download
.தி.மு.கவில் இன்று(ம்) ஒரு அதிரடி நடந்திருக்கிறது.  முன்னாள் துணை சபாநாயகர் வரகூர் அருணாசலம், வேளச்சேரி பகுதி செயலர் எம்.கே.அசோக் எம்எல்ஏ உள்பட ஐந்து பேரை கட்சி பொறுப்பில் இருந்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அதிரடியாக நீக்கி இருக்கிறார்.
இவர்கள் அத்தனை பேரும் “அ.தி.மு.கவின் நம்பர் 2” என்று கருதப்படுகிற  நிதியமைச்சர் ஓபிஎஸ்-ஸின் தீவிர ஆதரவாளர்கள் என்பதுதான் ஆச்சரிய, அதிர்ச்சி விசயம். .
தமிழக சட்டப்பேரவை தேர்தல்  நெருங்கி வரும் வேளையில்,  தனது கட்சியில் களை எடுக்கும் வேலையில் தீவிரமாக இறங்கி இருக்கிறார் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா.
முன்னாள் துணை சபாநாயகர் வரகூர் அருணாசலத்தை  அனைத்துலக எம்ஜிஆர் மன்ற பொறுப்பாளர் பதவியில் இருந்து நீக்கியிருக்கிறார்: தேனி மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலர் எல்லப்பட்டி முருகன், திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர செயலர் கே.மாரியப்பன், . பழனி நகர கழக செயலராக வி.முருகானந்தம், தென் சென்னை தெற்கு மாவட்டம் வேளச்சேரி பகுதி செயலர் பொறுப்பில் இருந்து வந்த எம்.கே.அசோக் எம்எல்ஏ .. என்று ஜெ.வின் அடித்தல் லிஸ்ட் நீளமானது.
மீனவர் பிரிவு துணைச் செயலராக இருக்கும் டி.ரமேஷூம் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.
இந்த நீக்கப் பட்டியலில்  உள்ள அத்தனை பேருமே, ஓபிஎஸ்-ஸின் ஆதரவாளர்கள்தான்.
மந்திரி சபையிலும் கட்சி மட்டத்திலும் ஜெ.வுக்கு அடுத்தபடியாக இருப்பவர் என்று, சொல்லப்படுபவர் ஓ. பன்னீர்செல்வம். கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவிலும் முக்கியமானவர். அவரது  ஆதராவளர்கள் மீதே ஒழுங்கு நடவடிக்கை எடுக்க காரணம் என்ன?
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் சமீபத்தில் விருப்ப மனுக்கள் வாங்கப்பட்டது. அ.தி.மு.கவைப்  பொறுத்தவரையில் நேர்காணல் நடத்தி வேட்பாளர்களை அறிவிப்பது  என்பதெல்லாம் கிடையாது. கட்சி முக்கியஸ்தர்கள் அல்லது அமைச்சரவை சகாக்களைக்கூட ஆலோசிக்காமல், தானாகவே முடிவெடித்து வேட்பாளர்களை அறிவிப்பதுதான் ஜெ.வின் ஸ்டைல்.
அதே நேரம், உளவுத்துறையின் ரிப்போர்ட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பார். அந்த உளவுத்துறையால்தான் ஓ.பி.எஸ். ஆதரவாளர்களுக்கு வில்லங்கம்  ஏற்பட்டது.
சமீபமாக  அமைச்சர் ஓபிஎஸ் வீட்டில்  கட்சிக்காரர்கள் கூட்டம்கூட்டம்  அதிகமாகிக்கொண்டே வந்தது.  ஏன் இந்த அலைமோதல் என்று அறிய, உளவுத்துறையை ஏவினார் ஜெ.
வரும் தேர்தலில் நிற்க விருப்பமனு கொடுத்தவர்கள்தான், ஓ.பி.எஸ். வீட்டுக்கு படையெடுக்கிறார்கள் என்று ரிப்போர்ட் கொடுத்தது உ.து.
இதைத் தொடர்ந்தே ஓபிஎஸ்-ஸின் ஆதரவாளர்களை கட்சி பொறுப்பில் இருந்து  கட்டம் கட்டினார் ஜெயலலிதா.
அதே நேரத்தில் வேறு காரணங்களும் சொல்லப்படுகின்றன.
முன்னாள் துணை சபாநாயகர் வரகூர் அருணாசலம் சமீபத்தில் சசிகலாவின் கணவர் நடராஜனை சந்தித்து பேசியதாலும்,  எம்.கே.அசோக் எம்எல்ஏ, டி.ரமேஷ் ஆகியோர் கட்சி சீனியர்களையும் மதிக்காததாலும் நீக்கப்பட்டனர் என்கிறார்கள்.  .
தேனி மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலர் எல்லப்பட்டி முருகன், திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர செயலர் கே.மாரியப்பன் ஆகியோர், ஜெயலலிதா நூறாண்டு காலம் வாழ  வேண்டும் என்ற வேண்டுதலுடன் தைபூசத்தையொட்டி பழனிக்கு பாதயாத்திரை சென்றனர்.  அப்போது, ‘போர்படைத் தளபதி சசிகலா’ என்று ஒரு பெரிய பேனர் வைத்தார்களாம். இதுதான் இவர்கள் நீக்கத்துக்கு காரணமாகிவிட்டது   என்கிறார்கள்.
மொத்தத்தில் ஓ.பி.எஸ்ஸூக்கு இது எச்சரிக்கை மணி என்பதாகவே கட்சியில் பேசப்படுகிறது. அதே நேரத்தில், “அம்மா சொன்னாங்க.. அம்மா சொன்னாங்க.. என்று சொல்லியே சக மாண்புமிகுக்களைக்கூட அதிகாரம் செய்து வந்த ஓ.பி.எஸ்.ஸூக்கு இது சரியான தண்டனைதான்” என்ற குரல்களும் கட்சியில் ஒலிக்கின்றன.