poster
சென்னை:
திமுக தலைமைக் அலுவலகம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
அ.தி.மு.க.வினர் கடைப்பிடித்து வரும் விளம்பர முறைகள், போக்குவரத்து நெருக்கடியையும் பாதசாரிகளுக்கு இடைஞ்சலையும் ஏற்படுத்தி, வெறுப்பையும், கோபத்தையும் மக்கள் மத்தியில் விதைத்து வருகின்றன.
சென்னையில் நடைபெற்ற அ.தி.மு.க.வின் பொதுக்குழுவையொட்டி, ஜெயலலிதா வசிக்கும் போயஸ் தோட்ட மாளிகை முதல், திருவான்மியூரில் நிகழ்ச்சி அரங்கம் வரை சுமார் 12 கிலோ மீட்டர் தூரம் இருந்த விளம்பரங்கள் பொதுமக்களிடம் முகச்சுளிப்பையும் முணுமுணுப்பையும் ஏற்படுத்தியது.
சாலைகளை மறிக்கும் பேனர்களில் தொடங்கிய அ.தி.மு.க.வின் விளம்பரக் கலாசாரம் ‘‘ஜெயலலிதா ஸ்டிக்கர்’’ வரை சென்றுவிட்டது.  இதை கண்டு எண்ணிக் கைகொட்டிச் சிரிக்காதார் இல்லை. இனி எந்தக் கட்சியும் அ.தி.மு.க.வினரின் விளம்பரக் கலாசாரத்தோடு போட்டி போட முடியாத அளவுக்கு அரசியலில் தலைகுனிவை உண்டாக்கிவிட்டது.
அ.தி.மு.க.விலாவது, இப்படிப்பட்ட கட்-அவுட்களை, அவர்களுடைய தலைவிக்கு மட்டுமே வைப்பதோடு நிறுத்திவிடுகிறார்கள். ஆனால் நம்முடைய கட்சியிலே (தி.மு.க.) உள்ள சிலர், தங்கள் கட்-அவுட்களை, பேனர்களை, ப்ளக்ஸ் போர்டுகளை ஆங்காங்கு வைத்துக் கொள்வதில் நாட்டம் காட்டி வருவதால், அது பொதுமக்களிடம் பெருத்த வெறுப்பைத் தான் ஒட்டு மொத்த கட்சிக்கும் உண்டாக்கி விடும்.
அதனால் தான் ஏற்கனவே ஒரு முறை தி.மு.க. தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகியோருடைய உருவபடங்களைத் தவிர வேறு யாருடைய உருவபடங்களையும், தி.மு.க. நிகழ்ச்சிகளில் விளம்பரப்படுத்திக் கொள்ளக்கூடாது என்று கூறப்பட்டது.
ஆனால் அண்மைக்காலத்தில் இந்த நோக்கம் மறைந்து, நாமும் அதுபோல விளம்பரம் செய்து கொள்ளத் தொடங்குவதால், பொதுமக்களும், பொதுவாகச் சிந்திக்கக் கூடியவர்களும் நம்மையும் அ.தி.மு.க.வோடு ஒப்பிட்டுப்பார்க்கத் தொடங்கிவிடுகிறார்கள். ‘‘அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சாகி விடும்’’ என்ற பழமொழியை யாரும் மறந்து விடக்கூடாது. எனவே அத்தகைய போக்கினை தி.மு.க.வினர் உடனடியாகத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.