games

பெங்களூரு:

உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிச்சுற்று போட்டியில் ஈரானிடம் இந்திய அணி தோல்வி அடைந்தது.

வரும் 2018ம் ஆண்டு 21வது உலககோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் நடக்க இருக்கிறது.   இந்த போட்டிக்கான ஆசிய மண்டல 2–வது தகுதி சுற்றில் 40 அணிகள் கலந்து கொள்கின்றன.

அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம் பிடித்துள்ளன. இதில் இந்திய அணி ‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. மற்ற அணிகள் ஓமன், கயாம், ஈரான், துர்க்மெனிஸ்தான் ஆகியவையாகும்.

ஒவ்வொரு அணியும், தனது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் உள்நாடு மற்றும் வெளிநாட்டில் 2 முறை மோத வேண்டும். இந்த லீக் ஆட்டங்கள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடங்களை பிடிக்கும் 8 அணிகள் மற்றும் 2–வது இடத்தை பிடிக்கும் 4  அணிகள் அடுத்த தகுதி சுற்றுக்கு செல்லும்.

பெங்களூருவில் உள்ள கன்டீவாரா ஸ்டேடியத்தில் நேற்று நடந்த ‘டி’ பிரிவு லீக் ஆட்டத்தில் உலக தர வரிசையில் 155–வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, தர வரிசையில் 40–வது இடத்தில் உள்ள ஈரானுடன் மோதியது.

ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஈரான் அணி 3–0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது. ஈரான் அணி தரப்பில் சர்தார் அஸ்மோன் 29–வது நிமிடத்திலும், கேப்டன் ஆன்ட்ரானிக் தெய்மொரியன் 47–வது நிமிடத்திலும், மெக்டி தரோனி 51–வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

இந்திய அணி தொடர்ந்து சந்தித்த மூன்றாவது தோல்வி இதுவாகும். இதன் மூலம் இந்திய அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு குறைந்துவிட்டது.