புதிய பகுதி: ஊடக குரல்
பலரது எண்ணங்களை, கருத்துக்களை வெளிக்கொண்டுவருவது ஊடகர்களின் பணி.   அந்த ஊடகரின் கருத்துக்கள், எண்ணங்களை வெளிப்படுத்தும் பகுதி இது.
ஊடகத்துறை மேல் அவர்களுக்கு ஈர்ப்பு ஏற்பட காரணம்,   இந்தத் துறையில் என்ன சாதிக்க விரும்புகிறார்கள், இன்றைய ஊடக நிலை போன்ற பல கேள்விகளுக்கு பதில் பெறுவதே நமது நோக்கம்.
இந்த பகுதியின் முதல் பேட்டியாக, புதிய தலைமுறை தொலைக்காட்சியின் மூத்த ஆசிரியர் (சீனியர் எடிட்டர்)  வேங்கடபிரகாஷ் அவர்களது பேட்டி வெளியானது.
அடுத்ததாக, இப்போது கலைஞர் தொலைக்காட்சியில் சிறப்புச் செய்தியாளராக பணிபுரியும் சுகிதா அவர்களின் பேட்டி வெளியாகிறது:

செய்தியாளர் சுகிதா
கலைஞர் டிவி சிறப்பு செய்தியாளர் சுகிதா

ஊடகத்துறையில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி?
வீட்டில் அப்பா ,இரண்டு அக்கா மற்றும் இரண்டு அண்ணன்கள் எல்லோருக்கும் அனைத்து தினசரி வார இதழ்கள் படிக்கும் பழக்கம் உண்டு .குறிப்பாக விகடன் வாசகர் குடும்பம் எங்களுடையது .அதன் மூலம் ஊடகத்துறை மீது ஆர்வம் வந்தது. பள்ளி காலங்களிலேயே வார இதழ்கள் மட்டுமல்லாது முழு நீள நாவல்கள் குறிப்பாக ராஜேஷ்குமார் ,ரமணிசந்திரன் தொடங்கி கண்மணி ,மாலைமதி வரை அனைத்தையும் படிக்கும் பழக்கம் ஏற்பட்டது.இன்னொரு பக்கம் அம்புலி மாமாவும் படிப்பேன் .. வீட்டிற்கு வாங்கும் மளிகை பொருட்கள் கட்டப்பட்டிருக்கும் பேப்பர் வரை படிக்கும் பழக்கம் உண்டு ..9 ம் வகுப்பில் தினத்தந்திக்கு ஒரு பக்க கதை போட்டியில் பங்கேற்க முயற்சித்து பரிசுகளும் வாங்கி உள்ளேன். பிறகு பள்ளி கல்லூரிகளில் பேச்சுப் போட்டி,கட்டுரைப் போட்டி , சிறுகதைப் போட்டி அனைத்திலும் பங்கேற்று பரிசுகளை வெல்வேன் . இப்படித் தான் ஊடகத்துறை மீது ஆர்வம் ஏற்பட்டது .
இதுவரையிலான உங்கள் ஊடக பயணம் பற்றி சொல்லுங்களேன்…
2000 மாவது ஆண்டு கல்லூரி நண்பர்கள் சேர்ந்து தொடங்கிய பட்டாம்பூச்சி இதழ் தொடங்கி விகடன் ,குமுதம்,குங்குமம் ,பராசக்தி உட்பட பல வார இதழ்களில் ஃபிரிலான்ஸ் பத்திரிக்கையாளராக பல கட்டுரைகளை வெளிக்கொண்டு வந்தேன் .. முழு நேர ஊடகவியலாளாராக 2007 ல் தினமலரில் தொடங்கிய பயணம் சன் தொலைக்காட்சி பிறகு கலைஞர் தொலைக்காட்சி என்று பயணம் சென்றுக் கொண்டிருக்கிறது. சிற்றிதழ்களில் அவ்வப்போது எழுதி வருகிறேன் . ஒரு காதலும் ஒரு சொம்பு தண்ணிரும் என்று கவிதை தொகுப்பும் ,சமுகமும் தேசிய விருப்பமும் என்ற கட்டுரை தொகுப்பும் வெளிவந்துள்ளது.
ஒரு ஊடகவியலாளரின் அடிப்படை தகுதி என எதை நினைக்கிறீர்கள்?
தினமும் பத்திரிக்கைகள் வாசிப்பது, துறை ரீதியான புரிதலும் தொடர்ந்து தன்னை மேம்படுத்திக் கொள்ளுதலும் அவசியம் தேவை.. தினமும் செய்திகள் சார்ந்து வாசிப்பு மட்டுமே முக்கியத்தகுதியாக பார்க்கறேன் . சமூகநீதி , கல்வி உரிமை ,குழந்தை உரிமை ,பெண்ணுரிமை,சட்டம் ஒழுங்கு ,பொருளாதாரம் ,விளையாட்டு,சர்வதேச அரசியல் என்று அனைத்து துறை சார் நிபுணர்களுடன் அவ்வப்போது துறை குறித்த கேட்டறிவதும் அவசியம்.. ஒரு பத்திரிக்கையாளர் எப்போதும் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் ,விளிம்பு நிலை பக்கம் நின்று பார்ப்பது அவசியம்.
3ஒருவர்  ஆபத்தில் இருக்கும் நேரத்தில் காப்பாற்றாமல் படம் எடுக்கிறார்கள் என்று  ஊடகத்தினர் மீது குற்றச்சாட்டு உண்டு. உங்கள் பார்வை என்ன?
இன்றைக்கும் பெரும்பாலான இடங்களில் மனிதம் என்பது ஏட்டளவிலே தான் இருக்கிறது..பத்திரிக்கையாளர்கள் இதில் விதிவிலக்கல்ல ..பத்திரிக்கையாளரோ ,புகைப்படக்காரரோ தங்கள் பணிகளை செய்கிறார்கள் ..அதனை பதிவு செய்வதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கலாம் .விழிப்புணர்வு ஏற்படலாம் . ஆனால் எத்தனையோ விபத்துகளில் பொதுமக்கள் அதனை கடந்து நமக்கு எதுக்கு வம்பு என்று போகும் போக்கு இருக்கிறது ..இன்னும் சில இடங்களில் மனிதம் மிச்சம் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தியது சென்னை பெருவெள்ளம்.இதில் பத்திரிக்கையாளர்கள் செய்தி சேகரித்த சவாலைத் தாண்டி பல உயிர்களை காப்பாற்றவும் செய்தார்கள். மக்களிடம் பெரும் மாற்றம் பொது நலன் மீது திரும்பும் போது இது போன்ற குற்றச்சாட்டுகள் ஒன்றும் இல்லாமல் ஆகிவிடும்.
தனிப்பட்ட முறையில் நிகழ்ச்சி நெறியாளருக்கும் விருப்பு வெறுப்புகள் இருக்கும். அதை நிகழ்ச்சியில் வெளிப்படுத்தாமல் இருப்பது அவசியம். ஆனால் இது அனைவராலும் முடியுமா..?
கண்டிப்பாக நிகழ்ச்சி நெறியாளர் ஆகட்டும் ,பத்திரிக்கையாளர் ஆகட்டும் தனக்கு ஏற்புடைய கருத்துகளை திணித்தல் என்பது ஒரு கால கட்டத்தில் அவர்களை வெளிச்சமிட்டு காண்பித்து விடும் . மற்றொன்று இன்றைக்கு அனைத்து ஊடகங்களுக்கும் நிர்வாக ரீதியாக ஒரு கொள்கை இருக்கும் .அதனை மீறாமல் பார்க்கும் போது பத்திரிக்கையாளரின் தர்க்கங்கள் சில நேரங்களில் அடிப்பட்டு போகும் . ஆனால் அறத்தோடு நீதியின் பக்கம் ஒரு பத்திரிக்கையாளர் முழுவதுமாக நிற்பது அதுவும் இன்றைய இந்திய ஊடக அரங்கில் பெரும் சவால் . அந்த சவாலில் மக்களின் பக்கம் குறைந்த பட்சம் யார் நிற்கிறார்களோ அது தான் இன்றைக்கு சிறந்த பத்திரிக்கையாளருக்கான வரையறை என்று சுறுக்கிக் கொள்ளலாம் .
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இறுதி கால கட்டத்தில் அவர்கள் கொண்டு வந்த பல்வேறு பொருளாதார கொள்கைகள் மக்களுக்கு உகந்தததாக இல்லை அப்போது கடுமையாக நான் விமர்சித்தேன்..என்னை காங்கிரஸ் எதிர்ப்பாளர் என்று சொன்னார்கள் ..இப்போது பாஜகவின் இந்துத்தவா மற்றும் பொருளாதார கொள்கைகளில் காங்கிரஸ் தயங்கி செய்ததை கூட தன்னிச்சையான முடிவுகளில்  பாஜக தடாலடியாக செய்கிறது ..இதனையும் கடுமையாக எதிர்க்கிறேன்..இப்போது பாஜக எதிர்ப்பாளர் என்று சொல்கிறார்கள் ..நான் யார் என்பதை பார்க்கும் மக்கள் தான் புரிந்துக் கொள்ள வேண்டும் .என்னுடைய நிகழ்ச்சியான மக்களின் குரலைப் போன்று மக்களின் பக்கம் நிற்கும் பத்திரிக்கையாளராக இருக்கவே விரும்புகிறேன்.
நடுநிலை என்று ஒன்று கிடையாது. அநியாயம் செய்தவரையும்,  பாதிக்கப்பட்டவரையும் கலைஞர் டிவி சிறப்பு செய்தியாளர் சுகிதா சமமாகவைத்து, வாய்ப்பு கொடுக்கும் இந்த நடுநிலை அநீதியே என்று ஒரு கருத்து உண்டு. உங்கள் கருத்து?

எனக்கும் நடுநிலை மீதெல்லாம் நம்பிக்கை கிடையாது. தமிழகத்தை பொருத்தவரை கட்சி சாரா ஊடகம் என்ற பதம் வேண்டும் என்றால் சரியாக இருக்கலாம் . அதனால் அத்தகைய ஊடகங்கள் மக்களிடம் எளிதில் சென்றுவிட முடியும் .. ஆனால் மத ரீதியாக ,சாதி ரீதியாக, ஊடக உரிமையாளர்கள் செய்யும் தொழில் ரீதியாக என்று பல்வேறு காரணிகள் ஒவ்வொரு ஊடகத்தின் செய்தி வடிவத்தின் அளவுகோலை , செய்தியாளர்களை , ஆசிரியர்களை, நிகழ்ச்சி நெறியாளர்களை ,நிகழ்ச்சியில் பங்கேற்கும் விருந்தினர்களை தீர்மானிக்கின்றன. இதை எல்லாம் தாண்டி கட்சி சாரா ஊடகங்கள் மக்களிடம் ஒரு நம்பிக்கையை விதைத்திருக்கிறது என்பது உண்மை ..அதையும் தாண்டி கட்சி சார்பு நிலை உள்ள ஊடகமாக கலைஞர் தொலைக்காட்சி இருந்தும் பல செய்திகளில் என்னால் சுதந்திரமாக செயல்பட முடிந்திருக்கிறது. அதனால் தான் மக்கள் பார்வையில் கட்சிசாரா ஊடக நிகழ்ச்சி நெறியாளர்கள் பட்டியலில் என்னைப் போன்றவர்களையும் கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள் .

24 மணி நேர செய்தி சேனல்கள், இணைய இதழ்கள் தேவையில்லை என்று ஒரு கருத்து
உள்ளது. இவற்றால் தேவையற்றவை எல்லாம் செய்தி அந்தஸ்து பெறுகின்றன என்பதற்கு தங்கள் பதில்?

எது தேவை என்பதும் எது தேவையற்றது என்பதும் சூழலும் காலமும் தான் முடிவு செய்கிறது. எனக்கு சன் தொலைக்காட்சியில் உலக செய்திகள் தொகுக்கும் நிகழ்ச்சி கொடுக்கப்பட்ட காலத்தில் ..உலக செய்திகள் தானே என்று தான் எல்லோரும் நினைத்தார்கள் ..ஆனால் தக்காளி திருவிழா போன்ற செய்திகளை காட்சிகள் வண்ணமயமாக இருக்கிறது என்பதற்காக அது போன்ற செய்திகளை பயன்படுத்துவார்கள் .ஆனால் உண்மை என்னவென்றால் ஸ்பெயினில் தக்காளி அதிகம் விளையும்  நிலையில் அங்கு பண்பாட்டு ரீதியாக கொண்டாடும் திருவிழா அது..உலக செய்திகள் நிகழ்ச்சியை தொகுக்கும் போது உலக நாடுகளில் வரலாறு முதல் பல்வேறு விஷயங்கள் தெரிந்துக் கொள்ள முடிந்தது. 
இப்படி ஒவ்வொரு செய்திக்கு பின்னால் உள்ள தேடல் தான் அந்த செய்தியின் தன்மையை உணர வைக்கிறது . செல்போனில் பல்வேறு செய்தி சார்ந்த ஆப்ஸ்களில் வந்து உள்ளங்கைக்குள் கொட்டும் தகவலையும்,சமூக வலைதளங்களின் வீச்சையும்  பார்க்கும் போது 24 மணி நேர செய்திகள் என்பது ஒன்றுமே இல்லை என்று தான் தோன்றுகிறது.. இன்றைய காலகட்டத்தில் கட்டற்ற சுதந்திரத்தை சமூக வலைதளங்கள் தந்துள்ளன.இது ஒரு வகையில் பத்திரிக்கையாளர்கள் மீதான மதிப்பை ,மரியாதையை,நம்பிக்கையை கொஞ்சம் குறைத்திருக்கிறது என்றுக் கூட சொல்லலாம். இருப்பினும் நான் இந்த பணியை அவ்வளவு நேசிக்கிறேன் . ஊரிலிருந்து பத்திரிக்கையாளராக வேண்டும் என்று வந்த அந்த கனவு இன்னும் விரிவடைந்துக் கொண்டே தான் இருக்கிறது . ஒரு போதும் ஏன் இந்த வேலைக்கு வந்தோம் என்று நினைத்ததும் இல்லை .. இதை விட வேற என்ன பெரியவேலை என்ற மனநிலையில் தான் மற்ற துறை சார்ந்த வல்லுனர்களை கடந்து வருகிறேன்..
அச்சிதழ்களைவிட, தொ.கா. ஊடகம்தான் சிறப்பானதா?
அரசியல் என்பது பெண்களுக்கு தொடர்பில்லாதது என்ற நிலைதான் பெரும்பாலும் இன்றும் நிலவுகிறது. ஓட்டுப்போடுவதோடு பெண்களின் கடமை முடிந்துவிடுகிறது. இந்த நிலையில் அரசியல் விவாதங்கள் நடத்தும் உங்கள் உணர்வு என்ன
வளரும் இதழாளர்களுக்கு உங்களது அறிவுரை, வழிகாட்டல்கள் என்ன..
இன்னும் சில கேள்விகள்.. சுகிதாவின் பதில்கள்..  இன்று மாலை…