கோப்பு படம்
கோப்பு படம்

12  ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும், மாசிமக (மகாமக) விழாவின் வரும் மாசி முதல் நாளான பிப். 13-ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பிப். 22-ல் தீர்த்தவாரி நடைபெறுகிறது.
10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், நாற்பது  லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள்  பேருக்கு மேல் மகாமக குளத்தில் நீராடுவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. இதற்காக, மகாமகக் குளத்தை சீரமைக்கும் பணி நடந்தது..
6.2 ஏக்கர் பரப்பளவு கொண்ட மகாமகக் குளத்தின் படித் துறையைச் சுற்றிலும் புதிய கருங்கல் தளம் அமைக்கப்பட்டது. மேலும் 18 அடுக்கு கருங்கல் படிக்கட்டுகளில் படிந்திருந்த பாசிகள் மற்றும் அழுக்குகள் நீக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டன.
குளத்தின் தரைப் பகுதியில், சுமார் இரண்டு அடி அளவுக்கு படிந்திருந்த பழைய மண், மணல், சகதி அகற்றப்பட்டு, அதே அளவுக்கு புதிய மணல் நிரப்பப்பட்டது.
தற்போது புதிய தண்ணீர் நிரப்புவதற்காக குளம் தயார் நிலையில்  இருக்கிறது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி குளத்தில்  2 அடி உயரத்துக்கு மட்டுமே தண்ணீர் நிரப்படும்.  இதன் கொள்ளளவு 12 மில்லியன் லிட்டர் ஆகும்.
இந்த நீர், அரசலாற்றில் இருந்து வருகிறது.  நீரில் குளோரின் கலக் கப்பட்டு விநாடிக்கு 75 லிட்டர் வீதம் தண்ணீர் குளத்தின் உள்ளே வரும்.
மகாமக தீர்த்தவாரி பிப்ரவரி 22 அன்று நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை நடக்கும்.  அந்த நேரத்தில் 20 ஆயிரம் பேர்வரை  குளத்தில் இருக்கலாம்.  பக்தர்கள் மீது புனிதநீரை தெளிப்பதற்காக ஐந்து வரிசை சுழலும் தெளிப்பான்கள் (ஸ்பிரிங்ளர்) அமைக்கப்பட்டு இருக்கின்றன.
தற்போது தயார் நிலையில்
தற்போது தயார் நிலையில்

மகாமகக் குளத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, காவிரி உள்ளிட்ட 20 புனித நதிகள் என அழைக்கப்படும் தீர்த்தக் கிணறு கள் உள்ளன. பாதுகாப்பு கருதி, இந்தக் கிணறுகளைச் சுற்றிலும் போலீஸார் நிறுத்தப்பட்டு, பக்தர் கள் மீது புனிதநீர் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பணிகள் அனைத்தும் முடிந்து தயார் நிலையில் உள்ள மகாமகக் குளத்தில், பிப்ரவரி 5-ம் தேதி முதல் அரசலாற்றில் இருந்து வரும் தண்ணீரை நிரப்பும் பணி தொடங்க வுள்ளது என பொதுப்பணித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
காவிரியில் தற்காலிக தடுப்பணை
மகாமகக் குளத்துக்குத் தண்ணீர் வருவதற்காக அரசலாற்றில் சாக்கோட்டை கதவணை மூடப்பட்டு, 8 அடி உயரத்துக்குத் தண்ணீர் தேக்கப்படும். இதேபோல, காவிரி ஆற்றின் சக்கரப் படித்துறை, பகவத் படித்துறையில் புனித நீராட வசதியாக, அரசு ஆண்கள் கல்லூரி அருகில் மணல் மூட்டைகளைக் கொண்டு தற்காலிகத் தடுப்பணை அமைத்து, அதில் தண்ணீரைத் தேக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஆர்கானிக் எல்இடி விளக்குகள்
மகாமகக் குளத்தின் மையத்தில் உள்ள நீராழி மண்டபம் சீரமைக்கப்பட்டு, அதற்கு ஒளியூட்டுவதற்காக தானியங்கி முறையிலான இயற்கை ஒளி உமிழ் விளக்குகளும் (ஆர்கானிக் எல்இடி), அதற்கு மின்சாரம் வழங்க சோலார் தகடுகளும் பொருத்தப்பட்டுள்ளன. குளத்தின் உள்ளே மின்சார ஒயர்கள் கொண்டு செல்லக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.