ராமநாதபுரம்: தியாகி இம்மானுவேல் சேகரன் 66வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுவதையொட்டி, ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், 2 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  இமானுவேல் சேகரன் நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்த அரசியல் கட்சியினர் வருவதால், அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

‘விடுதலைப் போராட்ட வீரர் இமானுவேல் சேகரன் 66 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (செப்டம்பர் 11) அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்திற்கு விசிக உள்பட மாநிலம்  முழுவதிலும் இருந்து பல அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என பலரும்  மரியாதை செலுத்த ராமநாதபுரம் வருகை தருகின்றனர்.  மேலும், பட்டியலினத்தை சேர்ந்த பல அமைப்புகள்,  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனம் மூலம்,  மதுரை வழியாக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு  வருகை தந்துகொண்டிருக்கின்றனர். இதனால், ராமநாதபுரம், மதுரை உள்பட பல மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

காவல் வல்துறையினர் 24 மணி நேரமும் ரோந்து பணிகள் மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை மாநகர், புறநகர் பகுதிகளிலும், பரமக்குடி பகுதிகளிலும் சோதனை சாவடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 137 பகுதிகள் பதற்றம் நிறைந்த பகுதிகளாக கண்டறியப்பட்டு அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. மரியாதை செலுத்துவதற்காக வருபவர்கள் காவல்துறையால் அனுமதிக்கப்பட்ட வழியில் மட்டுமே வந்து மரியாதை செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது….