திருமாவேலன் - வைகோ
திருமாவேலன் – வைகோ

னந்தவிகடன் வார இதழில் “போர்வாள் அட்டக்கத்தி ஆன கதை” என்ற தலைப்பிலான கட்டுரை வெளியானது.  மூத்த பத்திரிகையாளர் திருமாவேலன் எழுதிய இந்த கட்டுரை, விஜயகாந்துடன் கூட்டணி வைத்த வைகோவின் நடவடிக்கையை விமர்சித்து எழுதப்பட்டிருந்தது.
அக்கட்டுரையின் துவக்கத்தில்   “தம்பி பிரபாகரனை தமிழ் ஈழத்தின் அதிபராக்கப் போராடிவந்த வைகோ, இன்று ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தில் நடித்த விஜயகாந்தை, தமிழ்நாட்டின் முதலமைச்சராக்கத் துடிக்க ஆரம்பித்திருக்கிறார். சயனைட் சாப்பிடுவதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை” என்று எழுதப்பட்டிருந்தது.
ஆனால் வைகோவோ, புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தபோது, “சயனைட் சாப்பிட்டு செத்துப்போய்விட்டேன் என்று எழுதப்பட்டிருக்கிறது” என்று பேசினார்.
இதையடுத்து வைகோவின் ஆதரவாளர்கள் பலர், திருமாவேலனை கடுமையாக விமர்சித்து சமூகவலைதளங்களில் எழுத ஆரம்பித்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், தான் கட்டுரை எழுதிய கோணம் குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் திருமாவேலன்.
“வைகோவின் புரிதலும் எனது விளக்கமும்!” என்ற தலைப்பிலான அந்த பதிவு:
“மக்கள் நலக்கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு ஆதரவாக வைகோ பேசிய பேச்சுகளை விமர்சித்து ஆனந்த விகடன் இதழில், ‘போர் வாள் அட்டக்கத்தி ஆன கதை’ என்ற கட்டுரை எழுதி இருந்தேன். பொதுவாழ்க்கையில் 50 ஆண்டுகள் பாரம்பர்யம் உள்ள வைகோ, விஜயகாந்தை முன்னிருத்த ஆரம்பித்து இருப்பது அவரது அரசியல் வாழ்க்கையின் முடிவு என்பது தான் அந்தக் கட்டுரையின் சாராம்சம்!
அது குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ள வைகோ, கட்டுரையில் இல்லாத வார்த்தைகளைச் சொல்லியும் எனக்கு தவறான உள்நோக்கம் கற்பித்தும் பேசி இருக்கிறார்.
”சயனைடை அவர் விழுங்கிவிட்டார்” என்று நான் எழுதி இருப்பதாகச் சொல்லும் வைகோ, ”அவரைப் பொறுத்தமட்டில் நான் செத்துப் போய்விட்டேன்” என்று அதற்கு விளக்கமும் அளித்துள்ளார்.
”சயனைட் சாப்பிடுவதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை” என்பது தான் எனது வார்த்தைகள். ”சயனைட் சாப்பிட்டு செத்துப் போய்விட்டார்” என்று நான் சொல்லவில்லை. சொல்லவும் மாட்டேன்.
வைகோவின் முடிவு அரசியல் தற்கொலை என்ற பொருளில் சொல்லப்பட்ட வார்த்தை அது!
இத்தோடு நிறுத்தாத வைகோ, ”கலைஞரை முதலமைச்சர் ஆக்க நான் பல்லக்கு தூக்கி இருந்தால் தூக்கி பாராட்டி இருப்பார். ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்கப் போயிருந்தால் வைகோவின் ராஜதந்திரம் வானை விஞ்சியது என்று சொல்லி இருப்பார்” என்று அந்தக் கட்டுரைக்கு உள்நோக்கம் கற்பித்து இருக்கிறார். தி.மு.க.வை வைகோ ஆதரிக்காத ஆத்திரம் தான் என்னை இப்படி எழுதத் தூண்டியது என்பது பச்சையான அவதூறு.
அன்புமணியின் மகள் திருமணத்துக்குச் சென்று ஸ்டாலினுடன் கைகோர்த்து வைகோ சிரித்தபோது ஆனந்த விகடன் இதழில்( 12.11.14) இதனையும் விமர்சித்து எழுதியவன் நான்.
‘சொந்த மகனை கட்சித் தலைவர் ஆக்க கருணாநிதி முடிவெடுத்துவிட்டார் என்று குற்றம் சாட்டி கட்சி ஆரம்பித்த வைகோ, அதே ஸ்டாலினுக்கு அரசியல் உத்வேகம் அளிக்க முடிவெடுத்து விட்டாரா? ….” என்றும்,
”கட்சி முழுக்க ஸ்டாலின் மயம் ஆகிவிட்டது. எனவே இந்தச் சூழ்நிலையில் தி.மு.க. கூட்டணியில் வைகோ சேர்வது, அவர் கட்சி ஆரம்பித்த நோக்கத்தையே சிதைக்கும்” என்றும் சொல்லி இருந்தேன்.
கடந்த மார்ச் மாதம், பேரறிவாளன் பிரச்னையில் கருணாநிதியும் ஜெயலலிதாவும் நடத்தும் நாடகங்களைக் கண்டித்து நான் எழுதிய கட்டுரையைப் படித்துவிட்டு, ”ஈழத்தமிழர் ஆவி தான் உங்களை இப்படி எழுத வைத்தது” சொன்ன வைகோ, இன்று என்னை தி.மு.க.வுக்கு சார்பானவனாகச் சித்தரிப்பது உள்நோக்கம் உள்ளது.
அவர் 2006ம் ஆண்டு அ.தி.மு.க. ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க முயற்சித்தபோதும் கண்டித்து எழுதினேன். கர்ணனை அழைக்கிறேன் என்று காளிமுத்து பேசியபோது ”மகாபாரதம் இருக்கட்டும் மாமி பாரதம் கேளுங்கள்” என்ற தலைப்பில் ‘தமிழ்முரசு’ நாளிதழிலில் ( 2006 பிப்ரவரி 9) அன்று எழுதினேன்.
”வைகோவும் ஜெயலலிதாவும் கூட்டு வைப்பது என்பது சந்திரிகாவும் பிரபாகரனும் கூட்டு வைப்பதற்குச் சமம்” என்று எழுதினேன். சந்திரிகாவும் பிரபாகரனும் கடைசியில் கூட்டு வைத்தார்கள் என்பதையும் தான் பார்த்தோம்.
இந்த அடிப்படையில் தான் பல்வேறு தனித்தகுதிகள் கொண்ட வைகோ, விஜயகாந்தை முன்னிலைப்படுத்துவது சரியா என்ற இழையில் தான் ஆனந்த விகடன் கட்டுரை அமைந்து இருந்தது.
அதனுடைய நோக்கம் புரியாமல், புரிய முயற்சிக்காமல் அவரை சாகடித்துவிட்டேன் என்றும் தி.மு.க.வுக்கு சார்பாக இதனைச் சொல்கிறேன் என்றும் வைகோ உள்நோக்கம் கற்பித்ததைக் கேட்ட போது வள்ளுவர் என்னை வலது கன்னத்தில் அடித்தார்.
”நன்றாற்ற லுள்ளும் தவறுண் டவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை” -என்று!
வள்ளுவனுக்கு இடது கன்னத்தையும் சேர்த்துக் காட்டுவதைத் தவிர வேறு வழியில்லை!
– ப.திருமாவேலன்” –   இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.