நம் எல்லை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய இராணுவ வீர்ர்களுக்கு எதிராக ஒரு புதிய எதிரி புறப்பட்டிருக்கிறான். மழை,வெயில்,குளிர்,உறைபனியில் நின்று எதிரிகளின் ஊடுருவல் தடுத்து எல்லைகளில் தேசம் காக்கும் நம் வீரர்களை காவு வாங்கும் காலனாக காலநிலை உருவெடுத்திருக்கிறது. உலகின் மிக உயரமான போர்க்களமான சியாச்சினில், மிகப்பெரும் அச்சுறுத்தல் எதிரியின் துப்பாக்கி தோட்டாக்கள் அல்ல. நினைத்துப்பார்க்க முடியாத, மிக அபாயகரமான பருவநிலைதான்.
1984 முதல் 2015 டிசம்பர் வரை 867 ராணுவ வீர்களின் உயிர்களை எதிர்பாராத வானிலைக்குப் பலி கொடுத்திருக்கிறோம். எதிரியின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாவதை விட பனிச்சரிவில் புதைந்து போகும் நம் வீர்ர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கத் துவங்கி இருக்கிறது. சமீபத்தில் சியாச்சின் முகாமில் தங்கியிருந்த வீர்ர்களில் ஒரே நேரத்தில் 10 பேரை பனிச்சரிவுக்கு பலி கொடுத்திருக்கிறோம். அவர்களில் ஒருவரான லான்ஸ் நாயக் ஹனுமந்தப்பாவை உயிருடன் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தும் காப்பாற்றமுடியவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் 6 நாட்களிலேயே இறந்துவிட்டார்.
உலக வெப்பமயமாதலால் பருவ காலநிலையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதன் விளைவாகவே பனிப்பள்ளத்தாக்குகளிலும் அதன் இயல்புநிலை வெகுவாகவே மாறி வருகிறது. காலநிலையைக் கணிக்க முடியாத அளவுக்கு மிகப்பெரிய மாறுதல்கள் உருவாகின்றன. இதுபோன்ற எதிர்பாராத சவால்களை நம் சந்திக்க தயாராக வேண்டும் என்கிறார் சியாச்சின் பகுதியில் பணியில் இருக்கும் மூத்த ராணுவ அதிகாரி ஒருவர்.
உறைபனிக்குள் புதைந்துவிடும் ராணுவ வீரர்களின் உடல்களை தேடிக்கண்டுபிடிப்பது கூட மிகப்பெரும் சவாலாக உள்ளது. சமீபத்தில் கார்கில் மலை உச்சியின் பனிப்பாறைக்குள் அங்கு ஏற்பட்ட சிறு நிலநடுக்கத்தால் ராணுவ வீரர் கே.விஜய் குமார் புதைந்துபோனார். அவருடைய உடலை தேடிக் கண்டுபிடிக்க இரண்டு நாட்கள் பெரும் தேடுதல் வேட்டை நடைபெற்றுள்ளது. அதன்பின்னர்தான் 12 அடி ஆழத்துக்கு கீழே அவருடைய உடல் கண்டெடுக்கப்பட்ட்து.
இறந்துபோன ராணுவ வீரர் கே.விஜய் குமார் இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பணியில் இருந்தவர். இந்தியா- பாகிஸ்தான் எல்லைப்பகுதியின் உயரமான மலைப்பகுதிகளில் அதிரடிப்படை பிரிவு ஒன்று அங்கு அணி வகுத்து நிறுத்தப்பட்டுள்ளது.அதில் பணியில் இருந்தவர்தான் ராணுவ வீரர் கே.விஜய் குமார்.
ரத்தத்தை உறைய வைத்து உயிர் பறிக்கும் சியாச்சினின் எதிர்பாரா வானிலைக் கொடுமையை வேறு எங்கும் காணமுடியாது. இப்படி சியாச்சின் உறைபனிக்குள் 1984 முதல் 2015 டிசம்பர் வரை இறந்துபோன இந்திய ராணுவ வீர்ர்களின் எண்ணிக்கை 869 என்று நாடாளுமன்றத்தில் அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. 2016 இல் சியாச்சின் உறைபனி ஒரே சமயத்தில் 10 வீர்ர்களையும், அதற்கு அடுத்த சில நாள்களிலேயே 3 பேரையும் பலி வாங்கியிருக்கிறது.
மலை உச்சிகளில் எதற்கும் அஞ்சாத நம் ராணுவ வீரர்களுக்கு எதிர்பாராத காலநிலை மாற்றம்தான் தற்போது மிகப்பெரிய கொலையாளியாக உருவெடுத்துள்ளது.
ஓர் ஆண்டில் மட்டும் சாலை விபத்துகளில் 300 வீரர்களும், சுமார் 100 இராணுவ சிப்பாய்களும் தற்கொலை செய்து கொண்டு தங்கள் உயிரினை இழப்பதாக இராணுவ புள்ளி விவரம் கூறுகிறது..
2010 இல் இருந்து, இதுவரை 500 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. கடந்தாண்டு மட்டும் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல்களில் 155 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும் எண்ணிக்கையில் துணை இராணுவம் மற்றும் காவல்துறையைச் சேர்ந்தவர்களும் ஆவார்.