1
மிழகத்தைப் பொறுத்தவரை பிரிக்க முடியாதது எது என்று கேட்டால், திரைத்துறையையும், அரசியலையும் என்று பிறந்த குழந்தைகூட சொல்லிவிடும்.  அதுவம் விஜயகாந்த் தலையெடுத்ததில் இருந்து, அரசியல் மேடைகள் ஒவ்வொன்றிலும் அவரது திரைப்பட அனுபவங்கள் கொட்டுகின்றன. மூத்த தலைவர்கள் அதை ஆர்வத்தோடு (!) கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
ம.ந.கூட்டணி, தே.மு.தி.க. கூட்டணியான போதும், “படப்பிடிப்பிலே, வசனம் ஒருத்தர் சொல்லிக்கொடுத்துக்கிட்டே இருப்பாங்க.. அதை காதில வாங்கிக்கிட்டு பக்கத்துல என்ன நடக்குதுன்னு பார்த்துகிட்டே இருப்பேன்” என்று விஜயகாந்த் தனது அனுபவ முத்துக்களில் ஒன்றை உதிர்க்க.. வைகோ, முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன், திருமாவளவன் எல்லோரும் கவனத்துடன் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
அதே போல இன்னொரு திரை அனுபவத்தை விஜயகாந்த் உதிர்க்க அது சர்ச்சை ஆகியிருக்கிறது.
“பா.ம.க. ராமதாஸுக்கு ரஜினிதான் பயப்படுவார்.. நான் பயப்படமாட்டேன். நான் நடித்த  கஜேந்திரா படத்தில் ஒரு பாட்டை நீக்கச் சொல்லி ராமதாஸ் மிரட்டினார். ஆனால் நான் ஒப்புக்கொள்ளவில்லை” என்று விஜயகாந்த் சொல்ல.. அதுதான் கேள்விகளை எழுப்பி இருக்கிறது.
“இப்போது இப்படி பேசுகிறார் விஜயகாந்த். ஆனால், கஜேந்திரா படம் வெளியானபோது, விஜயகாந்த் சார்பாக, அந்த படத்தின் தயாரிப்பாளர் ராமதாஸிடம் மன்னிப்பு கேட்டார். அதனாலேயே அந்தப்படம் வெளியாக முடிந்தது” என்கிறார்கள் கோடம்பாக்கத்தினர்.
கஜேந்திரா விவகாரம் தலை தூக்கியது  2004ம் ஆண்டு. அப்போது வடக்கு மாவட்டத்தில் ஆக்டிவாக இருந்த விநியோகஸ்தர்கள் சிலருடம் பேசினோம்
அவர்கள் சொன்ன தகவல்கள்:
“கள்ளக்குறிச்சியில் நடந்த  தனது ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த ஒருவரின் திருமண விழாவில் தலைமையேற்று பேசினார் விஜயகாந்த். அந்த பேச்சுதான், டாக்டர் ராமதாஸுக்கும் அவருக்கும் பெரும் மோதலை ஏற்படுத்த காரணமாக அமைந்தது.
கஜேந்திரா படம் வெளியாக இருந்த நேரம். அந்த திருமண விழாவில் பேசிய விஜயகாந்த் பா.மக.வையும், ராமதாஸையும் கடுமையாக தாக்கிப் பேசினார். “சாதியை அடிப்படையாக  வைத்து, ராமதாஸ் சுயநல அரசியல் செய்கிரார். அவரை அரசியலைவிட்டே அகற்ற வேண்டும்” என்றெல்லாம் காட்டமாக பேசினார் விஜயகாந்த்.
இந்த பேச்சு பரபரப்பான செய்தியாக அடிட, வார இதழ் ஒன்று இது குறித்து விஜகாந்திடம் சில கேள்விகளைக் கேட்டது. அப்போதும் பா.ம.க.வை திட்டித் தீர்த்தார் விஜகாந்த்.
இதையடுத்து ராமதாஸ் தரப்பு கொதித்துப்போனது. “விஜயகாந்த் நடித்து வெளிவர இருக்கும் கஜேந்திரா திரைப்படம் வட மாவட்டங்களில் ரிலீஸ் ஆகவே கூடாது” என்று உத்தரவிடப்பட்டது.
அதற்குமுன்னதாக, பாபா திரைப்படம், பாமகவினரால் வடமாவட்டத்தில் பந்தாடப்பட்டது தெரிந்த கதை. ஆகவே கஜேந்திராவின் கதி என்ன ஆகுமோ என்று பயந்தார், அப் படத்தின் தயாரிப்பாளர் துரை.
அதே போல ஆனது. அதாவது படம் தணிக்கைக்குபோய், சான்றிதழ் பெற்று  விநியோகஸ்தர்களுக்கு அளிக்கப்பட்டது. அவர்களும் திரையரங்கு உரிமையாளர்களிடம் படத்தின் பிரதிகளைக் கொடுத்துவிட்டார்கள். ஆனால் திரையரங்குகளில்.. அதாவது வடமாவட்ட திரையரங்குகளில் படம் வெளியாகவில்லை.
காரணம், “ கஜேந்திரா படத்தை வெளியிட விடமாட்டோம். அப்படத்தை வெளியிடும் தியேட்டர்களை அடித்து உடைப்போம். தீ வைத்து கொளுத்துவோம்” என்றெல்லாம் பா.ம.க.வினர் சிலர் ஆவேசமாக பேசினர்.
முன்பே கூறியது போல, ஏற்கெனவே பாபா படத்துக்கு நடந்த கதியை நினைத்து இந்த கஜேந்திராவை திரையிட பயந்தார்கள் உரிமையாளர்கள்.
அப்போது, தயாரிப்பாளர் துரை தரப்பில் விஜயகாந்தை விமர்சித்து பேசப்பட்டது:
“பாபா பட விவகாரத்தில் பா.ம.கவினர் மீதுதான் தவறு. வேண்டுமென்றே ரஜினியை எதிர்த்து அந்த படத்துக்கு இடையூறு செய்தார்கள்.  அந்த படம் வெளியான திரையரங்குகளை அடித்து நொறுக்கினார்கள்.  அந்த படத்தின் ரீல் பெட்டியை தூக்கிக்கொண்டு ஓடினார்கள். இருந்தாலும் ரஜினி நிதானம் காத்தார். “படத்துக்கு இடையூறு செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று மட்டுமே கூறினார்.
தவிர அந்ததிரைப்படத்தை தயாரித்தவரே ரஜினிதான். ஆகவே அந்த படத்தை வட மாவட்டங்களில் விநியோகித்தவர்களுக்கு உரிய நட்ட ஈட்டையும் அவர் கொடுத்தார்.
ஆனால் கஜந்திரா விவகாரம் வேறு. விஜயகாந்த் வேண்டுமென்றே ராமதாஸை சீண்டினார். கஜேந்திரா படம் அவரது சொந்த படமாக இருந்தால் இப்படி செய்திருப்பாரா.. “ என்றெல்லாம் விமர்சனம் எழுந்தது.
அது மட்டுமல்ல… தான் நடித்த கஜேந்திரா படத்துக்கு பா.ம.கவினரால் சிக்கல் என்றவுடன் விஜயகாந்த் ஒதுங்கிக்கொண்டுவிட்டார் என்றும் தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டது.
இந்த நிலையில் கஜேந்திரா படத்தின் தயாரிப்பாளர் துரை, விஜயகாந்தை சந்தித்து தனது நிலையை விளக்கினார். “உங்களால்தான் பிரச்சினை. ஆகவே ராமதாஸிடம் சுமுகமாக பேசி, பிரச்சினையை தீருங்கள்” என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
2
ஆரம்பத்தில் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை விஜயகாந்த். பிறகு, “நீங்கள் நடித்த படம் வட மாவட்டங்களில் வெளியாகவில்லை என்றால் அது உங்களுக்குத்தான் மரியாதைக்குறைவு. உங்கள் திரையுலக எதிர்காலத்தை பாதிக்கும்” என்று சொல்லப்பட.. விஜயகாந்த் இறங்கிவந்தார்.
அதே நேரம், தான் போய் ராமதாஸிடம் பேச முடியாது. தனது சார்பாக தயாரிப்பாளர் துரை போய் பேசட்டும் என்றார்.
இதையடுத்து  ராமதாஸை அவரது தைலாபுரம் வீட்டிற்கு சென்று சந்தித்தார் தயாரிப்பாளர் துரை. தனது நிலையைச் சொல்லி மன்றாடினார். இதையடுத்து, “கஜேந்திரா படத்தை திரையிடலாம். பா.ம.க.. ஏதும் பிரச்சினை செய்யாது” என்று உறுதி அளித்தார் ராமதாஸ்.
இந்த விசயத்தை துரை அப்போது அறிக்கையாகவே வெளியிட்டார்.
அதன் பிறகுதான் படம் வெளியானது. பாமகவினராலும் பிரச்சினை ஏதும் ஏற்படவில்லை.
ஆனால் அந்த சமயத்தில்  உடுமலையில் நடந்த ரசிகர்மன்ற சந்திப்பில் விஜயகாந்த் கலந்துகொண்டார்.
அப்போது அவர், “கஜேந்திரா படத்தை நடித்து முடித்து கொடுத்துவிட்டேன். எப்போது ரிலீஸ் என்பதை தயாரிப்பாளர்தான் முடிவு செய்ய வேண்டும்” என்றார்.. மீசையில் மண் ஒட்டவில்லை என்பதைப்போல.
இதுதான் நடந்த உண்மை”  – என்றார்கள் நாம் சந்தித்த மூத்த விநியோகஸ்தர்கள்!