
தனது மகன் கார்த்தியிடமிருந்து கணக்கில் காட்டப்படாத சொத்து ஏதும் கண்டுபிடிக்கப்பட்டால் அதை ஒரு ரூபாய்க்கு அரசுக்கு விற்க தயார் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம் குறித்து அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையின் தொடர்ச்சியாக, முன்னாள் மத்திய நிதி அமைச்சரின் மகனும், காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான கார்த்தி சிதரம்பரம் நடத்தி வரும் நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, கார்த்தி சிதம்பரம் 14 வெளிநாடுகளில் கோடிக்கணக்கான அளவுக்கு முதலீடு செய்திருப்பதா தெரியவந்ததாக ஆங்கில நாளேட்டில் செய்தி வெளியானது.
இந்நிலையில் இதுதொடர்பாக ப.சிதம்பரம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“கடந்த சில நாள்களுக்கு முன்பு எனது மகன் கார்த்தி சிதம்பரம் மீது பல பொறுப்பற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இது திட்டமிட்டு வெளியிடப்பட்ட செய்தி என்பதை அனைவரும் அறிவர்.
கார்த்தி சிதம்பரம் குடும்பச் சொத்துகளை நிர்வாகம் செய்து வருவதோடு பல முறையான வணிக நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். பல ஆண்டுகளாக முறையாக வருமான வரியையும் செலுத்தி வருகிறார். வருடம் தோறும் வருமானம் மற்றும் சொத்துகள் குறித்த விவரங்களை தாக்கல் செய்து வருகிறார்.
அவரது சொத்துக்கள், மூதலீடுகள் குறித்த விவரங்கள் அனைத்தும் வருமான வரி தாக்கலின் போது இணைக்கப்படுகின்றன.
கார்த்தி சிதம்பரத்திடம் மறைக்கப்பட்ட சொத்து ஏதும் இல்லை. வருமான வரித் துறை மற்றும் பிற அரசு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே அனைத்து வணிகங்களையும் கார்த்தி மேற்கொண்டு வருகிறார். பல சொத்து விவரங்களை கார்த்தி மறைத்துவிட்டார் என்பது மிகவும் தவறானது.
கார்த்தியிடம் மறைக்கப்பட்ட சொத்து ஏதும் இருந்தால் அதுகுறித்த விவரங்களை மத்திய அரசு தாராளமாக வெளியிடலாம். அப்படி ஏதும் இருந்தால் அவற்றையெல்லாம் ஒரு ரூபாய்க்கு அரசிடம் விற்பதற்கு தயாராக இருக்கிறார்.
கார்த்தி எனது மகன் என்பதாலேயே குறிவைக்கப்பட்டுள்ளார். ஆனால்,நான்தான் அவர்களுக்கு உண்மையான இலக்கு.
இந்த செய்தி வெளியான நேரமும், இதற்கு பின்னால் இருக்கும் அரசியல் நோக்கத்தையும் என்னால் அறிந்து கொள்ள முடிகிறது. இதை வெளியிட்டவர்கள் மீது என்னால் பரிதாபம் மட்டுமே கொள்ள முடிகிறது. இறுதியில் சத்தியமே வெல்லும்” என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார் சிதம்பரம்
Patrikai.com official YouTube Channel