திருச்சி:

திருச்சி தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தை மைதானத்தில் நீட் தேர்வு எதிர்ப்பு பொதுக்கூட்டத்தில் டிடிவி தினகரன் பேசுகையில், ‘‘ மறைந்த முதல்வர் ஜெயலலிதா தனது கடைசி மூச்சு வரை நீட் தேர்வு வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்தார். சமூக நீதியில் இந்தியாவில் முதலிடம் வகிப்பது தமிழ்நாடு. 69 சதவீத இட ஒதுக்கீட்டை அவர் பெற்றார்.

2005ம் ஆண்டில் மருத்துவம், பொறியியல் சேர்க்கைக்கு தேர்வு தேவை இல்லை என அன்றே அகற்றி கட் ஆப் மதிப்பெண் முறை கொண்டு வந்த காரணத்தால் தான் கிராம புற ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மாணவர்கள் படிக்கும் நிலை ஏற்பட்டது.

2013ம் ஆண்டில் கூட உச்சநீதிமன்றத்தில் நீட் வேண்டாம் என்றார். தமிழகத்தில் இன்று நடைபெறுவது துரோக ஆட்சி ஜெயலலிதா பாதையிலிருந்து பிரிந்து தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. நீட் தேர்வுக்கு விலக்கு என சொன்னதால் தான் அனிதா மரணம் போன்ற துயர் சம்பவங்கள் நடந்தது’’ என்றார்.

மேலும், அவர் பேசுகையில், ‘‘இது போன்ற தற்கொலைகள் தொடரக்கூடாது என்பதால் மத்திய அரசு அவசரச் சட்டம் இயற்ற வலியுறுத்தி தான் இந்த கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் நடைபெறுகின்ற ஆட்சி ஜெயலலிதா ஆட்சி அல்ல. சசிகலா, எம்ஜிஆர் ஆட்சியை உருவாக்க தான் ஓபிஎஸ் முதல்வராக்கப் பட்டார்.

ஆனால் ஓ.பி.எஸ் தி.மு.க.வோடு சேர்ந்து செயல்படுகிறார் என எடப்பாடி பழனிச்சாமி, சசிகலாவிடம் கூறினார். இதனால் தான் சசிகலா முதல்வராக பதவி ஏற்க சம்மதித்தார். உச்சநீதிமன்ற தீர்ப்பால் சசிகலாவால் முதல்வராக பதவியேற்க முடியாமல் போனது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நீதிமன்றத்தில் நிச்சயம் நீதி கிடைக்கும்.

ஈபிஎஸ், ஓபிஎஸ் இணைப்பிற்கு பிறகு சசிகலா நீக்கப்படுவார் என சொன்ன காரணத்தால் ஆளுநரை சந்தித்தோம். அவரிடம் முறையிட்டும், எடப்பாடி 117 உறுப்பினர் நம்பிக்கையை இழந்து விட்டதாகவும் கூறியும் பலனில்லை. கவர்னர் கவர்னராக செயல்படுகிறாரா? அல்லது எடப்பாடியின் அவைத் தலைவராக செயல்படுகிறாரா? என்ற கேள்வி எழாமல் ஆளுநர் எடப்பாடியை அறுதிப் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும்’’ என்றார்.

தொடர்ந்து தினகரன் பேசுகையில், ‘‘நாம் தி.மு.க.வோடு கை கோர்க்க முடியாது. ஆட்சி கவிழ்ந்த பிறகு எப்போது தேர்தல் வந்தாலும் வெற்றி பெறுவோம் இது சபதம். அது தான் ஒன்றரை கோடி தொண்டர்களின் மனநிலையும் உள்ளது. மீண்டும் எடப்பாடி அறுதிப் பெரும்பான்மையை நிரூபிக்கும் சூழலை உருவாக்கி அனைத்து அமைச்சர்களும் வீட்டுக்குப் போவது உறுதி.

பிப்ரவரி 14ம் தேதி அன்று சசிகலா நினைத்திருந்தால் என்னை முதல்வராக்கியிருக்க முடியும். எங்களுக்கு பதவி முக்கியமில்லை. எடப்பாடி கொங்கு மண்டலம், ஜாதியை சொல்லி பேதம் உருவாக்க பதவியில் ஒட்டிக் கொள்ள விரும்புகிறார். ஜெயலலிதா ஆட்சியை அமைக்க உறுதியேற்க வேண்டும். சமூக நீதி காக்க மத்திய அரசு தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

அதிமுகவை காப்பாற்ற 21 பேர் போராளிகளாக இருக்கிறார்கள். பழனியப்பன், செந்தில் பாலாஜி மீதும் பொய் வழக்கு போடப் பட்டுள்ளது. அதில் பழனியப்பன் ஜாமீன் வாங்கி விட்டார். அதிமுகவை காப்பாற்ற போராடுகிற எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்துவிட்டு மெஜாரிட்டியை நிரூபிக்க முயல்கிறார்கள். நீதிமன்றம் இருப்பதையே மறந்து விட்டு செயல்படுகிறார்கள். நிச்சயம் சட்ட மன்ற உறுப்பினர்கள் அனைவரும் எடப்பாடியை தோற்கடித்து அவர்களை வீட்டுக்கு அனுப்புவார்கள்’’ என்றார்.