டிடிவி, திமுகவுக்கு ஆதரவாக டில்லி காங்கிரஸ் வழக்கறிஞர்கள்!

Must read

சென்னை,

டிடிவி தினகரன் சார்பாக ஐகோர்ட்டில் வாதாட பிரபல வழக்கறிஞர்கள் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் காரணமாக, தமிழக அரசு, சபாநாயகர், கவர்னர் மீது என பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி  டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள்  மற்றும் திமுக சார்பாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இந்த வழக்குகளில் ஆஜராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரபல வழக்கறிஞர்கள் கபில் சிபல், சல்மான் குர்ஷித், தவே போன்றோர் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.

ஏற்கனவே திமுக சார்பில், தமிழக அரசு பெரும்பான்மை நிரூபிக்க  கவர்னருக்கு  உத்தரவிட கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கபில்சிபல் ஆஜராகி வாதாடினார்.

இந்நிலையில்,‘ தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சார்பாக மூத்த வழக்கறிஞர்கள் சல்மான் குர்ஷித் மற்றும் துஷ்யந்த் தவே ஆகியோர் ஆஜராக உள்ளதாக கூறப்படுகின்றது.

சபாநாயகர் தனபால் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் பதவி நீக்கம் செய்தார். பதவி இழந்த 18 எம்.எல்.ஏ.க்களும் சபாநாயகர் உத்தரவை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தன.

இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற இருக்கிறது.  இந்த வழக்கு தொடர்ந்த வழக்குடன் சேர்த்து விசாரிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சார்பில் காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், மற்றும் மூத்த வழக்கறிஞர்  துஷ்யந்த் தவே ஆகியோர் ஆஜராகின்றனர்.

திமுக சார்பில் இந்த வழக்கில் மூத்த காங்கிரஸ் தலைவர் கபில்சிபில் ஆஜராகி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசு சார்பாக தமிழக தலைமை வழக்கறிஞர் மட்டுமே ஆஜராவாரா அல்லது வேறு மூத்த வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராவார்களா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

இன்றைய கோர்ட்டு விசாரணை பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. கோர்ட்டிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

திமுக மற்றும் டிடிவிக்கு ஆதரவாக காங்கிரஸ் மூத்த தலைகள் ஆஜராகி வருவது அரசியல் விமர்சகர்களுக்கு பல்வேறு யூகங்களை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே அரசியல் விமர்சகர்கள் கூறிவருவதுபோல, திமுக, டிடிவி அணியினர் மறைமுக உடன்பாடு வைத்துக்கொண்டுள்ளது உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது.

பிரபல வழக்கறிஞரான துஷ்யத் தவே ஏற்கனவே மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக சொத்துக்குவிப்பு வழக்கில் ஆஜரானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article