எடிட்டர் கிஷோர்
விசாரணை படத்தில் சிறப்பாக எடிட்டிங் செய்ததற்காக எடிட்டர் கிஷோருக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.
ஈரம் ஆகளம், பயணம், எங்கேயும் எப்போதும், காஞ்சனா, தோனி, ஆரோகணம், பரதேசி, எதிர்நீச்சல், வானவராயன் வல்லவராயன், உதயம் என்எச் 4, நெடுஞ்சாலை, உன் சமையலறையில்  ஆகிய படங்களுக்கு எடிட்டராகப் பணியாற்றியவர் கிஷோர்.
ஏற்கெனவே ஆடுகளம் படத்துக்காக சிறந்த எடிட்டருக்கான தேசிய விருதினைப் பெற்றவர் இவர்.விசாரணை படத்திலும் இவர் பணிபுரிந்தார்.
கடந்த வருடம் மார்ச் மாதம், விசாரணை படத்தின்  படத்தொகுப்பு வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு இருந்த இவர் திடீரென மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் யாரென்றோ, அவரது பின்னணியையோ கூறாமல் சாதாரணமாக சேர்த்துவிட்டுச் சென்றுவிட்டனராம்.  அதனால் மருத்துவர்கள் முதலில் அவரை சரியாக கவனிக்கவில்லை என்றும் ஏழு மணி நேரங்களுக்குப் பிறகுதான் அவருக்கு எஆர்ஐ செய்து பார்த்தார்கள் என்று அப்போது புகார் எழுந்தது.  இதில் அவரது மூளையில் ரத்தம் கசிந்ததும், மூளை செயலிழந்துவிட்டதும் தெரிய வந்தது. இதனால் மேற்கொண்டு சிகிச்சை செய்து பயனில்லை என்றும்  அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டுவிட்டதாகக் கூறப்பட்டது.
இருந்தாலும்  கிஷோருக்கு ஒரு வாரம் வரை  செயற்கை சுவாசம் அளித்து வந்தனர். அப்போதும் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், அவர் இறந்தவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தார்கள்.
அப்போது அவருக்கு வயது 36 தான். திருமணம் நிச்சயிக்கப்படு இருந்தது.  அவர் இறந்த துயரத்தையைும் தாங்கிக்கொண்டு அவரது உடலை தானம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி கிஷோரின் உடல் உறுப்புகள் ஐந்து பேருக்கு தானம் செய்யப்பட்டது.
எந்தவித தீய பழக்கமும் இல்லாத இந்த இளைஞர், கொஞ்சம் கூட ஓய்வு எடுக்காமல் எப்போதும் வேலையிலேயே கவனமாக இருந்திருக்கிறார். அதுதான் அவரது மரணத்துக்குக் காரணமாகிவிட்டது என்றும் மருத்துவர்கள் அப்போது தெரிவித்தனர்.

சமுத்திரகனி
சமுத்திரகனி

அவருக்குத்தான் இப்போது தேசிய விருது கிடைத்துள்ளது….  அவர் கடைசியாக பணியாற்றிய விசாரணை படம் மூலம்.
இது குறித்து சமுத்திரகனியிடம் கேட்டோம். “கிஷோர் ஒரு அற்புத கலைஞன். அர்ப்பணிப்பு உணர்வுடன்  எடிட்டிங் செய்வார். அவர் பணியாற்றிய கடைசி படத்திலும் விருது பெற்றிருக்கிறார். ஆனால்..  விருது கிடைத்ததை நினைத்து மகிழ்வதா.. இல்லை அழுவதா..கிஷோர் என்றுதான் கேட்கத் தோன்றுகிறது” எனறார் நெகிழ்வாக. (இதே படத்துக்காக இவருக்கு சிறந்த துணை நடிகர் விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.)