62 people own 50% wealth
லண்டன்:
பணக்காரர் மேலும் பணக்காரர் ஆவது, ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகும் என்ற நிலை தற்போது வரை தொடர்வதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளது.
ஸ்விட்சார்லாந்து தாவோஸில் நடந்த உலக பொருளாதார கருத்துக்களத்தின் ஆண்டுக் கூட்டத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு முடிவு குறித்து ‘ஆக்ஸ்ஃபேம்’ என்ற சர்வதேச அமைப்பின் நிர்வாக இய்குனர் வின்னி பியான்மா கூறியதாவது:
2010ம் ஆண்டு முதல்  62 பணக்காரர்களின் சொத்து மதிப்பு மேலும் 44 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே சமயம் 3.5 பில்லியன் ஏழைகளின் சொத்து மதிப்பு 41 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. பணக்காரர்களில் 50 சதவீதம் பேர் அமெரிக்காவை சேர்ந்தவர்கள். 17 பேர் ஐரோப்பாவை சேர்ந்தவர்கள். இதர பணக்காரர்கள் சீனா, பிரேசில், மெக்சிகோ, ஜப்பான், சவுதியை சேர்ந்தவர்கள்.
உலக மக்கள் தொகையில் உள்ள 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட மக்களின் சொத்துக்கள் இவர்களது கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சமத்துவமின்மை குறித்து உலகத் தலைவர்கள் பேசுகிறார்கள். ஆனால் தற்போது வரை இந்த நிலையில் மாற்றம் இல்லை என்பதையே இந்த ஆய்வு அறிக்கையின் முடிவு எடுத்துக் காட்டகிறது. நூறு மில்லியன் மக்களை பட்டினி போடும் இந்த நிலையை தொடர விடக்கூடாது. ஒரே இடத்தில் குவியும் வளத்தை மற்றவர்களுக்கு கொடுத்து உதவ முன் வரவேண்டும்.
தனி நபர்களின் சொத்து மதிப்பு 7.6 டிரில்லியன் டாலாராக இருக்கிறது. இவர்கள் முறையாக சொத்து வருமானத்துக்கு வரி செலுத்தியிருந்தால் ஆண்டுதோறும் அரசாங்கங்களுக்கு 190 பில்லியன் டாலர் வரியாக வர வேண்டும் என்று கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் கபிரியல் ஜக்மேன் கணக்கிட்டுள்ளார்.
அதே சமயம் ஆப்ரிக்காவில் 30 சதவீத சொத்து இழப்பு ஏற்பட்டு ஆண்டுதோறும் 14 பில்லியன் டாலர் வரி குறைந்து வருகிறது.
வரி மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு ஆப்ரிக்காவில் உள்ள 4 மில்லியன் குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து அவர்களின் உயிரை காக்க முடியும். அங்குள்ள அனைத்து பள்ளிகளுக்கும்  போதுமான ஆசிரியர்களை நியமித்து ஒவ்வொரு ஆப்ரிக்க குழந்தைகளும் கல்வி அறிவு பெறச் செய்ய முடியும்.
இந்த சமுதாயம் நல்ல முறையில் இயங்க பன்னாட்டு நிறுவனம் உரிய முறையில் வரி செலுத்தாமல், ஆளுக்கொரு நடைமுறையை பின்பற்றுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.