“புது உலகின் தொலைநோக்காளர்; தென் கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்; சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை; அறியாமை, மூடநம்பிக்கை, பொருளற்ற பழக்க வழக்கங்கள், இழிவான நடவடிக்கைகள் ஆகியவற்றின் கடும் எதிரி!”
– இப்படி ஐ.நா.வின் யுனெஸ்கோவால் போற்றப்பட்ட தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள் இன்று.
“ஒழுக்கம்” என்ற பெயரில் நிலவிய பெண்ணடிமைத்தனம் உட்பட மூடத்தனங்களை/ ஒழுக்கக்கேடுகளை எதிர்த்தவர் பெரியார். ஆனால் புரிதல் இல்லாதவர்கள், “ஒழுக்கம்” என்பதற்கு பெரியார் எதிரி என்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். தங்களை பெரியாரிஸ்டுகள் என்று சொல்லிக்கொள்ளும் சிலரும் கூட அப்படி இருக்கிறார்கள்கள் என்பது வருத்தமான உண்மை.
உண்மையில், சிறந்த ஒழுக்கத்தைப் போதித்தவர்.. அப்படியே வாழ்ந்தவரும்கூட.
ஒழுக்கத்தை வலியுறுத்தும் பெரியாரின் பொன்மொழிகள் சில…
@மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு.
@மக்களின் ஒழுக்கத்தையும் மதியையும் கெடுப்பது மது.
@ பிறருக்கு தொல்லை தராத வாழ்வே ஒழுக்க வாழ்வு.
@ பக்தி என்பது தனிச் சொத்து. ஒழுக்கம் என்பது பொது சொத்து.
@ பக்தி இல்லாவிட்டால் இழப்பில்லை. ஒழுக்கம் இல்லாவிட்டால் பாழ்.
@ ஒரு நாடு சுபிட்சத்துடன் வாழ வேண்டுமானால், அந்நாட்டு மக்கள் ஒழுக்கமுள்ளவர்களாக இருத்தல் அவசியம்.
@ ஒழுக்கக் குறைவுக்கும் மூடநம்பிக்கைக்கும் எப்படிப்பட்ட கலையும் பயன்பட்டு விடக்கூடாது.
@ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.
@ மற்றவர்களிடம் பழகும் வித்தையும் ஒழுக்கத்தையும் சிறு வயதிலேயே நன்றாக ஒருவன் கற்றுக் கொண்டானானால் அவனே வாழ்க்கையில் பெரிய மனிதன் ஆவான்.
@ என்னைப் பொறுத்தமட்டில், நான் ஒழுக்கத்துடன் நடந்தால், உண்மையை ஒழிக்காமல் எதையும் நேர்மையுடன் கடைப்பிடித்தால், அதற்கு தனிசக்தி உண்டு என்பதை நம்புகிறவன்.