கோப்பு படம்
கோப்பு படம்

டந்த பாராளுமன்ற தேர்தலைப்போலவே வரும் சட்டமன்ற தேர்தலிலும் பலமான  பலமான கூட்டணியை அமைத்துவிட வேண்டும் என்று தலையால் தண்ணீர் குடித்தது தமிழக பாஜக.
கூட்டணியில் இருந்த ம.தி.மு.க., பாராளுமன்ற தேர்தல் முடிந்த கையோடு… பதவி ஏற்பு அன்றே பாஜக அரசை எதிர்த்து டில்லியில் போராட்டம் நடத்தியது. விலகி விலகிப்போய், தனியே கூட்டணியும் அமைத்தது.
பா.ம.கவோ, “அன்புமணிதான் முதல்வர்.. அதை ஏற்றுக்கொள்பவர் மட்டும் வரலாம்” என்று தனிக்குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், தே.மு.தி.கவைத்தான் பாஜக மிகவும் நம்பி வந்தது. தமிழக பாஜக தலைவர்கள் மட்டுமின்றி அகில இந்திய தலைவர்களும் நேர்த்திக்கடன் போல விஜயகாந்த் வீட்டுக்கும், அவரது தே.மு.தி.க. கட்சி அலுவலகத்துக்கும் சென்று கேப்டனை தரிசித்து வந்தார்கள். வேப்பிலை அடித்தது போல “தே.மு.திக.வுடன் கூட்டணி” என்ற வார்த்தைகளை ஜெபித்துக்கொண்டே இருந்தார்கள்.
ஒரே நேரத்தில் “விஜயகாந்த் எங்கள் கூட்டணியில்தான் இருக்கிறார்” என்றும், “விஜயகாந்த் எங்கள் கூட்டணியில் சேர்வார்” என்று சொல்லிவந்தது வேடிக்கையான வேதனைதான்.
ஆனால் விஜயகாந்தோ தன்னைத்தேடி வரும் அத்தனை பேரையும் மறுக்காமல் சந்தித்தார். சிரித்தார். வழியனுப்பி வைத்தார்.
இந்த நிலையில் சென்னையில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்  சட்டசபை தேர்தலில் தேமுதிக தனித்தே போட்டியிடும் என்று அறிவித்துவிட்டார் விஜயகாந்த்.
இதனால் அதிர்ந்து போய் நிற்கிறது தமிழக பாஜக.
ஆனாலும் நேற்றைய தே.மு.தி.க. கூட்டத்தில் பிரேமலதா பேசியதை கவனிக்கத்தக்கது.
அவர், “விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள் வந்து பேசலாம். அவரது தலைமையில் கூட்டணி உருவாகும்” என்று அறிவித்தார்.
இது குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “தேமுதிகவின் முடிவு எங்கள் முயற்சிக்கு கிடைத்த தோல்வி அல்ல.  அவர்களது முடிவை வரவேற்கிறோம்.  பாஜக தனித்து நின்று  234 தொகுதிகளிலும் தனது பலத்தை நிரூபிக்கும்” என்றார்.
பாஜகவின் ஊடகப் பொறுப்பாளர் எஸ்.ஆர். சேகரும், “விஜயகாந்த் வெளிப்படையாக தனது முடிவை அறிவித்து பல யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருப்பதை வரவேற்கிறோம்.   தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மோடி மட்டும்தான் கேப்டன். பாஜகவைப் பொறுத்தவரையில் அனைத்து கட்சிகளும் தனித்து நின்றே பலத்தை காட்ட வேண்டும் என்பதே நிலைப்பாடு” என்று கூறியிருக்கிறார்.
இதை வைத்துப் பார்க்கும் போது, பா.ஜ.க. தனித்து போட்டியிடும் முடிவுக்கு வந்துவிட்டது என்றே தோன்றியது. ஆனால் நேற்று இரவும் இன்று காலையும் பாஜக வட்டாரத்தில் பலவித பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன.  அக்கட்சியின் அகில இந்திய தலைவர்கள், தமிழக தலைவர்களுடன் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.
“பாராளுமன்ற தேர்தல் என்றால் பாஜக தலைமையிலான கூட்டணி என்பது சரிதான். ஆனால் சட்டமன்றத் தேர்தல் என்கிறபோது, நம்மை விட வலிமையான கட்சியின் தலைமையில் கூட்டணி அமைத்தால் என்ன தவறு? அகில இந்திய கட்சியான காங்கிரஸ், தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி வைத்திருக்கிறது. கடந்த காலத்திலும் இதே திமுக மற்றும் அதிமுக தலைமையில்தான் காங்கிரஸ் அணிவகுத்தது.
அதே போல வரும் சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. தலைமையில் தமிழக பாஜக கூட்டணி வைத்தால் தவறில்லை” என்கிற பேச்சு பாஜக தலைவர்களிடையே ஓடுகிறது.
ஏற்கெனவே, “விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக ஏற்க தயார்” என்று பாஜக கூறியதும் இங்கே கவனிக்கத்தக்கது.
ஆகவே, விடாது கருப்பாக, தே.மு.திகவுடன்  கூட்டணிக்காக தொடர்ந்து  பாஜக பேசும் என்றும், தே.மு.தி.க. தலைமையில் கூட்டணி சேரும் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.