புதுடெல்லி: இந்தியப் பொருளாதாரம் மிகவும் பெரியது என்றும், அதை பிரதமர் அலுவலகத்திலிருந்து அதிகாரிகளின் வழியாக மட்டுமே கையாள முடியாது என்றும் விமர்சித்துள்ளார் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன்.

அவர் கூறியுள்ளதாவது, “இந்தியப் பொருளாதாரத்தை பிரதமர் அலுவலகத்திலிருந்து கையாள முடியாது. ஏனெனில் அது மிகவும் பெரியது. தற்போதைய நிலையில் மத்திய அரசில் பெரிய அதிகாரக் குவிப்பு நிலவுகிறது.

தலைமையிடமே அனைத்து அழுத்தமும் குவிந்துள்ளது. தலைமையிடம் நிலைத்தன்மையும் தெளிவான தொலைநோக்கும் இல்லை. எனவே, பொருளாதார வளர்ச்சியை நோக்கி இவர்களால் நாட்டை செலுத்த முடியாது.

பிரதமர் அலுவலகம் என்பது அதிகாரிகளை வைத்து செயல்படக்கூடியது. இன்றைய நிலையில் மத்திய அமைச்சர்களுக்கு அதிகாரமில்லை. அவர்கள் முடிவெடுக்கும் இடத்தில் இல்லை.

சிவில் சர்வீஸ் அதிகாரிகளைப் பொறுத்தவரை, அவர்கள் தங்களின் சொந்த முடிவுகளை எடுக்கத் தயங்குவார்கள். அவர்களிடம் பொருளாதார சீர்திருத்தத்திற்கான வலுவான யோசனைகள் கிடையாது. மோடி அரசிடம் அரசியல் தொலைநோக்கு இருப்பதைப்போல் பொருளாதார தொலைநோக்குக் கிடையாது” என்று விமர்சித்தார் ரகுராம் ராஜன்.