புதிதாக தோன்றவிருக்கும் ஒரு கட்சி, ஆளும் அ.தி.மு.க.வுக்கு சிக்கலை ஏற்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தேர்தல் காலம் என்றாலே புதுப்புது கட்சிகள் (லெட்டர் பேட் அளவில்) தோன்றுவது சகஜம்தான். ஆனால் இப்போது கருக்கொண்டிருக்கும் ஒரு கட்சி, பெரிய கட்சிகளை பயம் கொள்ளச் செய்திருக்கிறது. குறிப்பாக, ஆளும் அ.தி.மு.க. மிரண்டு போய் நிற்கிறது.
விஷயம் இதுதான்:
தமிழகத்தின் மேற்கு மாவட்ட மக்களின் கனவுகளில் ஒன்று அவிநாசி – அத்திக்கடவு திட்டம். கடந்த அறுபது வருடங்களாக இந்தத் திட்டத்தை நிறைவேற்றக்கோரி போராடி வருகிறார்கள் இப் பகுதி மக்கள். ஒவ்வொரு தேர்தலின் போதும், முக்கிய கட்சிகள், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால்…” என்று ஆரம்பிக்கும் “வாக்குறுதி பட்டியலில்” இந்தத் திட்டம் இருக்கும். ஆனால் ஆட்சிக்கு வந்ததும் வழக்கம்போல் மறந்துவிடுவார்கள்.
மேற்கு மாவட்ட மக்களும் விடாது கருப்பாக தொடர்ந்து போராடித்தான் வந்தார்கள். அந்த சமயத்தில் எல்லாம் “உறுதி” கொடுத்து அல்லது கடுமையான நடவடிக்கை மூலம் போராட்டங்கள் அடக்கப்படும். பிறகு மறுபடி போராட்டம் தொடரும்.. மறுபடி அடங்கும்!
ஆனால் சமீபத்தில் எழுந்த போராட்டத்தை அப்படி அடக்க முடியவில்லை. எந்த ஒரு தனிப்பட்ட அமைப்பும் தூண்டுகோலாக இல்லாமல், பல தன்னார்வ அமைப்புகள், அமைப்பு சாரா பொது மக்கள் எல்லோரும் கிளர்ந்தெழுந்து அத்திக்கடவு திட்டத்துக்காக போராட ஆரம்பித்தார்கள்.
ஒரே நேரத்தில் பல இடங்களில் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என்று நடந்தன. மக்கள் தன்னெழுச்சியாக சாலைக்கு வந்து போராட்டங்களில் இறங்கினார்கள். தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று முழங்கினார்கள். அது மட்டுமல்ல.. தங்களது குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவற்றை கொண்டுவந்து சாலையில் கொட்டினார்கள், அதிகாரிகள் முன் வீசினார்கள்.
ஆரம்பத்தில் இந்த போராட்டங்களை பெரிதாக எடுத்துக்கொள்ளாத கட்சிகள், பிறகு கவனிக்க ஆரம்பித்தன. பெரும் மக்கள் திரள் போராட்டமாக மாறிவிட்டதை உணர்ந்து, பல கட்சி தலைவர்கள் போராட்ட களத்துக்கு வந்து தங்கள் ஆதரவைத் தெரிவித்தார்கள்.
ஆனால் ஆளும் அ.தி.மு.க., வழக்கம்போல இதைக் கண்டுகொள்ளாமல் இருந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் மிகத்தீவிரமாக போராட்டம் பரவ ஆரம்பித்ததும், சட்டமன்றத்தில், “இத்திட்டத்தை நிறைவேற்றுவோம்” என்று அறிவித்தார்கள்.
ஆனாலும் போராட்டக்காரர்கள், திருப்தி அடையவில்லை. “வெற்று உறுதி மொழிகளை நம்ப மாட்டோம்” என்றார்கள். அதைத் தொடர்ந்து ஆளும் அ.தி.மு.க. அரசு, அத்திக்கடவு திட்டத்துக்கு உறுதி கொடுத்தது. அதன் பிறகே போராட்டம் நிறைவடைந்தது.
இந்த அத்திக்கடவு போராட்டத்தில் ஈடுபட்ட தன்னார்வ அமைப்புகள் இணைந்து புது கட்சி துவக்கி வரும் தேர்தலில் போட்டியிடப்போகறது என்பதுதான் பெரிய கட்சிகளை எல்லாம் வயிறு கலங்க வைத்திருக்கிறது. குறிப்பாக, அ.தி.மு.க. கதிகலங்கி நிற்கிறது.
காரணம், மேற்கு மாவட்டம் என்பது அ.தி.மு.கவுக்கு ஆதரவான பகுதி. ஆகவே அத்திகடவு போராட்டக்கார்கள் தனியாக கட்சி துவங்கி போட்டியிட்டால் தங்களுக்குத்தான் அதிக சேதம் ஏற்படும் என்று அ.தி.மு.க. பதறுகிறது.
இந்த போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட சிலரிடம் பேசினோம். புது கட்சி துவங்க வேண்டிய அவசியம் என்ன என்று அவர்களிடம் கேட்டபோது, “அவிநாசி – அத்திக்கடவு திட்டம் என்பது மேற்கு மாவட்ட பகுதியின் ஜீவாதார பிரச்சினை. ஆனால் இதை இப்போது ஆளும் அ.தி.மு.க.வோ, ஏற்கெனவே ஆண்ட தி.மு.க.வோ கண்டுகொள்ளவே இல்லை. எங்களது சமீபத்திய போராட்டத்தையும்கூட இவர்கள் பொருட்படுத்தவில்லை.
திட்டத்தை செயற்படுத்துவதாகக்கூறி, வாக்குறுதி கொடுத்துவிட்டு மறந்துவிடுவார்கள் ஆகவேதான், அவிநாசி அத்திக்கடவு திட்டத்தால் பயன்பெறும் தொகுதிகளில் ஐந்து அல்லது ஆறு தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த இருக்கிறோம்.
நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம். ஏனென்றால் சமீபத்திய போராட்டத்தை எந்தவொரு கட்சியோ தனிப்பட்ட அமைப்போ முன்னெடுக்கவில்லை. மக்களே இணைந்து தன்னெழுச்சியாக நடத்திய போராட்டம்தான் இது. இந்த போராட்டம் வெற்றி பெற்றிருக்கிறது. இதற்குக் காரணம் மக்கள்தான். ஆகவே மக்களை நம்பி களத்தில் இறங்கப்போகிறோம்” என்றார்கள்.
“ஒரு குறிப்பிட்ட திட்டத்துக்காக கட்சி என்பது எந்த அளவுக்கு சரிவரும்” என்று நாம் கேட்டதற்கு, “இந்தத் திட்டத்துக்கா மட்டும் அல்ல. மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தையும் வலியுறுத்துவோம். தவிர இன்றைக்கு சுற்றுப்புற சூழலுக்கு முக்கியத்துவம் தராமல், பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழிவிட்டு நாட்டையே சீரழிக்கின்றன மத்திய மாநில அரசுகள். இதற்கு முந்தைய அரசுகளும் அப்படித்தான். இவை எல்லாவற்றுக்காகவும் குரல் கொடுப்போம், போராடுவோம்” என்கிறார்கள்.
மேலும் கட்சிக்கு, “பசுமை கட்சி” என்று பெயரிடப்போவதாகவும் தகவல். இதனால்தான் முக்கிய கட்சிகள் கிலியில் இருக்கின்றன. “ஐந்து அல்லது ஆறுதொகுதிகளில்தானே பசுமை கட்சி போட்டியிடப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.. அதிலும் வெற்றி பெறுமா என்பது தெரியாத நிலையி் ஏன் கவலைப்பட வேண்டும்” என்று பிரதான எதிர்க்கட்சியைச் சேர்ந்த மேற்குமாவட்ட பிரமுகரிடம் கேட்டோம்.
அதற்கு அவர், “பசுமை கட்சி ஆறு தொகுதிகளில் போட்டியிடுகிறது என்று வைத்துக்கொள்வோம். அதில் வெற்றி பெறாவிட்டாலும் தொகுதிக்கு இருபது ஆயிரத்தில் இருந்து மூப்பது ஆயிரம் வரை ஓட்டுக்களை வாங்கும். அதனால் பிரதான கட்சிகளின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது பசுமை கட்சி என்றாகிவிடும்” என்று பயத்துக்கான காரணத்தைத் தெரிவித்தார்.
மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஆளும் கட்சி பிரமுகர் ஒருவரிடம் பேசியபோது, “சமீபத்திய அத்திக்கடவு போராட்டத்தில் ஈடுபட்ட சிலர், கட்சி துவங்கி ஆறு தொகுதிகளில் போட்டியிடப்போவதாக கூறுகிறார்கள். அவர்களது கோரிக்கையை எங்களது அ.தி.மு.க. அரசுதான் நிறைவேற்றுவதாக உறுதி கூறியிருக்கிறது. அவர்களை அழைத்து பேசவும் அம்மா தயாராக இருக்கிறார். ஆகவே அவர்கள் தனி கட்சி, தேர்தலில் போட்டி என்பது எல்லாம் இருக்காது” என்றார்.
ஆனால் உருவாகும் முன்பே, “பசுமை கட்சி” பயமுறுத்தி இருக்கிறது என்பது உண்மையே!