kapurthala
அதிமுக ஆட்சியில் எவ்வளவு முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டன? ஒப்புதல் வழங்கப்பட்ட முதலீடுகளில், எத்தனை கோடி ரூபாய்க்கான முதலீடுகள் செயலாக்கத்திற்கு வந்துள்ளன? எத்தனை தொழில்கள் தொடங்கப்பட்டு எத்தனை பேருக்கு வேலை வாய்ப்புகள் தரப்பட்டுள்ளன? என்பது குறித்து ஜெயலலிதா விளக்கம் அளிப்பாரா? என திமுக தலைவர் கலைஞர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’ 2015ஆம் ஆண்டு செப்டம்பர் 9, 10 ஆகிய நாட்களில், சென்னை மாநகரில், தமிழக அரசின் சார்பில் 100 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டு, மிகப் பெரிய விளம்பர ஆரவாரத்தோடு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை முதலமைச்சர் ஜெயலலிதா நடத்தினார். அதில் முதலமைச்சர் ஜெயலலிதா பேசும்போது,
“இந்திய நாட்டில், தமிழ்நாடு மிக முன்னேற்றமான, தலைசிறந்த, அனைத்துத் தொழில் திறன்களிலும் வெற்றி பெறுகின்ற புகழ் மாநிலமாகத் திகழ்கிறது. இந்தியாவில் உள்ள பல்வேறு தொழில்திறன்களில், தமிழ்நாடு முதல் மாநிலமாகத் திகழ்கிறது. வெளிநாட்டு நேரடி முதலீட்டை அதிகமாகப் பெறுகின்ற மூன்றாவது மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது” என்று குறிப்பிட்டார்.
முதலமைச்சர் ஜெயலலிதாவின் பேச்சில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது உண்மைக்குப் புறம்பான தகவல்கள் எந்த அளவுக்கு இடம் பெற்றிருக்கின்றன என்பது பற்றி, “டைம்ஸ் ஆப் இந்தியா” ஆங்கில நாளேடு “Tamil Nadu fails to turn proposals into Investments” என்ற தலைப்பில்
இன்று (31-3-2016) வெளியிட்டுள்ள அதிர்ச்சியூட்டும் விவரம் வருமாறு :-
“Tamil Nadu is slipping badly in converting investment proposals into tangible investments. Though Rs. 61,550 crore was proposed to be invested in the State between 2013 and 2015, actual investments were a meagre Rs. 5,293 crore, the worst among 10 large States. (Department of Industrial Policy and Promotion data showed) Data shows Tamil Nadu lagging behind many States, including late bloomers such as Madhya Pradesh and Rajasthan. In fact, actual investments into TN came at a measly Rs. 501 crore in 2015, also the lowest among these large States”
(மத்திய அரசின் தொழில் கொள்கை மற்றும் தொழில் மேம்பாட்டு அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிவர அறிக்கையின்படி, முதலீடுகளுக்கான கருத்துருக்களைச் செயலாக்கத்தின் மூலம் உண்மையிலேயே முதலீடுகளாக மாற்றி அமைத்திடும் முயற்சியில் தமிழ்நாடு பெரும் தோல்வி கண்டுள்ளது. 2013, 2014, 2015 ஆகிய மூன்றாண்டுகளில் 61,550 கோடி ரூபாய் முதலீடுகளுக்கான கருத்துருக்கள் பெறப்பட்டிருந்தாலும், உண்மையில் முதலீடாக இறுதியில் கிடைத்தது வெறும் 5,293 கோடி ரூபாய் மட்டுமே! இந்தியாவில் உள்ள பத்து பெரிய மாநிலங்களில் தொழில் முதலீடுகளில் மிக மிக மோசமான நிலை தமிழ்நாட்டில் தான் நிலவுகிறது. புள்ளி விவரத்தில் உள்ளபடி, அண்மையில் வளர்ந்து வரும் மாநிலங்களாகக் கருதப்படும் மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போன்ற பல மாநிலங்களோடு ஒப்பிடும்போது, தமிழ்நாடு மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. உண்மையிலேயே 2015ஆம் ஆண்டு தமிழகத்திற்கு வந்த முதலீடு எவ்வளவு என்று பார்த்தால், அது வெறும் 501 கோடி ரூபாய் மட்டுமே! தொழில் முதலீடுகளைப் பொறுத்தவரையில் பெரிய மாநிலங்களில், இந்தியாவிலேயே ஆகக் கடைசியில் உள்ள மாநிலம் தமிழகம்தான்.)
“டைம்ஸ் ஆப் இந்தியா” நாளேடு மேலும் எழுதும்போது, “கடந்த செப்டம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் இறுதியில் 2 இலட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய்க்கான முதலீடுகள் தமிழகத் திற்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. 2013 – 2015ஆம் ஆண்டுகளில் கர்நாடகம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகத்தைக் காட்டிலும் பின்தங்கிய நிலையில் இருந்தாலும், உண்மையிலேயே செயலாக்கத்தின் காரணமாக அந்த மாநிலங்களுக்கு வந்திருக்கும் முதலீடுகளின் அளவைப் பார்த்தால், தமிழகத்தைக் காட்டிலும் பல மடங்கு முன்னணியில் இருக்கின்றன. அந்தக் காலக் கட்டத்தில் ஆந்திர மாநிலத்திற்கு வந்திருக்கும் முதலீட்டின் அளவு 12,367 கோடி ரூபாய். கர்நாடக மாநிலத்திற்கு வந்திருக்கும் முதலீட்டின் அளவு 21,000 கோடி ரூபாய். தமிழ்நாட்டைக் காட்டிலும் மிகக் குறைந்த முதலீடுகளை ஈர்த்து வந்த மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் தமிழ்நாட்டை விட மிக வேகமாக முன்னேறியிருக்கின்றன.
வழக்கமாகவே தொழில் வளர்ச்சியில் பின்தங்கியிருக்கும் உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் 2013-2015 என்ற இந்த மூன்றாண்டு காலக் கட்டத்தில் தமிழ்நாட்டை விட அதிக முதலீடுகளை ஈர்த்திருக்கின்றன. தமிழ் நாடு தொடர்ந்து தொழில் வளர்ச்சியில் மிக மோசமான பின் தங்கிய நிலையில் இருப்பதற்குக் காரணம், புரிந்துணர்வு ஒப்பந்தப்படி தொழிற்சாலைகள் ஏற்படாமல் போனதே! 2013 – 2015 காலக் கட்டத்தில் முதலீடுகளை ஈர்த்ததில், முதல் மாநிலமாக குஜராத் (62,423 கோடி ரூபாய்) மாநிலமும், அதற்கு அடுத்தபடியாக மராட்டிய (55,144 கோடி ரூபாய்) மாநிலமும் விளங்குகின்றன” என்றெல்லாம் மத்திய அரசின் புள்ளி விவரம் தெரிவிப்பதாக எடுத்து எழுதியுள்ளது.
ஆனால் தமிழக அரசும், குறிப்பாக அதன் முதல் அமைச்சரும் என்னென்ன கூறினார்கள்? முதலீட்டாளர்கள் மாநாட்டில் 2,42,160 கோடி ரூபாய்க்கான முதலீடு பெறப்பட்டதாக முதலமைச்சர் ஜெயலலிதா தொழில் அதிபர்களையெல்லாம் வைத்துக் கொண்டு பெருமையோடு அறிவித்தார். ஒவ்வொரு முதலீட்டிற்கும் 30 நாட்களுக்குள் ஒப்புதல்கள் வழங்கப்படும் என்று அந்த மாநாட்டில் ஜெயலலிதாவே உறுதி கூறினார். அவ்வாறு கூறி 30 நாட்கள் அல்ல, ஆறு மாதங்கள் ஓடி விட்டன. உறுதியளித்தபடி எவ்வளவு முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டன?
ஒப்புதல் வழங்கப்பட்ட முதலீடுகளில், எத்தனை கோடி ரூபாய்க்கான முதலீடுகள் செயலாக்கத்திற்கு வந்துள்ளன? எத்தனை தொழில்கள் தொடங்கப்பட்டு எத்தனை பேருக்கு வேலை வாய்ப்புகள் தரப்பட்டுள்ளன? முதலமைச்சர் ஜெயலலிதா தமிழ் நாட்டு மக்களுக்கு இனியாவது விளக்கம் அளிப்பாரா?’’என்று கேள்வி எழுப்பியுள்ளார்.