வாட்ஸ்அப் தகவல்/ அர்ஜூன் சம்பத்
வாட்ஸ்அப் தகவல்/ அர்ஜூன் சம்பத்
“உடுமலையில்  தலித் இளைஞர் சங்கரை ஆணவக்கொலை செய்த குற்றவாளிகளில் முக்கியமானவர் இந்து மக்கள் கட்சியின் திண்டுக்கல் நகர செயலாளர்” என்று வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் படத்துடன் (மேலே உள்ளது) தகவல் ஒன்று பரபரப்பாக பரவி வருகிறது.
இதையடுத்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்தை தொடர்புகொண்டு கேட்டோம்.
அவர், “உடுமலை ஆணவக்கொலையில் எங்கள் கட்சி உறுப்பினர் எவருக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.  படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவர் எங்கள் அமைப்பிலேயே இல்லை. அவர் யார் என்று கூட எங்களுக்குத் தெரியாது.  பிறகு விசாரித்த போது இரண்டு வருடங்களுக்கு முன்பு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்துகொண்டவர் என்கிறார்கள். மற்றபடி அவர் எங்கள் அமைப்பின் உறுப்பினரோ அனுதாபியோ கிடையாது.   எங்கள் அமைப்பின் திண்டுக்கல் மாவட்ட, செயலாளர் தர்மா. நகர செயலாளர் ராஜகோபால்” என்றார்.
மேலும் அவர், “ஆணவக்கொலைகள் உட்பட எல்லா வன்முறைகளையும் நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். உடுமலையில் அந்த ஆணவக்கொலை நடந்த உடனே எங்கள் அமைப்பின் செயலாளர் மரணமடைந்த குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எங்கள் அமைப்பின் டிரஸ்ட் மூலம் உதவி செய்தோம்.
அம்பேத்கர் கொள்கைகளை ஏற்ற நாங்கள், தாழ்த்தப்பட்ட மக்களின் பக்கம்தான் என்றும் நிற்போம். சாதியை மறுத்து இந்துக்களாக ஒன்றுபட வேண்டும் என்பதுதான் எங்களது அடிப்படை கொள்கை.  சாதி அமைப்புகளை எல்லாம் தடை செய்ய வேண்டும்  என்று வலியுறுத்தி வருகிறோம். இதற்காக போராட்டங்களும் நடத்த இருக்கிறோம்” என்றார் அர்ஜூன் சம்பத்.