09-sep-srirangam-1

 

பூலோக வைகுண்டமாகவும், 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதாகவும் விளங்கும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடந்தேறியது.

இக் கோயில், ஏழு பிரகாரங்களையும், 21 கோபுரங்களையும், 54 சன்னதிகளையும் கொண்ட மிகப்பெரிய கோவிலாகும்.

srirangam_2624720h

இங்கு கடந்த 2001 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15–ந்தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது.. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது ஆகம விதி. இதன்படி மீண்டும் கும்பாபிஷேகம் செய்ய தமிழக அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கியது. மேலும் பக்தர்கள் ஒத்துழைப்புடன் 25 கோடி ரூபாய்க்கும் மேல் நிதி திரட்டப்பட்டது. தொடர்ந்து கோயிலை சீரமைக்கும் பணி நடந்தது.

மிகப்பெரிய கோவிலாக இருப்பதால் இரண்டு கட்டங்களாக கும்பாபிஷேகம் நடத்த அரசு திட்டமிட்டது..

இதையடுத்து பணிகள் முழுவதும் நிறைவடைந்த 11 கோபுரங்கள் மற்றும் 43 உபசன்னதிகளுக்கு முதல் கட்டமாக கடந்த செப்டம்பர் மாதம் 9–ந்தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தேறியது.

பின்னர் பிரதான சன்னதிகளான ரெங்கநாதர், ரெங்கநாயகி தாயார், சக்கரத்தாழ்வார், பெரிய கருடன் மற்றும் ராமானுஜர் சன்னதிகளுக்கு திருப்பணிகள் நிறைவடைந்தது. இதையடுத்து இரண்டாம் கட்ட மகா கும்பாபிஷேகம் இன்று நடந்தது.

இதற்கான யாகசாலை பூஜைகள் கடந்த 14–நம் தேதி கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் துவங்கியது. ஒன்பது ஹோம குண்டங்கள், ஐந்து மேடைகளுடன் கடந்த நான்கு நாட்களாக யாகசாலை பூஜைகள் பாஞ்சராத்ர ஆகம முறைப்படி நடந்தது.

இன்று அதிகாலை 4 மணிக்கு 8–ம் கால யாகசாலை பூஜைகள் ஆரம்பித்தன. 7.15 மணிக்கு யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து காலை 8.45 மணிக்கு மேல் 10 மணிக்குள் கோவில் ராஜகோபுரம், ரெங்கநாதர் சன்னதி தங்க விமானம், ரெங்கா ரெங்கா கோபுரம், கார்த்திகை கோபுரம், ஆரி கோபுரம், ஆரியப்படாள் வாசல் கோபுரம், வடக்கு வாசல் கோபுரங்கள் மற்றும் சன்னதிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தேறியது.

அப்போது ஒரே நேரத்தில் வேதங்கள் முழங்க கோபுர கலசங்கள் மற்றும் சன்னதிகளில் புனித நீர் ஊற்றப்பட்டது. பின்னர் அந்த புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று காலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் உள்ளூரில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும் ஸ்ரீரங்கம் வந்து குவிந்தார்கள். பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

மேலும் பல இடங்களில் எல்.இ.டி. அகன்ற திரை அமைக்கப்பட்டு கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன.

பக்தர்கள் முழு மனநிறைவோடு கும்பாபிஷேக நிகழ்வை கண்டு திரும்பினர்.