நெல்லை:
ஆசிரியர் தினம் நாளை கொண்டாடபடுவதை ஒட்டி பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். இதன் ஒரு பகுதியாக 9 மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மாணவ மாணவிகளுடன் காணொலி கலந்தாய்வு மூலமும் கலந்துரையாடினார்.
அவர்களில் ஒருவர், தமிழகத்தைச் சேர்ந்த விசாலினி ஆவார். இவர், திருநெல்வேலி மாவட்டம், நீதிமன்றம் அருகே உள்ள சங்கர் நகர் பகுதியைச் சேர்ந்த 15 வயது மாணவி. இவரது தந்தை கல்யாணகுமாரசாமி, தாய் சேதுராகமாலிகா.
விசாலினி, நெல்லை, லட்சுமிராமன் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். மேலும், கம்ப்யூட்டர் துறையில், ஆன்லைன் மூலம் நடத்தப்படும் சி.சி.என்.ஏ., மற்றும் ஐ.இ.எல்.டி.எஸ்., சி.சி.எஸ்.ஏ. போன்ற கடினமான தேர்வுகளைக் கூட மிக எளிதாக எழுதி வெற்றி பெற்று மிகக் குறைந்த வயதிலேயே கம்ப்யூட்டர் துறையில் சாதனை படைத்தார்.
இதனைப் பாராட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலையில் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் பிடெக் முதலாம் ஆண்டில் பயில விசாலினிக்கு அனுமதி வழங்கினர்.
மேலும், டெல்லியில் நடைபெற்ற கூகுள் கல்வியாளர் உச்சிமாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். சர்வதேச கருத்தரங்குகளிலும் பங்கேற்றார்.
இந்த நிலையில், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடியுடன் கலந்துரையாடும் மாணவர்கள் பட்டியலில் இடம் பெற்றார். மோடியிடம் விசாலினி, “நாட்டிற்கு சேவை ஆற்ற சரியான வழி என்ன” என்று கேட்டார்.
அதற்கு “ நாட்டிற்கு சேவை ஆற்ற பல வழிகள் உள்ளன. ராணுவத்தில் சேர்ந்தோ அல்லது அரசியலில் சேர்ந்து தான் சேவை ஆற்ற வேண்டும் என்பதில்லை. பட்டமும், வேலையும் மட்டும் தான் தேவை என்று எண்ணுவதை நிறுத்த வேண்டும்” என்று மோடி பதிலளித்தார்.