சென்னை

மிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  அதில், “வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனத்தால் தஞ்சை, நாகை, திருச்சி, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் என 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “நாளை முதல் 3 நாட்களுக்குத் தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழை வாய்ப்புள்ளது. அதேபோல், அடுத்த இரண்டு நாட்களுக்கு நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

சென்னை நகரில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.

இன்றும், நாளையும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்திலும் இடை இடையே 60 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும்.

வரும் 14 முதல் 16ம் தேதி வரை தெற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்திலும் இடை இடையே 60 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.