திருவனந்தபுரம்:

சபரிமலை பக்தர்களுக்காகவே உள்ளது. உள்நோக்கத்தோடு வந்து புனிதத் தலத்தின் அமைதியைக் குலைப்போரை அடையாளம் காணுமாறு, கேரள அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு 2 பெண்கள் சபரிமலைக்குச் சென்று தரிசனம் செய்தனர்.  மாநிலம் முழுவதும் கலவரம் மூண்டது. பாஜக மற்றும் சில அமைப்பினர் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து, சபரிமலை சிறப்பு ஆணையர் மற்றும் பதனம்திட்டா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், பிந்து மற்றும் கனகதுர்கா ஆகிய 50 வயதுக்கு குறைவான 2 பெண்கள் சபரிமலைக்கு சென்று தரிசனம் செய்ததையடுத்து, பல இடங்களில் போராட்டக்காரர்கள் வன்முறை செய்தனர்.திருவனந்தபுரத்தில் போலீஸார் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர். வன்முறையில் ஈடுப்பட்டதாக இதுவரை மாநிலம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளோம். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த பிஆர். ராமச்சந்திர மேனன் மற்றும் என். அனில் குமார் ஆகியோரைக் கொண்ட உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், சட்டம் ஒழுங்கை மாநில அரசு நிலைநாட்டாவிட்டால், வேறு பாதுகாப்பு அமைப்புகளை அழைக்க வேண்டி வரும்.
2 பெண்கள் சபரிமலைக்கு வந்ததில் ஏதும் உள்நோக்கம் இருந்தால், அதனை விசாரிப்பது அவசியம். அவர்களுக்கு வெளிநாட்டு சக்திகள் ஏதும் உதவி செய்கின்றனவா? என்பதையும் கண்டறிய வேண்டும் என்று கேரள அரசுக்கு உத்தரவிட்டனர்.