’வானிலை’ ரமணனின் அடுத்தக்களம்!

Must read

ramanan
சென்னை வானிலை மைய இயக்குநர் ரமணன் வியாழக்கிழமை தனது பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநராக பணியாற்றிய எஸ்.ஆர். ரமணன், சென்னை விவேகானந்தா கல்லூரியில் பி.எஸ்சி., இயற்பியல் முடித்து, அண்ணா பல்கலையில், எம்.எஸ்சி முடித்தார்.
பின்னர், மத்திய அரசின் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்று 1980 ஆம் ஆண்டு இந்திய வானிலை ஆய்வு மையத்தில் மூத்த உதவியாளராக பணியில் சேர்ந்தார். பின்னர் சென்னை விமான நிலையம் வானூர்தி வானிலை ஆய்வு மையத்தில் பணிபுரிந்துகொண்டே பதவி உயர்வுக்கான பல தேர்வுகளையும், சென்னை பல்கலையில், பி.எச்டி ஆய்வு பட்டம் படித்து முனைவர் பட்டம் பெற்றார். 2002 -ஆம் ஆண்டு முதல் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநராக இருந்து வரும் ரமணன் வியாழக்கிழமை பணி ஒய்வு பெற்றார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் ரமணன் கூறுகையில், தமிழகத்தில் அனைத்து தரப்பினரும் என் மீது வைத்திருக்கும் அன்பை காணும்போது மகிழ்ச்சியாக உள்ளது.
நான் பணியில் சேர்ந்தபோது இந்த துறையில் நவீன தொழில்நுட்ப கருவிகள் அந்த அளவுக்கு இல்லை. தற்போது செயற்கைகோள், ரேடார், துருவ வட்டங்கள் போன்றவற்றில் இருந்து அனுப்பப்படும் படங்கள் துல்லியமாக உள்ளன. மேலும் கணினி சார்ந்த கணிப்புகளும் மேம்பட்டுள்ளது.
அடுத்ததாக தமிழகத்தில் உள்ள கல்லூரி மாணவர்கள் இடையே வானிலை குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பேச்சுகளில் ஈடுபட உள்ளேன் என்று கூறினார்.

More articles

Latest article