர் ஆயுள் தண்டனைப் பெற்று இதுவரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  இவர்களை விடுவிக்கப் பலரும் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.    ஆனால் அரசு இவர்களை விடுவிக்கவில்லை.

இதையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உச்சநீதிமன்றம் ஏற்கனவே கொரோனா பரவலை மனதில் கொண்டு சிறைவாசிகளை விடுதலை செயலாம் என வழிகாட்டுதல்கள் வெளியிட்டுள்ளது.  மேலும் ஜூன் 3 ஆம் தேதி அன்று கருணாநிதி பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளது.

கருணாநிதி சிறைத்துறையினர் உரிமைகள் போன்றவற்றில் முற்போக்கு பார்வை கொண்டிருந்தார்.   எனவே அவர் பிறந்தநாளையொட்டி 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை காலத்தைக் கழித்துள்ள இஸ்லாமியர்கள், வயது முதிர்ந்தோர், நோய்வாய்ப்பட்டவர்கள், பிற கைதிகள் மற்றும் ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவிக்கும் 7 தமிழர்கள் ஆகியோரை விடுதலை செய்ய வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.