சென்னை: சென்னை பெருநகர பகுதிகளில் 210க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
எந்தெந்த நீர்நிலைகள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன என்ற விவரங்கள் வருவாய்துறையினரிடம் இல்லை. அதே நேரத்தில் எவ்வளவு நீர் நிலைகள் சென்னையில் இருக்கின்றன என்ற தகவல்களும் அவர்களிடத்தில் இல்லை.
கூடிய விரைவில் அந்த புள்ளி விவரங்கள் அனைத்தும் சேகரம் செய்யப்படும் என்று மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார். அவர் மேலும் கூறியதாவது: இந்த விஷயத்தில் மாநில அரசு ஒரு தீர்வு காண வேண்டும்.
சுற்றுப்புற பாதுகாப்பு என்ற முயற்சியில், ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட பல திட்டங்களின் கீழ் மாநகராட்சி ஏற்கனவே நீர்நிலைகளை மீட்க பணிகளை தொடங்கி இருக்கிறது. ஆனால், பொதுமக்கள் ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்து வெளியேற மறுக்கின்றனர்.
சென்னை நகரத்துக்குட்ட 15 மண்டலங்களில் கணக்கெடுக்கப்பட்டு இருக்கும் நீர்நிலைகளை விட, அதிகளவு நீர்நிலைகள் இருக்கும் என்று நம்புகிறோம். ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் நீர்நிலைகளை மீட்டு வருகிறோம். மாநில அரசு இந்த விவகாரத்தில் ஒரு முடிவெடுத்த பின்பு, ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகளை தொடங்கி விடும் என்றார்.