போபால்
மத்தியப் பிரதேச முதல்வர் மற்றும் சபாநாயகர் உள்ளிட்ட பிரமுகர்களுக்கான பான் மசாலா மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கான விலை பட்டியலை சட்டப்பேரவை கேட்டுள்ளது.
மத்தியப் பிரதேச சட்டப்பேரவை சமீபத்தில் விலைப்புள்ளிகள் கேட்டு டெண்டர் விளம்பரம் ஒன்று அளித்துள்ளது. அந்த விளம்பரத்தில் முக்கியப் பிரமுகர்களின் உபயோகத்துக்கான 65 பொருட்களுக்கான விலைகள் கேட்கப்பட்டுள்ளது. இந்தப் பொருட்கள் முதல்வர் சிவராஜ்சிங் சௌகான், சபாநாயகர் சிதாசரன் சர்மா, எதிர்க்கட்சி தலைவர் அஜய்சிங் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்காக வாங்கப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.
அந்த டெண்டர் விளம்பரத்தில் பான் பராக், டாக்டர் பிராண்ட் பினாயில், டைமண்ட் அந்துப்பூச்சி உருண்டைகள், ஆல் அவுட் கொசு விரட்டி, லக்ஸ் மற்றும் பியர்ஸ் சோப்புகள், ஊதுபத்திகள், எவரெடி பேட்டரிகள், ஹார்பிக் கழிவறை சுத்திகரிப்பு திரவம், ரூம் ஃப்ரெஷ்னர்கள், டவல்கள், கேஸ் லைட்டர்கள் உள்ளிட்ட பல பொருட்களுக்கு விலைப் பட்டியல் கேட்கப்பட்டுள்ளது. இந்த டெண்டருக்கு இதுவரை யாரும் விலைப்பட்டியல் அளிக்காததால் மறு டெண்டர் விடப்பட உள்ளது.
இது குறித்து ம.பி. சட்டப்பேரவை அலுவலக செயலாளர், “முக்கிய பிரமுகர்களின் உபயோகத்துக்க்காக இந்த பொருட்களின் விலையைக் கோரி டெண்டர் விடப்பட்டது உண்மையே. இது வரை யாரும் விலைப் பட்டியல் அளிக்காததால் மறு டெண்டர் விட உள்ளது. இந்த பட்டியலில் பான் பராக் உள்ளதா என்பது பற்றி எனக்கு தெரியாது. அரசு கேட்கும் பொருட்களை வாங்கித் தருவது மட்டுமே எனது பணி ஆகும்” என தெரிவித்துள்ளார்.