“விருதை திருப்பிக்கொடுத்து அரசை அவமானப்படுத்ததீர்கள்” என்று கூறிய நடிகர் கமல்ஹாசனுக்கு எதிர்ப்பு வலுத்துவருகிறது. “தீக்கதிர்” நாளிதழின் ஆசிரியர் குமரேசன் அவர்களின் கருத்து இது:
“உங்களுக்குக் கிடைச்ச விருதைத் திருப்பிக்கொடுக்கிறதும் கொடுக்காம வெச்சுக்கிறதும் உங்க விருப்பம். ஆனா அப்படித் திருப்பிக் கொடுத்து அரசாங்கத்தை அவமரியாதை செய்யமாட்டேன்னு சொல்லி அப்படித் திருப்பிக்கொடுத்தவங்களை அவமரியாதை செய்றீங்களே கமல்? விருதைத் திருப்பிக் கொடுப்பது அவமரியாதை இல்லை, இந்த விருதுகள் எல்லாம் எதன் பெயரால் வழங்கப்படுகிறதோ, அந்த தேசத்தின் மதச்சார்பின்மை, பன்முகப்பண்பாட்டு உரிமை, கருத்துச் சுதந்திரம் ஆகிய மாண்புகள் தாக்கப்படுவதுதான் இந்த தேசத்திற்கு அவமரியாதை.
எழுத்தாளர்களும் கலைஞர்களும் அறிவியலாளர்களும் முன்னாள் ராணுவ அதிகாரியும் கூட விருதுகளைத் திருப்பித்தர்றதுல உள்ள நியாயத்தை ஏத்துக்கிடுறீங்களா இல்லையா? சாப்பாட்டுக்குக் கூடதடைபோடுகிற, முற்போக்கான கருத்துச் சொன்னவர் நெஞ்சில் தோட்டாவைப் பாய்ச்சுகிற, மக்களிடையே மத ஆதிக்கவாதத்தின் அடிப்படையில் பிளவு ஏற்படுத்துகிற, கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரத்தை முடக்குகிற இன்றைய சூழல் பற்றி உங்களுக்கு ஒரு கருத்தும் இல்லையா?
உங்க படத்துககுத் தடைவிதிக்கணும்னு சிலபேர் கிளம்பினப்ப வீட்டை வித்துட்டு தெருவுல நிக்கணும்னு விஸ்வரூபம் எடுததுப் புலம்பினீங்களே, இப்ப மாட்டுக்கறி வெச்சிருந்ததா வீட்டுக்கு வெளியே இழுத்துட்டு வந்து அடிச்சுக் கொல்றது பத்தி முணுமுணுக்கக்கூட மாட்டீங்களா? விருதுகளைத் திருப்பித்தர்ற அளவுக்குப் போக வேணாம், பல எழுத்தாளர்களும் கலைஞர்களும் கண்டனக் குரல் எழுப்புறாங்களே, அவங்க கூட உங்க குரலையும் சேர்த்துக்கிடுறது பத்தி என்ன சொல்றீங்க? இல்லைன்னா, இவங்களோட எதிர்ப்பிலே நியாயம் இல்லைன்னாவது சொல்லுங்க.
உங்க படத்தைக் கிழிகிழின்னு விமர்சிச்சுட்டு, ஆனா அப்படியொரு படத்தைத் தயாரிக்கவும் வெளியிடவும் உங்களுக்கு உரிமை இருக்குன்னும் வாதிட்டவங்க உண்டு, ஞாபகம் இருக்குதுங்களா?
நாடக மேடையிலே பிரிட்டிஷ் அரசை விமர்சிச்சு வசனம் பேசிட்டு சிறைக்குப் போன, சினிமாவுல சிரிப்போட சிரிப்பா சிந்தனையைத் தூண்டிவிட்ட கலைஞர்களோட பாரம்பரியத்தைத் துண்டிச்சிறாதீங்க.
பொத்தாம் பொதுவா 1947லிருந்தே சகிப்பின்மை இருந்து வருதுன்னு சொன்னா என்ன அர்த்தம்? அதனாலதான் பாகிஸ்தான் உருவாச்சுன்னு சொன்னா என்ன அர்த்தம்? பெரும்பான்மை மதவாதிகளின் பேச்சாளர்கள் இப்படித்தான் சொல்றாங்க. அவங்க கேட்டா நான் இவங்களைச் சொன்னேன், இவங்க கேட்டா நான் அவங்களைச் சொன்னேன்னு நழுவிக்கிடறதுக்குத் தோதா வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துறீங்களே, உலக நாயகரே?
நடிகர் சங்கத் தேர்தல்ல ஜெயிச்சவுங்களும் சரி, தோத்தவங்களும் சரி சமுதாயப் பிரச்சனைகள்ல மாட்டிக்கிடாம ஒதுங்கியிருக்கிறதே பாதுகாப்புன்னு வாயைத் திறப்பதில்லை. அவங்களோடதான் உங்க அடையாளமுமா? இல்லை, மனசுல இருக்கிறதைத் தைரியமா சொல்ல முடியலை, அதுக்கேத்த சூழல் இங்கே இல்லைன்னாவது அறிவியுங்க.”