1
 
மேடைப்பேச்சு, திராவிட கலாச்சார அரசியல் முதலானவை குறித்து ஆய்வுசெய்து கவனிக்கத்தக்க கட்டுரைகளையும் Tamil Oratory and the Dravidian Aesthetic: Democratic Practice in South India. New York: Columbia University Press. என்ற நூலையும் எழுதிய அமெரிக்க ஆய்வாளர் பெர்னார்டு பேட் காலமானார் என்ற செய்தியை இன்னொரு ஆய்வாளரான நதானியேல் ரோபர்ட்ஸின் முகநூல் பக்கத்தில் பார்த்து அதிர்ந்துபோனேன். அவரது நெருங்கிய நண்பர்களில் ஒருவரான ஆ.இரா. வேங்கடாசலபதியிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியபோது பேட் மாரடைப்பில் காலமான செய்தியை உறுதிப்படுத்தினார். “இரண்டு நாட்களுக்கு முன்பே இறந்துபோனதை இப்போதுதான் கண்டுபிடித்திருக்கிறார்கள். அவரிடமிருந்து எந்தத் தொடர்பும் கிடைக்காத நிலையில் வீட்டின் கதவை உடைத்துப்பார்த்து அவர் இறந்துபோனதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்” என சலபதி சொன்னார்.
சிகாகோ பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியைத் துவக்கிய பேட் மிச்சிகன், கொலம்பியா பல்கலைக் கழகங்களில் பத்தாண்டுகாலம் பணியாற்றிவிட்டுத் தற்போது சிங்கப்பூரில் உள்ள Yale – NUS கல்லூரியில் மானுடவியல் துறையின் தலைவராகப் பணியாற்றி வந்தார்.
தமிழகம் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த நொபுரு கராஷிமாவின் மரணத்தை அடுத்து இப்போது பெர்னார்டு பேட்டின் மரணம் நேர்ந்திருக்கிறது. இந்த வெற்றிடங்களைப் புரிந்துகொள்ளும் நிலையில்கூட தமிழ்ச் சமூகம் இல்லை எனும்போது இவற்றை இட்டுநிரப்புவது என்ற பேச்சுக்கே இடமில்லை.”