jaya03_2622597a

சென்னை:

வெள்ள நிவாரண பணிகளை முழு வீச்சில் முடுக்கிவிட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா கூறியிருக்கிறார். மேலும், “எனகென்று யாரும் கிடையாது… உறவினர் கிடையாது.. எனக்கு தன்னலம் என்பது அறவே கிடையாது.. எனக்கு எல்லாமே தமிழக மக்களாகிய நீங்கள்தான், என்று உருக்கமாக பேசி, அதை ஊடகங்களுக்கு அனுப்பியிருக்கறார். அதோடு, வாட்ஸ்அப்பிலும் பரவ விட்டிருக்கிறார்.

அந்த உரை வருமாறு:

“வணக்கம், உங்கள் அன்பு சகோதரி ஜெயலலிதா பேசுகிறேன்:

கடந்த நூறு ஆண்டுகள் கண்டிராத மிகப் பெரும் தொடர் மழை ஏற்படுத்திய வெள்ளச் சேதங்களால் நீங்கள் அடைந்துள்ள துயரங்களை நினைத்து நினைத்து நான் வருந்துகிறேன். கவலை வேண்டாம். இது உங்கள் அரசு. எதையும் எதிர் கொண்டு வெல்லும் சக்தியை எனக்கு நீங்கள் அளித்திருக்கிறீர்கள். உங்களுக்காக நான், உங்களோடு எப்போதும் நான் இருக்கிறேன். விரைவில் இப் பெரும் துன்பத்திலிருந்து உங்களை மீட்டு புது மலர்ச்சியும் எழுச்சியும் அடையச் செய்வேன். இது உறுதி.

போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளையும் நிவாரணப் பணிகளையும் புணரமைப்புப் பணிகளையும் முழு வீச்சில் முடுக்கி விட்டிருக்கிறேன். அமைச்சர்களும், அரசு அலுவலர்களும், காவல் துறையினரும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினரும், முப்படையினரும், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினரும் மற்றும் தன்னார்வத் தொண்டர்களும் அயராது தோளோடு தோள் சேர்ந்து உங்களுடன் அயராது உழைத்தார்கள்.

உங்களுக்கு வரும் துன்பங்களையெல்லாம் நானே சுமக்கிறேன். எனக்கென்று தனி வாழ்க்கைக் கிடையாது. எனக்கென்று உறவினர் கிடையாது. எனக்குச் சுயநலம் அறவே கிடையாது. எனக்கு எல்லாமும் நீங்கள்தான். என் இல்லமும் உள்ளமும் தமிழகம்தான்.

என் பெற்றோர் வைத்த ஜெயலலிதா என்ற பெயரை மறந்து போகும் அளவுக்கு, நீங்கள் அழைக்கின்ற அம்மா என்கின்ற ஒரு சொல்லுக்காகவே என் வாழ்நாட்களை உங்களுக்காக அற்பணித்து உழைத்துக் கொண்டிருக்கிறேன்.

இந்த அரசு இயற்கைப் பேரிடர்களை வெற்றி கொள்வதில் எப்போதும் பெயர் பெற்ற அரசு என்பதை மீண்டும் ஒரு முறை நிலை நாட்டுவேன். எத்துயர் வரினும் அதையும் இத்தாயின் கரங்கள் துடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருங்கள். நன்றி!” -இவ்வாறு  அந்த உரையில் பேசியிருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா.

சில மாதங்களுக்கு முன், தமிழகம் முழுதும் மதுவுக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்க ஆரம்பித்தார்கள். பல இடங்களில் பல்வேறு அமைப்புகளும், தன்னிச்சையாக மக்களும் மதுவிலுக்கு கூறி போராட்டம் நடத்தினார்கள். ஆனால் அது குறித்து அப்போது ஜெயலலிதா எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை.  மேலும் மதுவிலக்கு துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், “மதுவிலக்கு சாத்தியமே இல்லை” என்று சட்டசபையிலேயே அறிவித்தார்.

ஆனால் தற்போது தமிழகத்தில் வெள்ள சேதம் ஏற்பட்டுள்ள நேரத்தில் ஜெயலலிதா உருக்கமான அறிக்கை விட்டதோடு, அதை ஒலிவடிவத்திலும் பரப்பி வருவது குறிப்பிடத்தக்கது. வெள்ள சமயத்தில் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை, வெள்ள நிவாரணத்திலும் திறம்பட செயல்படவில்லை என மக்கள் கொதிப்பில் இருப்பதை உணர்ந்தே ஜெயலலிதா உருக்கமான பேச்சு மற்றும் அறிக்கையை வெளியிட்டிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.